தஞ்சை சீமையின் டெல்டா மாவட்டங்களில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அரசின் சாதனைகளை பட்டியலிட்ட முதல்வர், அதிர்ச்சிக்குரிய தகவல் ஒன்றையும் வெளியிட்டார். அதாவது தமிழக விவசாயிகளுக்கு அரசு வழங்கும் நெல்லுக்கான ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவு சார்ந்த தகவல்தான் அது.
‘‘தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையால் நெல் உற்பத்தி அதிகளவில் பெருகி வருகிறது. இப்படி பெருகும் காரணத்தால் பல்வேறு பிரச்னைகள் உருவாகிறது. எனவே தமிழ்நாடு அரசு, நெல்லுக்கு வழங்கிக்கொண்டிருக்கும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மொத்தத்தில் நெல்லுக்கு ஊக்கத்தொகை வழங்கக்கூடாது என்பதே ஒன்றிய அரசின் உத்தரவு கடிதம் சொல்லும் சூசகமான தகவல்.
இந்த உத்தரவு கடிதம், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லி கொள்ளும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் நிதி அமைச்சகத்தில் இருந்து தான் அனுப்பப்பட்டுள்ளது,’’ என்று முதல்வர் தனது வேதனையை வெளிப்படுத்தினார். அதோடு ‘‘தற்போது தமிழக அரசு சார்பில் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.70ல் இருந்து ரூ.156, பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.50ல் இருந்து ரூ.131 என்று ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் ‘நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 வழங்குவோம் என்று கடந்த 2021ம் ஆண்டு, திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்து காட்டியுள்ளோம். இந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.2 ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமான நிதி, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 30 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்,’’ என்ற தகவலையும் பகிர்ந்து கொண்டார். அதேநேரத்தில் ‘‘உலகத்திற்கே உணவளிக்கும் விவசாயிகளுக்கு உரிய விலையை நான் நிச்சயம் உறுதி செய்வேன்.
அடுத்து அமையவுள்ள திராவிட மாடல் 2.0 ஆட்சியில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்கப்படும் என்று உறுதியாக சொல்கிறேன்’’ என்ற உத்தரவாதத்தையும் முதல்வர் தந்துள்ளார். இது தமிழ்நிலத்து விவசாயிகள் மத்தியில் பெரும் பாதுகாப்பு உணர்வோடு புதிய நம்பிக்கையையும் தந்துள்ளது. ஏற்கனவே நெல் விவசாயிகளுக்கு வழங்கி வரும் கூடுதல் ஊக்கத்தொகையை நிறுத்துமாறு, கேரள அரசுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியது.
தற்போது தமிழக அரசுக்கும் இதுபோன்ற உத்தரவு கடிதத்தை அனுப்பியுள்ளது. 2016ம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் ரேபரேலியில் விவசாயிகள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘‘2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவேன்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் பத்து வருடங்களில் இதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டிரம்புடன் இந்தியா தற்போது மேற்கொண்டுள்ள இறக்குமதி சார்ந்த வர்த்தக ஒப்பந்தம், நமது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச ஆய்வுகள் கூறி வருகிறது. பொறுப்புள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் வர்த்தக ஒப்பந்தம் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இப்படிப்பட்ட நிலையில் இந்த உத்தரவானது, அமெரிக்க விவசாயப்பொருட்களுக்கு இந்திய சந்தையை திறந்து விடும் திட்டத்தின் ஒரு பகுதியா என்ற கேள்வி மக்கள் மன்றத்தில் இயல்பாகவே எழுந்துள்ளது.
