இலட்சியத்தை வகுத்துக் கொண்டு, குறிப்பிட்ட வயதில் இதை அடைய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கினால் வாழ்நாள் சுறுசுறுப்பாகவும், சுவையாகவும் அமையும். எதை நோக்கிச் செல்கிறோம், எங்கு செல்கிறோம், ஏன் செல்கிறோம் என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருந்தால் வாழ்நாள் சோகமாகவும், சுமையாகவும் தானே அமையும்?
துடுப்புகள் இல்லாப் படகு,அலைகள் அழைக்கின்ற திசையெல்லாம் போகும்!அதுபோன்றுதான் இலட்சியம் இல்லாதவரின் வாழ்க்கையும் திசை மாறிப் போகும். பறவைகள் உணவைத் தேடி உண்கின்றன. இரவில் உறங்கி ஓய்வு கொள்கின்றன. ஜோடிகளாக இன்பமாக இருந்து இனவிருத்தி செய்கின்றன. அது போல மனிதன் சாப்பிட்டும், தூங்கியும், சந்ததி பெருக்கியும் சராசரி வாழ்வு நடத்தினால் என்ன மகிழ்ச்சி இருக்கிறது?
இளம் வயதிலேயே எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை ஆராய்ந்து, எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தால் வெற்றி பெறலாம் என்பதை தேர்வு செய்து, யாரை முன்மாதிரியாக கொண்டால் முன்னேறலாம்என்பதை முடிவு செய்து, இலட்சியத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். பெற்றோர் வற்புறுத்தலுக்காகவும், சக மாணவர் ஒரு துறையில் சாதிக்கிறார் என்பதற்காக அதே துறையில் ஈடுபடுவது புத்திசாலித்தனம் ஆகாது.
இளமையில் இருந்தே
சுவாமி விவேகானந்தருக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு இருந்தது. கடவுளை நேரில் காண வேண்டும் என்னும் தணியாத ஆர்வம் நெஞ்சில் தகித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவரது தந்தை மகனுக்கு மணம் முடிக்க எண்ணினார். ஆனால் விவேகானந்தரோ, திருமணமா வேண்டவே வேண்டாம்! உலகம் முழுவதும் சுற்றியேனும் உள்ளம் நினைத்ததை ஈடேற்ற வேண்டும் என்று எண்ணினார்.
செல்வந்தர் ஒருவரின் மகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக பேசி முடித்துள்ளதாக தந்தை சொன்னார். நீ இங்கிலாந்து சென்று ஐசிஎஸ் படிக்க ஆவணம் செய்வதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். நீ வளமான வாழ்க்கை நடத்தலாம் என்றார் தந்தை.
விவேகானந்தர் மன்னியுங்கள் திருமணம் எனும் பந்தத்திற்குள் சிறைப்பட விருப்பமில்லை, வெறும் அதிகாரமும், செல்வமும் எனக்குத் தேவையில்லை. உயர்ந்த ஞானம் என்னும் ஆன்மிகச் செல்வத்தை பெற விரும்புகிறேன். இலட்சியப் பாதையில் செல்ல விடுங்கள் என்றார். தந்தைக்காக இலட்சியத்தை விட்டிருந்தால் விவேகானந்தரை அவரது குடும்பமும் சுற்றி இருப்பவர்களும் வேண்டுமானால் பாராட்டியிருக்கலாம். ஆனால் உள்ளம் உறுதி மிக்க அவரை இன்று உலகமே பாராட்டுகிறதே!
விவேகானந்தர் போலவே நேருவின் வாழ்வில் அற்புதம் நிகழ்ந்தது. செல்வமிக்க குடும்பத்தில் பிறந்த ஜவஹர்லால் நேரு, காந்தியின் கொள்கையால் கவரப்பட்டு அரசியலில் ஈடுபட விரும்பினார். இங்கிலாந்தில் சட்டப் படிப்பு படித்த நீ வழக்கறிஞராக பணியாற்றினால் வாழ்நாள் முழுவதும் சுகமாக வாழலாம் அரசியல் மிக ஆபத்தானது. அதில் நீ ஈடுபட்டால் சிறைவாசம் தான் அனுபவிக்க நேரிடும் என குடும்பத்தினர் எச்சரித்த போதும் நேரு தன் முடிவில் உறுதியாக இருந்தார். அதனால் தான் இந்தியாவின் முதல் பிரதமர் என்ற நிலைக்கு உயர்ந்தார்.
நடுக்கடலில் மாலுமியை இழந்த நிலையில் கப்பல் மாட்டிக்கொண்டால் உண்டாகும் ஆபத்தை விவரிக்க முடியுமா? குறிக்கோள் இல்லாத மனித வாழ்வும் அது போலத்தான்.முடியும்! என்ற எண்ணம் எப்போதும் மூளைக்குள் நம்பிக்கை மின்சாரத்தைப் பாய்ச்ச வேண்டும். முடியாது!என ஒரு முறை நினைத்தால் போதும் நெஞ்சத்தின் ஆற்றல் நிலை குலைந்து போகும். ‘முடியும்’ என்பது ஆக்க சக்தி, முடியாது என்பது நச்சு சக்தி. அது ஒரு துளி நச்சு போதும் நமது உற்சாகத்தைச் சிதைப்பதற்கு! ஆகவே அதற்கு இடம் கொடுத்து விடாதீர்கள்.
நல்ல சிந்தனைகள் உருவாவதற்கு நம்முடைய சுற்றுச்சூழலும் ஒரு காரணமாக அமைகிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் கூட உங்களுடைய இலட்சிய வேட்கையை உதாசீனப்படுத்தக் கூடும்.ஏற்கனவே பலருடைய வாழ்க்கையில் நடந்த பல தோல்விகளை நினைவு கூர்ந்து உங்களைப் பயமுறுத்தி முயற்சிச் சிறகுகளை முறிக்க முனையக்கூடும்.நண்பர்களில் சிலர், இதெல்லாம் வேண்டாத வேலை, உன்னால் முடியாது என்று உங்களுடைய முன்னேற்ற முனைப்பு சிந்தனையை முளையிலேயே கிள்ளி எறியலாம். அதற்கெல்லாம் இசைந்து போகக்கூடாது. உங்களுடைய இலட்சியத்தில் பொதுநலனும், பொறுப்புணர்வும் கலந்து இருக்கும் என்றால், அவர்களுடைய எதிர்மறை எண்ணத்தையே எச்சரிக்கை மணி ஓசையாகக் கொண்டு, கவனமாக முயற்சிச் சிறகுகளை விரித்து அகன்ற வானத்தையும் அளக்க முடியும்! இதற்கு உதாரணமாய் இந்த சாதனைப் பெண்மணியை சொல்லலாம்.
பாலக்காட்டைச் சேர்ந்த மரியா, தெங்கா கோகோ என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். தேங்காய்ச் சிரட்டையில் பலவிதமான பயன்பாட்டுப் பொருள்களைத் தயாரிக்கின்றார்.
குறைந்த முதலீட்டில், திறமையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு லட்சக் கணக்கில் வருமானம் ஈட்டுகிறார்.
மரியா மும்பையில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ முடித்த பிறகு, ஸ்பெயின் நாட்டுக்குச் சென்று எம்பிஏ படிப்பை கல்விஉதவித்தொகை மூலமாகப் பெற்றார். படிப்பை முடித்துவிட்டு மீண்டும் மும்பை திரும்பிய அவர், இரண்டு ஆண்டுகள் கார்ப்பரேட் துறையிலும், அதன் பிறகு மற்றொரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் என மொத்தம் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தார்.
கேரளாவுல வருஷம் முழுக்க தேங்காய்கள் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கிறது. அதிலேருந்து கிடைக்கிற சிரட்டை, தென்னை நார்க்கழிவு, எண்ணெய்னு பலதரப்பட்ட பொருள்களையும் உற்பத்தி யாளர்கிட்டேருந்து வாங்கி, சோதனை முயற்சியாகத் தெரிஞ்சவங்களுக்கு விற்பனை செய்தார். தேங்காய்ச் சிரட்டையில தயாரிச்ச பொருள்களுக்கு வரவேற்பு கிடைச்சது. 10,000 ரூபாய் முதலீட்டுல, 2020 வீட்டிலிருந்தபடியே சின்ன லெவல்லதான் இந்தத் தொழிலை ஆரம்பிச்சேன் என்கிறார் மரியா.
தேங்காய்ச் சிரட்டையில் கலைநயம் மற்றும் பயன்பாட்டுப் பொருள்கள் செய்ய, வெப்பமான இடத்துல வைக்கப்பட்ட தேங்காய் சிரட்டைகள் உதவாது. அவை மெஷின்ல பயன்படுத்துறப்போ உடைய வாய்ப்பிருக்கு. அதனால, குளிர்ச்சியான இடங்கள்ல வைக்கப்பட்ட சிரட்டைகளை மட்டுமே வாங்கிப் பயன்படுத்துகிறார். ஸ்பூன், கரண்டி, மெழுகுவர்த்தி ஸ்டாண்டு, டீ கப் மாதிரியான சின்ன பொருள்கள் செய்ய, அரைமூடி தேங்காய் சைஸ்ல இருக்கும் சிரட்டைகள்கூட போதும். பெரிய பொருள்கள் செய்யும்பட்சத்துல, முழு தேங்காய்தான் வாங்கணும்.
தேவையான வடிவத்துக்கு ஏற்ப அந்த முழுத் தேங்காயை உடைத்து, அதுக்குள்ள இருக்கிற தேங்காய் பத்தையை பக்குவமா வெளிய எடுத்து, பத்தையைத் தனி விலைக்கு வித்திடுவோம். பின்னர், சேதாரமாகாத வகையில மெஷின் மூலமா சிரட்டையின் மேற்புறத்தை ஷைனிங்கா மாத்துவோம். அதுல, பெயின்ட் உட்பட எந்த ரசாயனமும் பூச மாட்டோம் என்கிறார் மரியா.
இந்தப் பயன்பாட்டுப் பொருள்களை, சாதாரண நீரால கழுவினாலே போதும். தேவைப்பட்டா பாத்திரம் துலக்குற சோப் அல்லது ஜெல் அல்லது பவுடரை பயன்படுத்தியும் கழுவலாம். முறையா பராமரிச்சா, இவை பல ஆண்டுகள் வரை உழைக்கும். சமையல் மற்றும் வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள், ரிட்டர்ன் கிஃப்ட், விளையாட்டுப் பொருள்கள் உட்பட 40-க்கும் அதிகமான பொருள்களைத் தயாரிக்கின்றார்.
கேரளாவில் தேங்காய்கள் அதிகமா கிடைப்பதால் இதில் தயாரிக்கப்படுற அலங்காரப் பொருள்களுக்கு உள்ளூர்ல சுமாரான வரவேற்புதான் கிடைக்கின்றது. ஆனால், வெளிமாநிலத்தினர் மற்றும் பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், சென்னை, மும்பை உள்ளிட்ட நகரப் பகுதியினர் இந்தப் பொருள்களை ஆர்வமாக வாங்குகின்றனர். அதனால், ஷோரூம் ஆரம்பிக்காமல், ஆன்லைன் வர்த்தகத்துல் மட்டுமே கவனம் செலுத்துகிறார். இயற்கை அங்காடிகளுக்கும் பொருள்களை விற்பனை செய்கிறார், வெளிநாடுகளுக்கும் வர்த்தகம் செய்வதுடன், மாதம் பல லட்சம் ரூபாய் வருமானம் சம்பாதிக்கிறார்.
தேங்கா கோகோ நிறுவனம் பள்ளிகள் மற்றும் கேரள அரசுடன் இணைந்து தேங்காய்ச் சிரட்டைகளால் ஆன பதக்கங்கள் மற்றும் பேட்ஜ்களை உருவாக்கியுள்ளது. மேலும், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மூடிகளைக்கொண்ட காற்றுப்புகாத கண்டெய்னர்கள் போன்ற சவாலான தயாரிப்புகளையும் இது உருவாக்கியுள்ளது. வண்ணங்களையும் அழகியலையும் மேம்படுத்துவதற்காகப் பிரத்யேக சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத எனாமல் ஃபினிஷிங் முறையையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகால உழைப்பிற்குப் பிறகு, தேங்கா கோகோ நிறுவனம் ஒரு சாதாரண கைவினைப் பொருட்கள் சந்தை என்ற எல்லையைத் தாண்டி, பல்வேறு தொழில் துறைகளிலும் எல்லைகளை கடந்து வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.
பரிசுப் பொருட்கள் இவர்களின் உள்நாட்டு வணிகத்தின் முக்கியப் பங்காக விளங்குகின்றன. மேரியட் மற்றும் தாஜ் போன்ற இந்தியாவின் பிரீமியம் நட்சத்திர ஹோட்டல் குழுமங்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை இந்த நிறுவனத்திடமிருந்தே வாங்குகின்றன.
தேங்கா கோகோ என்ற பிராண்டின் நிறுவனரான மரியா, ஒரு காலத்தில் வெறும் குப்பையாகவும் கழிவாகவும் கருதப்பட்ட தேங்காய் சிரட்டைகளை, இன்று உலகமே வியந்து பார்க்கும் வீட்டு உபயோக மற்றும் அலங்காரப் பொருட்களாக மாற்றி இளம் வயதிலேயே சாதித்து உள்ளார்.
புதிய சிந்தனைகளை உருவாக்கி, அதைக் கூர்மையாக்கி, அதை வலிமையாக்கி, சவால்களை சந்தித்தால் இலக்குகளை அடைவது சாத்தியமே! சாதனைகள் ஒருபோதும் திடீரென நிகழ்வதில்லை, திட்டமிட்ட உழைப்பால், விடாமுயற்சியால் தளராத நம்பிக்கையால் நிகழ்வது என்பது மரியாவின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் உன்னதப் பாடமாகும்.
