Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெய்வேலியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை நகை கடன்களுக்கு ரிசர்வ் வங்கி வகுத்துள்ள புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும்

*குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூர் : நகை கடன்களுக்கு ரிசர்வ் வங்கி வகுத்துள்ள புதிய விதிகளை திரும்ப பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறை கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். வேளாண்மை துறை இணை இயக்குனர் லட்சுமி காந்தன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் அருண், கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் இளஞ்செல்வி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து கடலூர் மாவட்டம் முழுவதிலிருந்தும் வந்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனுக்களாக அளித்தனர். மேலும் சிலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். அதன்

விவரம் வருமாறு:குறிஞ்சிப்பாடி குமரகுரு: வேளாண்மை துறையில் இருந்து விவசாயிகளுக்கு விதை உற்பத்தி மானியம் மற்றும் விற்பனை மானியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தனியாரை விட வேளாண்மை துறையில் விதைகளின் விலை அதிகமாக உள்ளது. எனவே உற்பத்தி மானியம் மற்றும் விற்பனை மானியத்தை விவசாயிகளுக்கு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிஞ்சிப்பாடி வட்டம் கருப்பஞ்சாவடி பகுதியில் காட்டுப் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது.

இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது பேசிய வனத்துறை அதிகாரி இதுகுறித்து வனவர்களுக்கு உரிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. காடுகளை விட்டு 3 கிலோ மீட்டர் தாண்டி வந்தால் காட்டு பன்றிகளை சுட்டு பிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

பண்ருட்டி தேவநாதன்: வங்கிகளில் வழங்கப்படும் நகை கடன்களில் விவசாயிகளுக்கு 3 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நகை கடன் குறித்து ரிசர்வ் வங்கி வகுத்துள்ள விதிகளை வாபஸ் பெற வேண்டும். என்றார்.

பூவாலை தமிழ் வளவன்: புவனகிரி வட்டாரத்தில் 200 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள 200 மீட்டர் வடிகால் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. வருவாய் துறை மூலம் அளவீடு செய்து அந்த வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டும்.

பூவாலை கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு குறைந்த திறன் கொண்ட மின்மாற்றி உள்ளதால் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அதிக திறன் கொண்ட மின்மாற்றி அமைத்து தர வேண்டும்.

புதுகூரைப்பேட்டை கலியபெருமாள்: முந்திரி பழம் மற்றும் முந்திரிக்கொட்டை பிரிக்கும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க வேண்டும். மானாவாரி நிலத்திற்கு உழவு மானியம் ஏக்கருக்கு ரூ.1000 வழங்க வேண்டும். காய்கறி தோட்டம் உள்ள விவசாயிகளுக்கு மானியத்தில் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் வழங்க வேண்டும்.

காவாளக்குடி முருகானந்தன்: சேத்தியாத்தோப்பு கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க மறுக்கிறார்கள். கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் மின்னழுத்த குறைபாடு ஏற்படுகிறது. எனவே மின்னழுத்த குறைபாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வெளியேற்றும் கழிவு நீரில் அரசு அனுமதித்துள்ள அளவைவிட 115% பாதரசம் அதிக அளவில் கலந்துள்ளது. மனித உயிர்களுக்கும், கால்நடைகளுக்கும், பயிர்களுக்கும் கேடு விளைவிக்கக் கூடியது.

எனவே என்எல்சி நிர்வாகம் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். விவசாயிகள் சங்க முன்னாள் மாநில துணைச் செயலாளர் மாதவன்: ஒன்றிய அரசு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.69 மட்டும் விலையை உயர்த்தி உள்ளது.

விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய விலை ரூ.3135. ஆனால் ஒன்றிய அரசு ரூ.2369 மட்டுமே வழங்கி உள்ளது. உற்பத்தி செலவை முறையாக கணக்கிட்டு விலையை அறிவிக்க வேண்டும். நகைக்கடன் வாங்க புதிய விதிகளை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா திரும்ப பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீராணம் ஏரி, வெல்லிங்டன் ஏரியை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிப்காட் ரசாயன தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சுற்றுப்புற மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. பயிர் பாதிப்புகள் குறித்து முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரன்: ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மிகப்பெரிய வருவாய் ஈட்டக்கூடிய அளவில் இருக்கிறது. அதில் சமூக பொறுப்புணர்வு நிதி நாடு முழுவதும் செலவிடப்படுகிறது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் வசிக்கக்கூடிய மக்கள் மற்றும் அண்டை மாவட்ட மக்கள் மிகப்பெரிய அளவில் புற்றுநோய் மற்றும் பல நோயால் பாதித்து வருகிறார்கள்.

பாதரச அளவு அதிகமாவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் அதிக நிதி இருக்கக்கூடிய நெய்வேலி நிறுவனத்தின் வளாகத்தில் ஒன்றிய அரசினுடைய எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். என்றார்.இதையடுத்து ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.