‘கடவுள் கருணையால் வந்து சேர்ந்தோம்’ நேபாளம் யாத்திரை சென்ற 28 பேர் கோவை திரும்பினர்: உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு
கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி பகுதியில் இருந்து நேபாளத்திற்கு யாத்திரை சென்ற 28 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். நேபாளத்தில் கடந்த மாதம் 26ம் தேதி பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் நேபாளத்திற்கு யாத்திரை சென்ற இந்தியாவை சேர்ந்தவர்கள் உள்பட பலர் சிக்கினர். இந்த வெள்ளத்தில் 939 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நேபாளத்திற்கு சென்றிருந்த இந்தியர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்றுவரை 158 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், நேபாளத்திற்கு யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்டனர். இவர்களை கண்டறிந்து மீட்கும் பணியில் ஒன்றியஅரசின் துணையுடன் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், கோவை, திருப்பூர், நீலகிரி பகுதியை சேர்ந்த 28 பேர் மீட்கப்பட்டு டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தனர்.
இவர்களை விமான நிலையத்தில், அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் பூங்கொத்து கொடுத்தும், கட்டியணைத்து கண்ணீர் மல்க வரவேற்றனர். கோவை திரும்பிய 28 பேரும் கைலாய யாத்திரைக்காக கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நேபாளம் வழியாக தங்களது பயணத்தை மேற்கொண்டிருந்தனர். கடவுள் கருணையால் தாங்கள் பெரும் ஆபத்தில் இருந்து தப்பியதாக அவர்கள் உருக்கமாக கூறினர். இது குறித்து பூஜா, ஹர்ஷா ஆகியோர் கூறியதாவது: வெள்ளம் மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல்கள் கிடைத்தபோது எங்களது குடும்பத்தினர் மிகுந்த அச்சத்திலும் பதற்றத்திலும் இருந்தனர். எங்களது பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கவலைப்பட்டனர்.
தொடர்ந்து, சீனா அரசு எங்களை பாதுகாப்பான முறையில் அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் மூலம் நாங்கள் பாதுகாப்பாக வெளியேற முடிந்தது. மேலும், எங்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசும், தமிழக அரசும் உறுதுணையாக செயல்பட்டது. அதிகாரிகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். நேபாள வெள்ள பாதிப்பு ஒரு நாள் முன்பு வரை நாங்கள் நேபாளத்தில் இருந்தோம்.
அதன் பின்னர் கைலாய யாத்திரைக்காக புறப்பட்டு சென்றதால் தப்பித்தோம். அந்த நேரத்தில் ஏற்பட்ட சம்பவத்தை நினைத்தாலே அச்சமாக உள்ளது. தற்போது பாதுகாப்பாக குடும்பத்தினரிடம் திரும்பியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் கருணையால் நாங்கள் இங்கு வந்து சேர்ந்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.



