நெல்லை: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் 4 மற்றும் 5வது நடைமேடையில் ரயில் பயணிகள் நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் மற்றும் தூத்துக்குடியில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களை எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சியை சேர்ந்த கந்தசாமி மகன் பாண்டிதுரை (29) 4வது நடைமேடையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அங்கு இந்தியில் பேசியவாறு வந்த வடமாநில வாலிபர் திடீரென கட்டையால் பாண்டித்துரையை தலையில் தாக்கியுள்ளார். அவர் தப்பி ஓடி ரயிலில் ஏறி கதவை மூடிக் கொண்டார்.
தொடர்ந்து அந்த வாலிபர் கோவை ரயிலுக்காக நின்றிருந்த கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இருட்டி, கடத்தின் கடவு பகுதியை சேர்ந்த பிரசாத் (49) என்பவரையும், கோவை பெரியநாயக்கன் பாளையம் நியூ காலனியை சேர்ந்த தங்கப்பன் (72) என்பவரையும் கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். இதை பார்த்து பயணிகள் அலறியடித்து ஓடினர். காயமடைந்த மூவரையும் ரயில்வே போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தங்கப்பன் நேற்று காலை இறந்தார். சிசிடிவி காட்சியின் அடிப்படையில் தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகே நின்றிருந்த பீகார் மாநிலம் மண்டூலாவை சேர்ந்த சூரஜ்(25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மவுனம் சாதிப்பதால் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.