Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் புதிய வெள்ள அபாய எச்சரிக்கையால் நேபாளத்தில் பீதி: பலி எண்ணிக்கை 1000ஐ தாண்டியது

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்துள்ளது. 7வது நாளாக நீடிக்கும் மீட்பு பணிகளுக்கு மத்தியில், ஆறுகளின் நீர்மட்டம் உயர்வதால் புதிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது. நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் பனிப்பாறைகள் உடைந்து விழுந்ததால் கடந்த மாதம் 26ம் தேதி பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள், நீர்மின் நிலையங்கள் சூறையாடப்பட்டன. தேடுதல் மற்றும் மீட்பு பணியில் நேபாள ராணுவத்துடன் இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளும் உதவி வருகின்றன. இந்நிலையில், 7வது நாளாக நேற்று நடந்த தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் நேபாளத்தின் 8 மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு படையினர் மேலும் பல உடல்களை மீட்டனர்.

இதன் மூலம், பலி எண்ணிக்கை 1000த்தை தாண்டியது. தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் 1,003 பேர் இறந்திருப்பதாக தெரிவித்துள்ளது. 583 வெளிநாட்டவர்களும் பல பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட சுமார் 4,000 பேரை இன்னமும் காணவில்லை. அதே சமயம் சுமார் 12,000 பேர் வரையிலும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திபெத்தில் இந்த பேரிடரால் 16 பேர் இறந்ததாகவும், 550 பேரை காணவில்லை என்றும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, மேலும் சில பனிப்பாறைகள் உடைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சீனா எச்சரித்திருக்கும் நிலையில், நேபாளத்தின் கிழக்கு, மத்திய, மேற்கு பகுதிகளில் உள்ள பல மாவட்டங்களில் வெள்ள அபாயம் குறித்து தேசிய பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

நுவாகோட், ரசுவா மாவட்டங்களில் சிறிய ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அங்கு திடீர் வெள்ளம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றங்கரையோரங்களிலும் பிற பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. நேபாள எரிசக்தி துறை அமைச்சர் பிராஜ் பக்தா ஷ்ரேஸ்தா, எரிசக்தி மற்றும் வானிலை ஆய்வு துறைகளின் மூத்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

ரசுவா, நுவாகோட் உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் வானிலை மற்றும் ஏற்படக்கூடிய வெள்ள அபாயங்கள் குறித்து இந்த ஆலோசனைகள் அமைந்திருந்தன. சடலமாக மீட்கப்பட்டவர்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் சிதைந்திருப்பதால் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்ட பிறகு மொத்த மொத்தமாக உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

ஒரே உடலை உரிமை கோரிய 3 குடும்பங்கள்

வெள்ளத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் கடும் சிரமம் நிலவி வருகிறது. நேபாளத்தின் பொக்காராவில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல் எண் 1003ஐ தங்களின் உறவினர் என 3 குடும்பங்கள் சொந்தம் கொண்டாடுகின்றன. பர்தியாவைச் சேர்ந்த நீர்மின் நிலைய ஊழியர் கோபால் தாஹித் மற்றும் ரூபண்டேஹியைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி தாமோதர் பஸ்யால் ஆகியோரின் குடும்பங்கள் விடாப்பிடியாக உள்ளன. மற்றொரு குடும்பத்தினர் விலகி விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு வெகு தொலைவில் மீட்கப்படும் உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்படும்போது, புகைப்படங்கள், உடல் அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகளைக் கொண்டு அடையாளம் காண வேண்டிய சூழலில் குடும்பங்களும் அதிகாரிகளும் எதிர்கொள்ளும் சிரமங்களை இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது.

இந்திய சுரங்கப்பாதை மீட்புக்குழு முன்னேற்றம்

நேபாளத்தில் 8 நீர்மின் நிலையங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள சுரங்கப்பாதைகளில் மலை போல் சேறு குவிந்துள்ளதால் அங்கு சிக்கியிருக்கும் 900 தொழிலாளர்கள் கதி தெரியவில்லை. சுரங்கப்பாதைகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ள இந்தியா, சீனா நிபுணர் குழுக்களை அனுப்பி உள்ளது. இதில், சிலிமே, லாங்டாங் நீர்மின் நிலையங்களில் இந்திய சுரங்கப்பாதை மீட்புக் குழு முன்னேற்றம் கண்டுள்ளது. சிலிமேவில் மோசமான வானிலை மற்றும் கடினமான அணுகல் சூழல் இருந்தபோதிலும், இந்திய குழு சுரங்கப்பாதையில் வெற்றிகரமாக ஒரு முகாமை அமைத்து, உள்ளே பாதுகாப்பு கயிறுகளைப் பொருத்தியுள்ளது. லாங்டாங் பகுதியில் 185 மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்துள்ளதாக காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

20 வங்கிகளின் பணப்பெட்டிகள் எங்கே?

ரசுவா, தாடிங், சிட்வான் உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட வங்கி கட்டிடங்கள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன. அங்கிருந்த பணப்பெட்டிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இவற்றையும் கண்டுபிடிக்கும் பொறுப்பு நேபாள காவல்துறையிடம் தரப்பட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மக்களை மீட்கும் பணிக்கு முன்னுரிமை தரப்பட்டாலும், பணப்பெட்டிகளையும் போலீசார் தேடி வருவதாக டிஐஜி அபி நாராயணன் நேற்று தெரிவித்துள்ளார். இந்த பணப்பெட்டிகளில் கோடிக்கணக்கான ரூபாயும், விலைமதிப்புமிக்க தங்க நகைகளும் இருப்பதால் சேற்றில் புதைந்த பணப்பெட்டிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தியர்கள் உடல்களை கொண்டு வருவது எப்படி?

நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரின் உடல்களை அடையாளம் காண்பது மற்றும் தாய்நாட்டிற்கு கொண்டு செல்வது தொடர்பான விரிவான நடைமுறைகளை நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் நேற்று வெளியிட்டது. நேபாள காவல் துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் மூலம் உறவினர்களால் உடல்களை அடையாளம் காண முடிந்தால், அவற்றை ஒப்படைப்பதற்கும் தாயகம் கொண்டு செல்வதற்கும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்க இந்தியத் தூதரகம் உதவும்.

பெருமளவிலான உடல்களை நேபாள அரசு தற்காலிகமாக அடக்கம் செய்துள்ளது. அத்தகைய உடல்களை அடையாளம் காண நெருங்கிய ரத்த உறவினர்களுடன் டிஎன்ஏ பொருத்தம் பார்க்கப்பட வேண்டும். அடையாளம் காண முடியாத சூழலில் அல்லது உடல்கள் தற்காலிகமாக அடக்கம் செய்யப்பட்ட நிலையில், டிஎன்ஏ பொருத்தம் பார்ப்பதற்கான வசதியை நேபாளம் செய்து தரும் என்று இந்திய தூதரகம் கூறியது. இதுதொடர்பாக வாட்ஸ்அப் வசதியுடன் கூடிய 3 உதவி எண் சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளது.