Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

புதிய தலைமை செயலகம் கட்ட திட்டமிட்டுள்ள பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை இடிக்க ஒப்பந்தப்புள்ளி கோருவதா?.. போராட்டம் நடத்தப்போவதாக மீனவர்கள் அறிவிப்பு

சென்னை: புதிய தலைமைச் செயலகம் கட்ட திட்டமிட்டுள்ள பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளை இடிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியதற்கு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மீனவ கிராம மக்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மயிலாப்பூர் வாரியக் குடியிருப்புகளை இடிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியதற்கு கண்டனம். எங்கள் மறுவாழ்விற்காகக் கோரப்பட்ட இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அரசாணையை ரத்து செய்யாமலும், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறாமலும் இடிப்புக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நந்தனம் கோட்டம், மயிலாப்பூர் கிராமம், பிளாக் எண் 102, ஆர்.எஸ். எண் 4593/33ல் உள்ள 96 வாரிய வாடகைக் குடியிருப்புகளையும் பிற கட்டிடங்களையும் இடிப்பதற்கு, வாரியம் மின்-ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ.41,61,785 (ஜிஎஸ்டி நீங்கலாக). இதை மயிலைப் பகுதி பஞ்சாயத்தார்களாகிய நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த 3.82 ஏக்கர் நிலம் பாழடைந்த கட்டிடப் பகுதி மட்டுமல்ல. கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019ன் கீழ், நீண்ட காலக் குடியிருப்புக்கான திட்டப்பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிய இடம் இதுவே.

இது எங்கள் மறுவாழ்விற்காகக் கோரப்பட்ட இடம். இதே இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட அரசு அரசாணை வெளியிட்டது எங்களுக்கு கடும் அதிர்ச்சியையும் அநீதியையும் அளித்தது. அந்த அரசாணை இன்று வரை ரத்து செய்யப்படவில்லை. அதை ரத்து செய்யாமலேயே கட்டிடங்களை இடிக்க ஒப்பந்தப்புள்ளி கோருவது, எங்கள் மறுவாழ்வு உரிமையைப் புறக்கணித்து, தலைமைச் செயலகத் திட்டத்துக்கு நிலத்தை தயார்படுத்தும் முயற்சியே என்று நாங்கள் கருதுகிறோம். இந்த குடியிருப்புகளில் தற்போது யாரும் வசிக்கவில்லை. எனவே, அவற்றை உடனடியாக இடிக்க வேண்டிய அவசரம் எதுவும் இல்லை. இந்த இடிப்பு, எங்களுக்கான குடியிருப்புத் திட்டத்துக்கு இக்கட்டிடங்களையும் நிலத்தையும் பயன்படுத்தும் வாய்ப்பையே அழித்துவிடும்.

இடத்தின் எதிர்காலப் பயன்பாடு குறித்தும், எங்கள் மறுவாழ்வு குறித்தும் பகுதி பஞ்சாயத்தார்களிடம் எந்த கலந்தாலோசனையும் நடத்தப்படவில்லை. இடிக்கப்படும் கட்டிடங்களின் செங்கல், கதவு, ஜன்னல், கம்பி உள்ளிட்ட மீட்புப் பொருட்கள் அனைத்தும் ஒப்பந்ததாரருக்கே சென்றுவிடும். இந்நிலையில், குறைந்தபட்ச ஏலத் தொகையான ரூ.41.6 லட்சம் எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை உள்ளிட்ட காரணங்களால் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம். ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு எண் 4/2026-27-ஐ உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி முறையான அனுமதி பெறாமல் இடிப்புப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது. குறைந்தபட்ச ஏலத் தொகை நிர்ணயிக்கப்பட்ட முறையை வெளிப்படையாக வெளியிட வேண்டும். இந்த இடத்தை எங்கள் மறுவாழ்விற்கான நீண்டகாலக் குடியிருப்பு திட்டப்பகுதியாக அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இடம் தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், பகுதி மக்கள் மற்றும் பஞ்சாயத்தார்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், ஜனநாயக வழியில் போராட்டங்களை முன்னெடுப்பதுடன், சட்ட வழிமுறைகளையும் நாடுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மயிலை, திருவல்லிக்கேணி பகுதி மீனவ கிராமப் பஞ்சாயத்தார் நீலாங்கரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தில், ‘‘புதிய தலைமைச் செயலக திட்டம் தொடர்பாக, இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள போவதில்லை என முள்ளிக்குப்பம் முதல் மாட்டான்குப்பம் வரையிலான மயிலை, திருவல்லிக்கேணி பகுதி கிராமப் பஞ்சாயத்தார் அறிவித்துள்ளனர். பாதிக்கப்படக்கூடிய அனைத்து கிராமங்களுக்கும் முறையான எழுத்துப்பூர்வ அழைப்பு வழங்கப்படாததே இதற்கு காரணம். இக்கூட்டம் குறித்து, மயிலை, திருவல்லிக்கேணி பகுதிப் பஞ்சாயத்தார்களில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு அறிமுகமான சிலருக்கு மட்டுமே தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படக்கூடிய அனைத்துக் கிராமப் பஞ்சாயத்தாருக்கும் முறையான எழுத்துப்பூர்வ அழைப்பு வழங்கப்படவில்லை. மிகவும் உணர்வுபூர்வமான இத்திட்டம் குறித்த கூட்டத்துக்கு பாதிக்கப்படக்கூடிய அனைத்துக் கிராமங்களையும் முறையாக அழைக்காதது, தங்களை அலட்சியப்படுத்தும் செயல். புதிய தலைமைச் செயலகத் திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சுட்டிக்காட்டித் தங்கள் எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும், முறையான அழைப்பு இல்லாத நிலையில் இக்கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்றும் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் இத்திட்டம் தொடர்பாக கூட்டம் நடத்தப்படுவதாக இருந்தால் மயிலை, திருவல்லிக்கேணி பகுதிகளின் அனைத்து கிராமப் பஞ்சாயத்தாருக்கும் முறையான எழுத்துப்பூர்வ அழைப்பு வழங்க வேண்டும் என அரசு நிர்வாகத்தைப் பஞ்சாயத்தார் கேட்டுக்கொண்டுள்ளனர். பாதிக்கப்படும் மக்களின் கருத்தைக் கேட்பதே உண்மையான ஜனநாயகம். அனைவருக்கும் முறையான அழைப்பு விடுத்து நடத்தப்படும் கூட்டத்தில் பங்கேற்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.