புகைப்படம், வீடியோ எடுத்து பதிவு செய்ய வேண்டும்; பழைய தார்சாலைகளை அகழ்ந்தெடுக்காமல் புதிய சாலை அமைத்தால் கடும் நடவடிக்கை: அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
சென்னை: பழைய சாலையினை முறையாக அகழ்ந்தெடுக்கும் பணி மேற்கொள்ளாமல் புதிய தார்ச்சாலைப் பணியினை மேற்கொள்ளும் அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீட்டில் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள 110 விதியின் கீழ் அறிவித்துள்ளதை தொடர்ந்து, முதற்கட்டமாக ரூ.154.16 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதில் கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையின்படி முதற்கட்டமாக ரூ.130.19 கோடி மதிப்பீட்டில் சாலைப்பணிகள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் முடிவுற்று சாலைப் பணிகள் மேற்கொள்ளும்போது தரமாகவும், அளவீடுகள் சரியாகவும் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 418.56 கி.மீ. நீளமுடைய 488 எண்ணிக்கையிலான பேருந்து தட சாலைகளும், 5,653.89 கி.மீ. நீளமுடைய 35,978 எண்ணிக்கையிலான உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை தார்ச்சாலைகளாகும். இந்த தார்ச்சாலைகள் பல்வேறு நிதி ஆதாரங்கள் மூலம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தார்ச்சாலைகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளும் போது ஏற்கனவே உள்ள சாலைகளின் மேற்பரப்பின் பழைய தார் அடுக்கினை முழுவதும் அகழ்ந்தெடுத்து, புதியதாக தார்ச்சாலைகள் அமைக்கப்படும்.
இதற்காக கோல்ட் மைனிங் மெசின் (Cold Milling Machine) சிறப்பு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு பழைய தார் அடுக்கினை அகழ்ந்தெடுக்கும் முறை மில்லிங் ஆகும். மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சிப் பகுதிகளில் புதிதாக சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளும்போது அனைத்து தார்ச்சாலைகளையும் முழுவதும் அகழ்ந்தெடுத்த பிறகே புதிதாக தார்ச்சாலை அமைத்திட வேண்டும். சாலையில் புதிதாக எவ்வளவு கனத்தில் தார்ச்சாலை அமைக்கப்படுகிறதோ அதே அளவிற்கு அகழ்ந்தெடுக்கும் பணியும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால் ஏற்கனவே சாலை எந்த அளவு உயரமாக உள்ளதோ புதிய தார்ச்சாலை அமைத்த பிறகும் அதே உயரம் பராமரிக்கப்படும்.
சிறப்பு இயந்திரத்தால் அகழ்ந்தெடுக்க முடியாத ஓரப் பகுதிகளில் வேறு இயந்திரங்கள் அல்லது பணியாளர்களால் நேரடியாக அகற்றப்பட வேண்டும். இதனால் கட்டடங்கள் சாலை மட்டத்திற்கு கீழ் செல்வதை தவிர்க்க முடியும். பழுதடைந்த பழைய தார் அடுக்கை அகற்றி புதிய தார்ச்சாலை அமைப்பதால் சாலையின் உயரத்தை ஏற்கனவே உள்ள சாலையின் உயரத்திற்கு சமமாக உருவாக்கலாம். மேலும் சாலையிலுள்ள மேடுபள்ளங்களை சரி செய்வதோடு, சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் அமைக்கப்படும். மேற்படி பழைய சாலை அகழ்ந்தெடுக்கும் பணி செய்த பிறகுதான் புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றன என்பதை ஜிபிஎஸ் பதிவுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்தபின் புதிய சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.
சரியாக அகழ்ந்தெடுக்கும் பணி செய்யப்படுகிறதா என்பதை சாலைப்பணி மேற்கொள்ளும் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதனை கண்காணிப்பதற்கு உயர் அலுவலர்கள் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பழைய சாலைகளில் சரியாக அகழ்ந்தெடுக்கும் பணி மேற்கொள்ளாமல் புதிய தார்ச்சாலை அமைத்தால், பணி மேற்கொண்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறான அகழ்ந்தெடுக்கும் பணிகளை திட்ட மேலாண்மைக்கான ஆலோசகர் களத்தில் அளவீடு செய்து சரியாக அகழ்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றுகளை உரிய புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் பெருநகர சென்னை மாநகராட்சியின் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும், என மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.


