*விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி : புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திராட்சை பயிரிட்டு ஏற்றுமதி செய்து விவசாயிகள் பயனடைய வேண்டுமென கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், பையூரில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஒருங்கிணைந்து, திராட்சை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாமினை நடத்தியது.
இம்முகாமினை கலெக்டர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். மேலும், நவீன திராட்சை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த கையேட்டை வெளியிட்டு, கலெக்டர் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், தோட்டக்கலைத்துறையில் பெயர்பெற்ற ஒரு மாவட்டம். பல்வேறு பயிர்களை சிறப்பாக பயிரிடக்கூடிய ஒரு சிறந்த மாவட்டமாகும். திராட்சை பயிரிட்டு ஏற்றுமதி செய்து பயன்பெறலாம். வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஒருங்கிணைந்து நடத்திய திராட்சை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது.
அதே போல், தமிழ்நாட்டிலேயே தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் திராட்சை அதிகம் பயிரிடப்படுகிறது. இதில் முக்கியமான பன்னீர் திராட்சை பயிரிடப்பட்டு கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அந்த மாவட்டங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப உதவியுடன், பையூர் தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவில் மாதிரி திராட்சை சோதனை பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 11 வகையான திராட்சை ரக செடிகள் வைத்துள்ளனர். இந்தியாவில், திராட்சை ஏற்றுமதி மிகச் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
திராட்சையை பொறுத்தவரை 16 எம்எம் இருந்தால் தான், அவை ஏற்றுமதிக்கு உகந்ததாகும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் திராட்சை சாகுபடி குறித்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திராட்சை பயிரிட்டு ஏற்றுமதி செய்து பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, 11 வகையான திராட்சை ரகங்கள் செடி வளர்ப்பு பணிகளை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் இந்திரா, தோட்டக்கலைத்துறை அரசு கலைக்கல்லூரி முதல்வர் அனிசா ராணி, பிராந்திய மேலாளர் ஷோபனா குமார், பேராசிரியர்கள் செந்தமிழ் செல்வி, ஸ்ரீ வித்யா, திலகம், சுந்தரமூர்த்தி, கிருஷ்ணவேனி மற்றும் விவசாயிகள், தோட்டக்கலை கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
