தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்குமுனை போட்டி இருந்தது. வாக்குப்பதிவு முடிந்து வாக்களித்துவிட்டு வந்த வாக்காளர்களிடம் பல்வேறு நிறுவனங்கள் கருத்துகளை கேட்டு வெளியிட்ட தேர்தல் கணிப்புகள் பொய்த்துப்போனது. யாரும் எதிர்பார்க்காத வகையில் தவெக, தனி மெஜாரிட்டியின்றி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சில தொகுதிகளை திமுக கூட்டணி இழந்துள்ளது.
கடந்த 5 ஆண்டின் திமுக ஆட்சியில், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக நீதித்துறைகளில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டன. சென்னையை தாண்டி அனைத்து மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், பெரிய தொழிற்சாலைகளை கொண்டு வந்துள்ளது. 11.2 சதவீதம் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்குகிறது. உற்பத்தி மற்றும் சேவைத்துறையில் ஏற்பட்டுள்ள அதிரடி வளர்ச்சி, மின்னணு மற்றும் மின்சார வாகன உற்பத்தி அதிகரிப்பு மாநிலத்தின் முக்கிய சாதனையாக இருந்ததை சில வாக்காளர்கள் புறந்தள்ளிவிட்டனர் என்பது தான் அர்த்தம்.
விஜய் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை மக்களுடன் நேரடியாக தொடர்புடன் இருந்ததில்லை. ஆனாலும் மாற்றம் வேண்டும் என்ற முழக்கத்துடன் பேசினார். அவரது அரசியல் பிரசாரம் 10 நாட்கள் மட்டுமே இருந்தது. பெரும்பாலான இளைய வயதினர் தவெக ஆதரவாளர்களாக இருந்தார்கள். பா.ஜ.வுக்கு வாக்களிக்க விரும்பாத கூட்டமும் தவெகவுக்கு ஆதரவளித்தது. தவெகவை பின்னணியில் இருந்து இயக்குபவர்கள் சாதாரணமானவர்கள் இல்லை. மிகத் துல்லியமான திட்டமிடல்களுடன் களமிறங்கியிருக்கிறார்கள்.
ஒன்றிய அரசு சொல்படி கேட்கவில்லை என்றால் சிபிஐ வழக்கை விரைவுபடுத்தும். தமிழ்நாட்டுக்கான நிதியை குறைக்கும். அது குறித்து தமிழர்கள் இதுவரையில் கவலைப்பட்டதில்லை, இனியும் கவலைப்பட போவதுமில்லை. தமிழர்களுக்கும் அப்படியானதொரு ஷாக் ட்ரீட்மெண்ட் தேவைப்படுவது காலத்தின் கட்டாயம். தவெக ஆட்சிக்கு வந்ததில் தவறொன்றுமில்லை. ஏனென்றால் அது பெரும்பாலான மக்களின் விருப்பம். அதனை வரவேற்பதை தவிர வேறு வழியில்லை.
அதிகாரிகளை வைத்து தான் ஆட்சி நடத்த வேண்டிய நிர்பந்தம் உள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, 6 காஸ் சிலிண்டர், திருமண உதவித்தொகையாக 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை, 200 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகை, ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம், அங்கன்வாடி மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு என்பது உள்பட பல்வேறு தேர்தல் அறிக்கைகளில் கூறியவற்றை நிறைவேற்ற வேண்டிய சவாலான பிரச்னைகள் அவர்கள் முன் உள்ளது. இது சினிமா கிடையாது. போகிற போக்கில் நிறைவேற்றி விடலாம் என்பதற்கு. இனி ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக தான் அரசை வழி நடத்தி ஆகவேண்டும்.
