சென்னை: வங்கக் கடலில் மியான்மர் அருகே புதிய காற்று சுழற்சி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு இருக்கும். இதன் காரணமாக தமிழகத்தில் வெப்ப சலன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா பகுதியில் இருந்து வட மேற்கு திசையில் நகர்ந்து சென்று குஜராத் தரை பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையோரத்தில் மையம் கொண்டு நீண்ட வாக்கில் சுழன்று மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் வரை இருவேறு சுழற்சியாக இணைந்துள்ளது.
இதன் காரணமாக வட மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் இன்று உருவாகும் புதிய காற்று சுழற்சியை நோக்கி காற்று திசை மெல்ல மெல்ல மாறும். 21ம் தேதி ஓரிரு இடங்களிலும், 22ம் தேதி ஒருசில இடங்களிலும் மழை பெய்யும். அதன் தொடர்ச்சியாக 25ம் தேதி முதல் லேசானது முதல் மிதமான மழை மாத இறுதி வரை பெய்யும். வெப்பநிலையை பொறுத்தவரையில் உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பைவிட 1 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் படிப்படியாக உயரும்.
நேற்று, அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னை, கடலூர், ஈரோடு, பரங்கிப்பேட்டை, திருச்சியில் 100 டிகிரி, வேலூர், தூத்துக்குடி, பாளையங்கோட்டை, கரூரில் 99 டிகிரி வெயில் நிலவியது. பிற இடங்களில் இன்றும் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகமாக இருக்கும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரியாக இருக்கும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


