சென்னை: மதுரை பேந்தர்ஸ் அணியுடனான டிஎன்பிஎல் டி20 லீக் ஆட்டத்தில், நெல்லை ராயல் கிங்ஸ் 72 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சேப்பாக்கம் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த மதுரை அணியின் ராம் குமார் 0, சித்தார்த் 19, சதுர்வேத் 12 ரன் எடுத்து இமானுவேல் செரியன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த ஹரி 35 ரன் எடுத்து அவுட்டானார்.
சோயிப் முகமது கான் 65 ரன் (43 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வெளியேறினார். மதுரை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன் குவித்தது. அதீக் உர் ரகுமான் 50 ரன் (27 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), சரவணன் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நெல்லை பந்துவீச்சில் செரியன் 3, சச்சின் ரதி, யுதீஸ்வரன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ், 19.1 ஓவரில் 126 ரன்னுக்கு சுருண்டு 72 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. குருசாமி அஜிதேஷ் அதிகபட்சமாக 56 ரன் (45 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். ரித்திக், ஹரிஷ் தலா 14, அதிஷ் 13, முகிலேஷ் 12 ரன் எடுத்தனர். பேந்தர்ஸ் பந்துவீச்சில் சோயிப் கான், குர்ஜப்னீத், விக்னேஷ், பெரியசாமி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். மதுரை 2 புள்ளிகள் பெற்றது.



