Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அடுத்த இடி

இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி விலையை மீண்டும் கூட்டி அதிர்ச்சியளித்திருக்கிறது ஒன்றிய அரசு. எல்பிஜி விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக, பணவீக்கம் அதிகரிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறையும். எல்பிஜி விலை இறக்குமதி சம விலை (இம்போர்ட் பேரிட்டி பிரைஸ்) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஒரு நாடு இறக்குமதி செய்யும் எல்பிஜி விலையை அடிப்படையாகக் கொண்டு ஐபிபி அளவீடுகள் தீர்மானிக்கப்படும்.

இந்தியா அதிகளவில் எரிவாயுவை வாங்கும் நிறுவனத்தின் எல்பிஜி விலை, எப்ஓபி விலை, கடல் சரக்கு போக்குவரத்துச் செலவுகள், காப்பீடு தொகை, சுங்க வரி, துறைமுகச் செலவுகள் ஆகியவற்றைச் சேர்த்து ஐபிபி விலை தீர்மானிக்கப்படும். இந்த ஐபிபி விலை பொதுவாகவே டாலரில் தான் இருக்கும், இதை இந்திய ரூபாய்க்கு மாற்றி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை விலையை ஒரு மாதத்தின் துவக்கத்தில் தீர்மானிக்கும். விற்பனைக்கு வரும் போது ஜிஎஸ்டி, கலால் வரி, சரக்குக் கட்டணம் ஆகியவற்றைச் சேர்த்து விலை மாறுபடுகிறது.

இதன் அடிப்படையில் தான் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் எல்பிஜி சிலிண்டருக்கான விலை ரீசெட் செய்யப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 12 மானிய சிலிண்டர்கள் பெறும் உரிமை உள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் ஏற்கனவே சொல்லொனாத் துயரில் தவிக்கும் நிலையில் நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு ரூ.29 அதிகரித்து அடுத்த இடியை இறக்கியுள்ளது. டெலிவரி ஊழியருக்கு ரூ.50 வரை கொடுக்க வேண்டியதால் சிலிண்டர் விலை ரூ.ஆயிரத்தை தாண்டியது.

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் காரணமாக கடந்த சில மாதங்களாக வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. போர் தொடங்கியது முதல் காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஜூன் மாதத்தின் முதல் தேதியில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.46 வரை அதிகரிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் ரூ.3,283 ஆக அதிகரித்தது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டரை பொறுத்தவரை கடந்த மார்ச் 7ம் தேதி ரூ.60 உயர்த்தப்பட்டது.

அதன்படி டெல்லியில் ரூ.913, மும்பையில் ரூ.912.50, கொல்கத்தாவில் ரூ.939, சென்னையில் ரூ.928.50, சேலத்தில் ரூ.946.50 என விநியோகம் செய்யப்பட்டது. கடந்த மாதம் விலை உயர்த்தப்படவில்லை. இந்த மாதம் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் திடீரென உயர்த்தி உள்ளன. நாடு முழுவதும் ரூ.29 விலை உயர்ந்து இன்று அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சென்னையில் ரூ.29 உயர்ந்து ரூ.928.50 ல் இருந்து ரூ.957.50ஆக உயர்ந்துள்ளது.

டெலிவரி ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.30 முதல் ரூ.50வரை கொடுக்க வேண்டி உள்ளது. கிராமப்புறங்களில் டெலிவரி ஊழியர்கள் 100 ரூபாய் வரை அதிகம் வாங்குகின்றனர். இதனால் சிலிண்டர் விலை மீண்டும் ஆயிரத்தை தாண்டி இருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த 3 மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.89 உயர்ந்துள்ளது. எப்படி ஊதினாலும் தனது காதில் ஏற்றிக் கொள்ளாத செவிட்டு அரசிற்கு தற்போதைய மக்களின் புலம்பல் மட்டும் கேட்டுவிடவா போகிறது?. இதற்கான விலையை எல்லாம் அவர்கள் மொத்தமாக கொடுக்கும் காலம் விரைவில் வரும்.