அடுத்த மாதம் அபுதாபியில் ஐபிஎல் மினி ஏலம்
அபுதாபி: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் அணிக்கான மினி ஏலம் வரும் டிசம்பரில் அபுதாபியில் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான மினி ஏலத்தை அபுதாபியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் டிசம்பர் 14 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் 15 அல்லது 16 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெறும் எனத் தெரிகிறது. ஐபிஎல் ஏலம் இந்தியாவுக்கு வெளியே நடப்பது இது தொடர்ந்து மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னர் 2023 ஆம் ஆண்டு துபாயிலும், 2024 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலும் ஏலம் நடைபெற்றது.
ஆஷஸ் தொடர் உள்ளிட்ட பிற பணிகளில் இருக்கும் வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் மற்றும் ஒளிபரப்புக் குழுவினர் அபுதாபியில் எளிதாகப் பங்கேற்க வசதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக வீரர்களைத் தக்கவைப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 15 ஆகும். இந்த கெடுவுக்கு முன்னதாகவே, ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் பரபரப்பான வர்த்தகம் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மினி ஏலத்திற்கு முன்பே சஞ்சு சாம்சன் - ஜடேஜா அணிமாறுவது குறித்து பரவும் தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.