புதிய செல்போன்களில் கட்டாயம்: சஞ்சார் சாத்தி ஆப் உளவு செயலியா? வெடிக்கும் புதிய சர்ச்சை
புதுடெல்லி: புதிதாக விற்பனைக்கு வரும் ஸ்மார்ட் போன்கள் அனைத்திலும் ‘சஞ்சார் சாத்தி’ செயலியைத் தயாரிப்பு நிறுவனங்களே முன்கூட்டியே நிறுவியிருக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அது உளவு செயலி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
சஞ்சார் சாத்தி ஏன்?
* வாடிக்கையாளர்களின் தொலைந்து போன செல்போன்களைக் கண்டறியவும், 16 இலக்க ஐஎம்இஐ அடையாள எண்களில் நடைபெறும் மோசடிகளைத் தடுக்கவும் ஏற்கனவே ஒன்றிய அரசால் ‘சஞ்சார் சாத்தி’ ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய செல்போன்களிலும் 90 நாட்களுக்குள், அதாவது 2026 பிப்ரவரி மாதத்திற்குள் இந்தச் செயலியைத் தயாரிப்பு நிறுவனங்களே முன்கூட்டியே நிறுவியிருக்க வேண்டும் எனத் தொலைத்தொடர்புத் துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
* பயனர்கள் இந்தச் செயலியைத் தங்களது செல்போனிலிருந்து நீக்கவோ அல்லது முடக்கவோ முடியாத வகையில் வடிவமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது தொலைத்தொடர்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சஞ்சார் சாத்தி செயலி 1.5 கோடிக்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்றுவரை, சுமார் 2.75 கோடி மோசடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 லட்சம் திருடப்பட்ட செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உளவு செயலியா?
மக்கள் நலனுக்காக இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்தாலும் இது உளவு செயலியா என்ற கேள்வி எதிர்க்கட்சிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் எழுந்துள்ளது. பொதுமக்களிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல், கட்டாயமாக ஒரு செயலியைத் திணிப்பது தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கும் செயலாகும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒன்றிய அரசு என்ன சொல்கிறது?:
சஞ்சார் சாத்தி செயலிக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததும் வேண்டும் என்றால் அதை செல்போனில் வைக்கலாம், வேண்டாம் என்றால் அதை டெலிட் செய்து விடலாம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதை ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெளிவுபடுத்தியுள்ளார். அவர் கூறியதாவது:
* செல்போன் பயனர்கள் சஞ்சார் சாத்தி செயலியை நீக்க சுதந்திரம் உள்ளது. அவர்கள் அதில் பதிவு செய்யும் வரை அது செயலற்ற நிலையில் இருக்கும். நீங்கள் அதை நீக்க விரும்பினால், அதை நீக்கலாம். ஆனால் மோசடி மற்றும் திருட்டில் இருந்து தங்களைப் பாதுகாக்க இந்த செயலி உள்ளது என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியாது. சஞ்சார் சாத்தி செயலி மூலம் உளவு பார்க்கும் அல்லது அழைப்பு கண்காணிப்பு எதுவும் இல்லை. சஞ்சார் சாத்தி என்பது ஒரு செயலி மற்றும் ஒரு போர்டல். இதற்கு மக்கள் ஆட்சேபிக்கக்கூடாது, மக்கள் வரவேற்க வேண்டும். இதன் அடிப்படையில், நீங்கள் ஒரு மொபைல் போன் வாங்கும்போது, அதன் அடிப்படையில், ஐஎம்இஐ எண் போலியானதா அல்லது உண்மையானதா என்பதை, சஞ்சார் சாத்தி செயலியின் அடிப்படையில் அதை அடையாளம் காண முடியும்.
எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன?
சஞ்சார் சாத்தி செயலி மூலம் நாட்டில் உள்ள 73 கோடி செல்போன்களை உளவு பார்க்க மோடி அரசு விரும்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. ஜனநாயகம் அழிந்து வருகிறது: கார்கே(காங்கிரஸ் தலைவர்): இது மக்களின் குரலை நெரிக்க பாஜவின் மற்றொரு முயற்சி. இது சர்வாதிகாரத்தைப் போன்றது. குடிமக்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் என்ன பேசுகிறார்கள் என்பதை அரசாங்கம் ஏன் அறிய விரும்புகிறது? பாஜவின் கொடுங்கோல் ஆட்சியின் அடையாளமாகும். ஜனநாயகம் அழிந்து வருகிறது. டிஸ்டோபியன் சகாப்தம் செழிக்கிறது.
தனியுரிமை மீதான தாக்குதல்: கெஜ்ரிவால்: அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக்கும் மோடி அரசின் உத்தரவு தனியுரிமை மீதான வெட்கக்கேடான தாக்குதல். உலகில் எந்த ஜனநாயகமும் அவ்வாறு செய்ய முயற்சித்ததில்லை. ஆம்ஆத்மி இதுபோன்ற கடுமையான சர்வாதிகார நடவடிக்கைகளைக் கண்டிக்கிறது. இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறக் கோருகிறது.
நாட்டை சர்வாதிகாரமாக மாற்றுகிறது: பிரியங்காகாந்தி:இது உளவு பார்க்கும் செயலி. இதன் மூலம் அரசாங்கம் நாட்டை சர்வாதிகாரமாக மாற்றுகிறது. இது அபத்தமானது. குடிமக்களுக்கு தனியுரிமைக்கான உரிமை உண்டு. நீங்கள் தினமும் என்னிடம் கேட்கிறீர்கள், ஏன் பாராளுமன்றம் செயல்படவில்லைஎன்று. அவர்கள் (அரசாங்கம்) எதையும் பற்றி பேச மறுப்பதால் அது செயல்படவில்லை.
கண்காணிப்பு நாடு: ரன்தீப் சுர்ஜிவாலா: இந்தியா இப்போது ஒரு கண்காணிப்பு நாடாக மாறிவிட்டது. இது அதிகாரப்பூர்வ பெகாசஸா அல்லது வட கொரியாவின் ரெட் பிளாக்(REDFLAG) செயலியைப் போன்றதா? இந்தியா இப்போது ஒரு காவல்துறை நாடாக இருக்குமா? தனியுரிமை மற்றும் தனிப்பட்ட இடத்திற்கான உரிமை இப்போது அதிகாரப்பூர்வமாக இறந்துவிட்டது. கட்டாய செயலியை முன்கூட்டியே நிறுவியவுடன், அரசாங்கம் உங்கள் இருப்பிடத்தை’ கண்காணிக்கலாம், உங்கள் தேடல் வரலாற்றை கண்காணிக்கலாம். உங்கள் அழைப்புகள், எஸ்எம்எஸ், வாட்ஸ்ஆப் ஆகியவற்றை கண்காணிக்கலாம்.
அரசியல் அமைப்புக்கு அப்பாற்றபட்டது: கே.சி. வேணுகோபால்: இந்த நடவடிக்கை அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டது. பிக் பிரதர் நம்மைப் பார்க்க முடியாது. தனியுரிமைக்கான உரிமை என்பது அரசியலமைப்பின் பிரிவு 21 இல் குறிப்பிடப்பட்டுள்ள வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையின் உள்ளார்ந்த பகுதியாகும்.
கண்காணிப்பு தருணம்: சிவசேனா (உத்தவ்) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி: ஒன்றிய அரசின் நடவடிக்கை மற்றொரு பிக் பாஸ் கண்காணிப்பு தருணம்.
ஜனநாயகத்தில் எதையும் கட்டாயமாக்குவது தொந்தரவாக உள்ளது: சசிதரூர்: நான் இந்த விவகாரத்தை விரிவாக ஆய்வு செய்யவில்லை, ஆனால் இந்த செயலிகள் தன்னார்வமாக இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று பொது அறிவு எனக்குச் சொல்கிறது. அவை தேவைப்படும் அனைவரும் அவற்றைப் பதிவிறக்க முடியும். ஆனால் ஜனநாயகத்தில் எதையும் கட்டாயமாக்குவது தொந்தரவாக இருக்கிறது. ஆனால் அரசாங்கத்தின் தர்க்கத்தை நான் இன்னும் அதிகமாகப் பார்க்க வேண்டும். ஊடகங்கள் தெரிவிக்கும் உத்தரவை மட்டும் பிறப்பிப்பதற்குப் பதிலாக அரசாங்கம் எல்லாவற்றையும் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். இதன் பின்னணியில் உள்ள சிந்தனை என்ன என்பதைஅரசாங்கம் விளக்கும் ஒரு விவாதம் நமக்குத் தேவை.
* செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் சொல்வது என்ன?
சஞ்சார் சாத்தி செயலியை அமல் செய்யும் ஒன்றிய அரசின் உத்தரவுக்கு ஆப்பிள் செல்போன் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சாம்சங் உள்ளிட்ட பிற பிராண்டுகள் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லாவா இன்டர்நேஷனல் இந்த விஷயத்தில் உடனடியாக எந்தக் கருத்தையும் பகிர்ந்து கொள்ளவில்லை.
காங்கிரஸ் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல்: புதிய மொபைல்களில் சஞ்சார் சாத்தி செயலியை நிறுவுவது குறித்த அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களைப் பற்றி விவாதிக்க, மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை தாக்கல் செய்துள்ளார்.
புதிய மொபைல் கைபேசிகளில் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவுவது குறித்த தொலைத்தொடர்புத் துறையின் (டிஓடி) வழிகாட்டுதல்கள் அரசியலமைப்பிற்கு விரோதமானது. அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்த விஷயத்தை எடுக்க மற்ற அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைக்கக் கோரும் விதி 267 இன் கீழ் ஒரு விவாதத்தை நடத்த வேண்டும் என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.