Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அடுத்த அதிரடி

ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 73 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பாக இந்த வழக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வக்பு சட்டத்தின் மீதான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. வக்பு வாரிய சட்டத்திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்தும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. வக்பு வாரிய சட்டத்தின்படி புதிய நியமனங்கள் மேற்கொள்ளவும் தடை விதித்தது.

வக்பு வாரியம் தொடர்பான சொத்து விவகாரங்களில் தற்போதைய நிலை எதுவோ, அதுவே அடுத்த ஒரு வாரத்துக்கும் தொடர வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஆகும். அதிரடி காட்டிய உச்சநீதிமன்றத்தின் முன்பு ஒன்றிய அரசு சரண் அடைந்தது. அதாவது, இந்த வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் கடுமை காட்டுகிறது என்றும், வழக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க ஒரு வார கால அவகாசமாவது கட்டாயம் தர வேண்டும் என்றும் ஒன்றிய அரசு கெஞ்சியது. இது, உச்சநீதிமன்ற வரலாற்றில் என்றும் நிகழாத ஒரு வினோதம் ஆகும்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் வரவேற்றுள்ளன. ``பாதிக்கப்பட்டோரின் பக்கம் நிற்பதே சமூக நீதி’’ என்பதை கொள்கை அடிப்படையாக கொண்ட காங்கிரஸ் பேரியக்கம், இந்த தீர்ப்பை மனதார வரவேற்கிறது என காங்கிரஸ் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தர்பார் காட்டும் ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றத்திடம் குட்டு வாங்குவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பாக, நீதித்துறையில் உயர் பதவிகளில் ஆட்கள் நியமனம் தொடர்பான (கொலீஜியம்) ஏற்கனவே உச்சநீதிமன்றத்திடம் ஒன்றிய அரசு குட்டு வாங்கியது.

அதன்பின், சமீபத்தில், மாநில அரசின் ஆளுநர்களால் பரிந்துரைக்கப்படும் மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் முடிவெடுக்க 3 மாத காலக்கெடுவை நிர்ணயித்து, அதன்வாயிலாகவும் உச்சநீதிமன்றத்திடம் ஒன்றிய அரசு குட்டு வாங்கியது. அந்த வகையில் தற்போது, வக்பு வாரிய சட்டத்திருத்த விவகாரத்திலும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை அழுத்தமாக பதிவுசெய்துள்ளது. நாடே வரவேற்கும் இந்த தீர்ப்பு ஒரு சிலருக்கு மட்டும் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

அதன் விளைவாக, இந்திய குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தன்கர், ``சூப்பர் பார்லிமெண்டாக செயல்படும் நீதிபதிகள் எங்களிடம் உள்ளனர். நாட்டின் சட்டம் அவர்களுக்கு பொருந்தாததால், அவர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை’’ என சாடியுள்ளார். சுதந்திரமான நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக ஒன்றிய பா.ஜ ஆட்சியில் பல முன்னெடுப்புகள் நடந்துள்ளன. 2014ம் ஆண்டு ஒன்றியத்தில் ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்து, நீதித்துறையை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் பதுமையாக மாற்றும் முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டு வருகிறது.

நீதித்துறையுடன் மோதல் போக்கை உருவாக்கிய ஒன்றிய அரசின் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, தனது பதவியை இழந்தது பலருக்கு ஞாபகம் இருக்காது. நீதித்துறைக்கு எதிராக, எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், அதை தவிடு பொடியாக்கி விட்டு, பெரும்பான்மை மக்களின் மனநிலையை பிரதிபலித்துள்ளது உச்சநீதிமன்றம். இது, எதை உணர்த்துகிறது என்றால், இந்திய ஜனநாயக நாட்டில் எத்தனை சர்வாதிகாரிகள் வந்தாலும், இறுதியாக வெல்வது ஜனநாயகம் மட்டுமே என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. வெல்க ஜனநாயகம்.