Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யாரெல்லாம் படிக்கக்கூடாது என்று பில்டர் செய்யும் முயற்சியே புதிய கல்விக் கொள்கை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதியதேசிய கல்விக் கொள்கை-2020 எனும் மதயாணை நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: பொதுவாக, எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும், அதில் சாதக பாதக விஷயங்கள் இருக்கும். ஆனால், பாதகத்தை மட்டுமே கொண்ட ஒன்று என்றால், அது இந்த புதிய கல்விக் கொள்கை மட்டும் தான். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில், சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிக்கின்ற சூழ்ச்சிக்கான காரணத்தை இந்த நூல் அம்பலப்படுத்துகிறது.

‘விஸ்வகர்மா’ என்ற பெயரில் குலக்கல்வித் திட்டத்தை நுழைக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் தந்திரத்தை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அதுமட்டுமல்ல மகளிர், திருநர், மாற்றுத்திறனாளிகளின் கல்விக்காக, எந்த ஒரு சிறப்பு அம்சமும் இந்தப் புதிய கல்விக் கொள்கையில் இடம் பெறவில்லை. மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்வு. ஒன்பதாம் வகுப்பு முதல், பன்னிரண்டாம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு என்ற பெயரில், 40 தேர்வுகள். அடுத்து கல்லூரிக்குச் செல்லும் போது தனியாக நுழைவுத் தேர்வு என்று இந்தப் புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. மொத்தத்தில் யாரெல்லாம் படித்து மேலே வரவேண்டும் என்பதற்குப் பதிலாக, யாரெல்லாம் படிக்கக்கூடாது என்று பில்டர் செய்யும் முயற்சியே புதிய கல்விக் கொள்கை.

யானைக்கு மதம் பிடித்தால், அது எவ்வளவு ஆபத்து என்பது நம் அனைவருக்கும் தெரியும். குட்டியிலிருந்து அந்த யானையை வளர்த்து, பராமரித்து வந்த பாகனைக் கூட அது தூக்கிப்போட்டு மிதித்து கொன்று விடும். ஏனென்றால், மதம் பிடித்த யானைக்கு, வெறி மட்டும் இருக்குமே தவிர, யாரை தாக்குகிறோம், எதற்காகத் தாக்குகிறோம் என்ற அறிவு அதற்கு இருக்காது. தேசிய கல்விக் கொள்கை என்பது, நாடு முழுவதும் நம் பிள்ளைகளின் படிப்பை, எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற ஒரு ஆவணம். அப்படிப்பட்ட கல்விக் கொள்கைக்கு மதம் பிடித்தால், நம் நாட்டின் எதிர்காலமே சிதைந்து விடும். இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.