சென்னை: சேலம் ஸ்பார்டன்ஸ் அணியுடனான டிஎன்பிஎல் டி20 லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. கேப்டன் அபிஷேக் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டானது அந்த அணிக்கு பின்னடைவை கொடுத்த நிலையில், சேலம் ஸ்பார்டன்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்தது.
ஹரி நிஷாந்த் அதிகபட்சமாக 36 ரன், எம்.ஈஷ்வர் 31, ராஜேந்திரன் விவேக் 29 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். நெல்லை பந்துவீச்சில் இமானுவேல் செரியன் 3, என்.எஸ்.ஹரிஷ் 2, வள்ளியப்பன் 1 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



