Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் புதிய டைடல் பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

சென்னை: தமிழ்நாட்டின் வடபகுதியில் உள்ள நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்கத்துடன் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், 330 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான, நவீன தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டட மேலாண்மை வசதிகள், சிசிடிவி கேமரா வசதிகள், 24X7 பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 6,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையிலும் பசுமை கட்டிடம் வழிமுறைகளின் படியும் கட்டப்பட்டுள்ளது.புதிய டைடல் பூங்கா மூலம் தமிழ்நாட்டின் வடபகுதியை சேர்ந்த குறிப்பாக திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவர். திறப்பு விழாவின்போது, பல்வேறு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பூங்காவில் தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளையும் முதல்வர் வழங்க உள்ளார்.

தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் துல்லிய உற்பத்தி பெருங்குழுமத்தால் முதற்கட்டமாக ரூ.18.18 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தையும் திறந்து வைக்கிறார். இந்த பெருங்குழும திட்டத்தின் முதல் பகுதியாக ரூ.18.18 கோடி மதிப்பீட்டில் ரூ.13.33 கோடி மானியத்துடன் வடிவமைப்பு மையம், மறு பொறியியல் பரிசோதனை கூடம், சேர்க்கை உற்பத்தி மையம், மேம்பட்ட பயிற்சி மையம், காப்புரிமை பதிவு வசதி மையம், நவீன பரிசோதனை மையம் போன்றவை நிறுவப்பட்டுள்ளன. சென்னை மற்றும் சுற்றியுள்ள 14க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழிற்பேட்டை சங்கத்தினரால் இணைந்து உருவாக்கப்பட்ட சிறப்பு நோக்கு ஊர்தி மூலம் அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படும் திட்டத்தின் பொது வசதிகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், இளம் தலைமுறை பொறியாளர்கள், கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்.