Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்ச்சையை கிளப்பிய புதிய பாடபுத்தகம்: உச்ச நீதிமன்றத்திடம் வசமாக சிக்கிய என்சிஇஆர்டி! மன்னிப்பு கேட்டது ஒன்றிய அரசு

என்சிஇஆர்டியின் 8ம் வகுப்பிற்கான புதிய சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் தொடர்பாக சேர்க்கப்பட்ட சில அத்தியாயங்கள் சர்ச்சையான நிலையில், உச்ச நீதிமன்றம் தலையிட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், ஒன்றிய அரசு மன்னிப்பு கேட்டு சர்ச்சைக்குரிய பாடபுத்தகங்களை உடனடியாக திரும்பப் பெறுவதாக பிரச்னையை தீர்த்துள்ளது. தற்போது இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாகி உள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் தன்னாட்சி பெற்ற அமைப்பு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி).

இந்த நிறுவனம், இந்தியாவில் பள்ளி கல்வியின் தரத்தை மேம்படுத்த புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பாடபுத்தகங்களை வடிமைத்து வருகிறது. இந்த பாடபுத்தகங்கள் நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பாடபுத்தகங்களில் என்சிஇஆர்டி திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், வரும் கல்வியாண்டுக்கான 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டது. புதிதாக சேர்க்கப்பட்ட அத்தியாயங்களை அதன் இணையதளத்திலும் வெளியிட்டது.

இதில், ‘நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு’ என்ற பாடத்தில் நீதித்துறையின் கட்டமைப்பு, நிர்வாகம் என்பதை தாண்டி ‘நீதித்துறையில் ஊழல்’ என்ற புதிய தலைப்பு சேர்க்கப்பட்டது தான் சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது.

இந்த அத்தியாயத்தில் நீதித்துறையில் பல நிலைகளில் ஊழல் நடப்பதாக கூறப்பட்டுள்ளது. இது ஏழை மக்கள் நீதியை பெறுவதை மோசமாக்கி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் பாடபுத்தகத்தில் இந்திய நீதித்துறையின் மாண்பையே சிதைக்கும் இத்தகைய பாடப்பிரிவு இடம் பெற்றிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உடனடியாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடுத்து விசாரணை நடத்தியது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு கடும் கண்டனம் தெரிவித்தது. ‘‘நீதித்துறை குறித்த இவ்வாறான ஒரு தவறான விஷயம் தற்போது மிகுந்த ஒரு தாக்கத்தை நீதித்துறையில் ஏற்படுத்தி இருக்கிறது. நீங்கள் சுட்ட தோட்டாவால் நீதித்துறையில் ரத்தம் பீறிட்டு வெளியேறி உள்ளது. மாணவர்களுக்கு முதலில் பாடப் புத்தகம் மூலம் ஒழுக்கத்தை கற்றுக் கொடுங்கள். வன்முறையை கற்பிக்க வேண்டாம். அரசியலமைப்பு ஒழுக்கத்தையும், அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டையும் நிலை நிறுத்துவதில் நீதித்துறை மேற்கொள்ளும் தலையாய பங்கை அந்த என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகத்தில் இருந்த பாடம் ஒப்புக்கொள்ளத் தவறிவிட்டது.

புத்தகத்தில் உள்ள வார்த்தைகளின் தேர்வு, வெளிப்பாடுகள் வெறுமனே கவனக்குறைவான பிழையானது கிடையாது. எந்தவொரு சட்டபூர்வமான விமர்சகரையும் நசுக்கும் நடவடிக்கை அல்லது முன்மொழிவை எடுக்கவில்லை. பள்ளி பருவத்தில் இருக்கும் மாணவர்கள் பொது வாழ்க்கையின் நுணுக்கங்களை கற்க தொடங்கும் போது அவர்களுக்கு ஒரு தவறான வழிகாட்டுதல்களை நாமே காட்டி விடக்கூடாது என்பதை மிகவும் கருத்தில் கொண்டு உள்ளோம். மேலும் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள தவறான கருத்துக்கள் வெறும் மாணவர்களோடு நின்று விடாது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அடுத்த தலைமுறைகளுக்கு கூட எடுத்துச் செல்லப்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும்’’ எனக்கூறி பாட புத்தகத்திற்கு தடை விதித்தது.

இந்த தவறுக்காக ஒன்றிய கல்வி அமைச்சகம் உச்ச நீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த பாடப்பிரிவை புத்தகத்தில் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது. சர்ச்சைக்குரிய பாடபுத்தகம் ஒன்றுவிடாமல் திருப்ப பெறப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பாடபுத்தகம் டிஜிட்டல் பிரதிநிதிகள் எந்த ஊடகங்களிலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. பொதுவாக நீதித்துறையுடன் ஒன்றிய பாஜ அரசு நேரடியாக மோதாமல் மறைமுக தாக்குதலை நடத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது. அதாவது, பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது என்ற கதையாக ஒன்றிய அரசு நடந்து கொள்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய ஒன்றிய சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு, நீதிபதிகள் நியமனம் செய்யப்படும் கொலிஜியம் முறையை கடுமையாக விமர்சித்தார். இது ஜனநாயகத்திற்கு விரோதனமாது என்றார். இவரது தொடர் விமர்சனதால் நீதித்துறை ஒன்றிய அரசு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கிரண் ரிஜிஜுவிடமிருந்த சட்ட அமைச்சர் பதவி 2023ல் பறிக்கப்பட்டது. அவர் தற்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக உள்ளார். இதே போல, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு 10 மசோதாக்களை நீண்டகாலமாக நிலுவையில் வைத்ததை சட்டவிரோதம் என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் தனக்கான சிறப்பு அதிகாரமான அரசியலமைப்பு 142ஐ பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது.

இதை அப்போதைய துணை ஜனாதிபதி தன்கர் கடுமையாக விமர்சித்தார். அரசியலமைப்பு 142 பயன்படுத்தப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரான அணு ஆயுதம் என்றார். மேலும், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை தகுதி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஏற்க முயன்றதை தொடர்ந்து அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தன்கரின் உடல் நிலையால் அவர் ராஜினாமா செய்ததாக கூறினாலும், அதன் பின்னணியில் நீதித்துறைக்கு எதிராக தன்கர் கட்சியை மீறி தன்னிச்சையாக நடந்து கொண்டதே காரணம் என கூறப்படுகிறது.

இதுபோல ஒவ்வொரு முறையும் நீதித்துறையை சீண்டிவிட்டு யாரையாவது பலிகடா ஆக்கும் ஒன்றிய அரசு இந்த முறை என்சிஇஆர்டியை குனிய வைத்துள்ளது. என்சிஇஆர்டிக்கும் இந்த குட்டு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. காரணம், 2020 புதிய தேசிய கல்விக் கொள்கைக்குப் பிறகு என்சிஇஆர்டி புத்தக திருத்தங்கள் ஒவ்வொரு ஆண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. தற்போதைய சர்ச்சை ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன், 2002 குஜராத் கலவரங்கள், முகலாய மன்னர்களின் வரலாறு, பனிப்போர் மற்றும் டார்வினின் பரிணாமக் கொள்கை போன்ற முக்கியப் பகுதிகள் பாடத்திட்டச் சுருக்கம் என்ற பெயரில் நீக்கப்பட்டது சர்ச்சையானது.

ஹரப்பா நாகரிகத்திற்கும் ஆரியர்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்த புதிய விளக்கங்கள் சேர்க்கப்பட்டன. ஆரிய இடப்பெயர்வுக் கொள்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டு, ஹரப்பா மக்கள் பூர்வீக இந்தியர்கள் என்று விவரிக்கப்பட்டது கடுமையாக எதிர்க்கப்பட்டது. 12ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் ‘பாபர் மசூதி’ என்ற பெயர் நீக்கப்பட்டு, அது ‘மூன்று குவிமாட அமைப்பு’ என மாற்றப்பட்டது. மேலும், அயோத்தி குறித்த பாடப்பகுதி 4 பக்கங்களில் இருந்து 2 பக்கங்களாகக் குறைக்கப்பட்டது. இது வரலாற்றைத் திரிக்கும் முயற்சி என்று விமர்சிக்கப்பட்டது. ஆங்கிலப் பாடப்புத்தகங்களுக்கு ‘மிருதங்’, ‘சந்தூர்’, ‘பூர்வி’ போன்ற இந்தி/சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப்பட்டதற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இது இந்தித் திணிப்பு மற்றும் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்று விமர்சிக்கப்பட்டது. இது போல ஒவ்வொரு ஆண்டும் பாடபுத்தக திருத்தம் என்ற பெயரில் சர்ச்சையை கிளப்பி, குறிப்பிட்ட ஒரு சித்தாந்தத்தை பள்ளி மாணவர்கள் மனதில் திணிக்க முயன்ற என்சிஇஆர்டிக்கு இம்முறை உச்ச நீதிமன்றம் மூலம் சம்மட்டி அடி விழுந்துள்ளது. இது பாட புத்தகத்தை திருத்துவதில் என்சிஇஆர்டிக்கு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. எனவே என்சிஇஆர்டி இனியாவது சர்ச்சையான திருத்தங்களை மேற்கொள்ளாமல் ஆக்கப்பூர்வமான அறிவிப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கலாம்.

* தடம் தெரியாமல் அழிக்க முயற்சி

என்சிஇஆர்டி 8ம் வகுப்புக்கான புதிய சமூக அறிவியல் பாடபுத்தகங்களை விற்பனைக்காக 2.25 லட்சம் பிரதிகளை தயாரித்தது. உச்சநீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து, குடோனில் இருந்து 2,24,962 புத்தகங்கள் உடனடியாக திரும்பப் பெறப்பட்டன. ஆனால் அதற்கு முன்பாக 38 புத்தகங்கள் விற்கப்பட்டிருந்தன. அதில் 16 புத்தகங்கள் விற்றவர்களின் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டது. 3 புத்தகங்கள் மட்டும் அதை வாங்கியவர்கள் யார் என்றே தெரியவில்லை என ஒன்றிய அரசு அதிகாரிகள் புலம்பினர். யுபிஐ பரிவர்த்தனை ஐடியை வைத்து அவர்களின் செல்போன் எண் கண்டுபிடிக்கும் முயற்சி நடப்பதாக கூறப்பட்டது. டிஜிட்டலாகவும் இந்த புத்தக பக்கங்கள் பகிரப்படக் கூடாது என்பதிலும் ஒன்றிய அரசு தீவிரமாக உள்ளது. எனவே இந்த புத்தக பிரதிகளை தடம் தெரியாமல் அழிக்க அரசு மும்முரமாக செயல்படுகிறது.

* இவ்வளவு காட்டம் ஏன்? மாஜி இயக்குநர் கேள்வி

உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து என்சிஇஆர்டியின் முன்னாள் இயக்குநர் ராஜ்புத் டிவி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘‘என்சிஇஆர்டி என்பது எதிர்கால சந்ததியினரை வடிவமைக்கும் பணியைக் கொண்ட ஒரு தேசிய நிறுவனம். என்சிஇஆர்டியின் புத்தகத்தில் ஆட்சேபனைகள் எழுந்தால், அவற்றை நிறுவன வழிமுறைகள் மூலம் தீர்க்க வேண்டும். என்சிஇஆர்டிக்கு கடிதம் எழுதுங்கள். ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் புத்தகங்களை மறுபதிப்பு செய்து மாணவர்கள், அறிஞர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்தவர்களிடமிருந்து கூட பரிந்துரைகளை பெற்று திருத்துகிறோம்.

மேலும், நீதித்துறையில் ஊழல் பற்றி குறிப்பிடுவது இயல்பாகவே தவறல்ல. ஆனால் தீவிரமான ஒன்று நடந்துள்ளது என்று முத்திரை குத்துவது தவறானது. உச்ச நீதிமன்றம் மிகவும் கூர்மையாக பதிலளித்துள்ளது. அது அவசியமில்லை. நீதித்துறைக்கென அந்தஸ்தும் மரியாதையும் உண்டு. என்சிஇஆர்டியும் அதற்கு சமமான பொறுப்புள்ள அமைப்பாகும். மேலும் மரியாதைக்கும் தகுதியானது கூட. கீழ் நீதிமன்றங்களில் ஊழல் என்பது பரவலாக விவாதிக்கப்படும் ஒரு பிரச்னைதான். இதுபோன்ற யதார்த்தங்களை குழந்தைகள் ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள்.

நீதிமன்றத்தில் கூறப்பட்ட கருத்துகளுக்காக மட்டுமே அத்தியாயத்தை நீக்கக்கூடாது. அது நிபுணர்களால் ஆராயப்பட வேண்டும். எப்போதும் என்சிஇஆர்டி சரியான கருத்துகளை ஏற்றுக் கொள்ளும். இதற்கு உதாரணமாக எனது பதவிக்காலத்தில் நடந்த நிகழ்வை கூறுகிறேன். 3ம் வகுப்பு மாணவர் ஒருவர் ஒருமுறை பாடப்புத்தகத்தில் ஒரு விவசாயி தனது தோளில் கலப்பை இருக்கும் போது வயலை உழுது கொண்டிருப்பதை தவறாக விவரித்ததாக சுட்டிக்காட்டினார். சிறுவன் சொன்னது சரிதான். அது உடனே மாற்றப்பட்டது.

அந்த சிறுவனுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி நான் பாராட்டினேன். வாழ்த்தினேன். இதுபோன்ற மாற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் என்சிஇஆர்டி செய்கிறது. அது மேலும் தொடர்ந்து செய்யும். எனவே நீதிமன்றம் ஒரு வரி வருத்தத்தை வெளியிடுவதற்கு பதிலாக, அத்தியாயம் ஏன் எழுதப்பட்டது, அதன் நோக்கம் என்ன என்பதை விளக்க வேண்டும் என்று கேள்வி கேட்டுள்ளது. நான் மட்டும் தலைமைப் பொறுப்பில் இருந்திருந்தால், நீதித்துறையை ஒரு உதாரணமாகப் பயன்படுத்தி, மற்ற நிறுவனங்களையும் ஆராய மாணவர்களை ஊக்குவித்து, ‘பொது வாழ்வில் ஊழல்’ என்ற அத்தியாயத்தை விரிவுபடுத்தியிருப்பேன்’’ என்றார்.

* புள்ளி விவரங்கள் சொல்வது என்ன?

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி, கடந்த 2016 முதல் 2025 வரையிலான 10 ஆண்டுகளில் நீதிபதிகளுக்கு எதிராக 8,600க்கும் மேற்பட்ட புகார்கள் தலைமை நீதிபதியின் அலுவலகத்திற்கு வந்துள்ளன. இதில் 2024ல் மட்டும் அதிகபட்சமாக 1,170 புகார்களும், 2025ல் 1,102 புகார்களும் பதிவாகியுள்ளன.

ஆண்டு புகார்கள்

2016 729

2017 682

2018 717

2019 1037

2020 518

2021 686

2022 1012

2023 977

2024 1170

2025 1102