Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நெல்லையில் பயங்கரம் வாலிபர் தலைதுண்டித்து கொலை: 2 பேர் போலீசில் சரண்; பதற்றம், போலீசார் குவிப்பு

நெல்லை: நெல்லை சந்திப்பு மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் வாலிபர் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2பேர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். நெல்லை சந்திப்பு மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (43). பெயின்டரான இவர் அதே பகுதியை சேர்ந்த விஜயலட்சுமியை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். விஜயலட்சுமி போஸ்ட்வுமனாக பணியாற்றி வருகிறார்.

பாஸ்கருக்கும் கட்டுடையார்குடியிருப்பை சேர்ந்த மணிகண்டன் மற்றும் பொன்ராஜூக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் தச்சநல்லூர் டாஸ்மாக் பாரில் மது குடித்து விட்டு பாஸ்கர் மொபட்டில் திரும்பிக்கொண்டிருந்தார். வீட்டருகே வந்தபோது 2 பைக்குகளில் வந்த 4 பேர் கும்பல் திடீரென அவரது மொபட்டை மறித்து அரிவாளால் வெட்ட முயன்றனர். இதனால் மொபட்டை கீழே போட்டு விட்டு தப்பியோடினார். ஆனால் அவரை விடாமல் துரத்தி சென்ற கும்பல் சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

பாஸ்கரின் தலையை துண்டித்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் தனியாக வீசி எறிந்து விட்டு கும்பல் தப்பி சென்றது. தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே கட்டுடையார்குடியிருப்பை சேர்ந்த மணிகண்டன் (27), பொன்ராஜ் (26) ஆகியோர் அரிவாளுடன் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

கொலையால் மணிமூர்த்தீஸ்வரம், கட்டுடையார்குடியிருப்பு பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மணிகண்டன், பொன்ராஜ் ஆகியோருக்கும் பாஸ்கருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் பெண் தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

8 மாதங்களுக்கு முன்னர் தச்சநல்லூரிலுள்ள டாஸ்மாக் பாரில் பாஸ்கர் மது குடித்து கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டிக்கொல்ல முயற்சித்தனர். அவர்களிடமிருந்து பாஸ்கர் தப்பினார். இப்போது இந்த வழக்கினை போலீசார் கிடப்பில் போட்டு விட்டதாக பாஸ்கரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

* மூதாட்டியை அடித்துக்கொன்று 40 பவுன் நகைகள் கொள்ளை

நாகர்கோவில் வடிவீஸ்வரம் கீழரதவீதியை சேர்ந்தவர் சின்னம்மாள்(77). கணவர் இறந்துவிட்டார். இவரது 3 மகள்களும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இரண்டு மாடிகொண்ட வீட்டின் கீழ் தளத்தில் சின்னம்மாள் தனியாக வசித்து வந்தார். மற்ற இரு தளத்தையும் வாடகைக்கு விட்டு இருந்தார். நேற்று மதியம் மகள் சங்கரி தாய்க்கு மதிய சாப்பாடு கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் மற்றொரு மகளான வனஜா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் ரத்தகாயத்துடன் சின்னம்மாள் இறந்து கிடந்தார். அவர் அணிந்து இருந்த நகையையும் காணவில்ைல. புகாரின்படி கோட்டார் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் ஹெல்மெட் அணிந்த வாலிபர் சின்னம்மாள் வீட்டிற்குள் நுழைவதும், சிறிது நேரம் கழித்து வெளியே வருவதும் தெரியவந்தது.

அவர் சின்னம்மாவை தாக்கி கொலை செய்து உடலில் தீ வைத்துள்ளார். இதில் தலைமுடி, கைவிரல்களும் கருகியுள்ளது. அவர் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த நகை என சுமார் 40 பவுன் நகை மற்றும் ரொக்கபணத்தை கொள்ளையடித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

* 2 சிறுவர்களை கொன்று கிணற்றில் சடலம் வீச்சு

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பெத்தூர் பகுதியை சேர்ந்த முன்னாள் விஏஓ பிரகாசத்தின் விவசாய நிலத்தின் அருகே சுமார் 40 அடி ஆழ கிணறு உள்ளது. இந்த கிணற்றில் கிணற்றுக்குள் 2 சிறுவர்களின் சடலங்கள் மிதப்பதை நேற்று பிரகாசம் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவரது தகவலின்படி ஆலங்காயம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வந்து 2 சிறுவர்களின் அழுகிய சடலங்களை மீட்டனர்.

சிறுவர்கள் யார் என்று தெரியவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் 2 சிறுவர்களையும் கொலை செய்து கிணற்றில் வீசி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. ஒருவருக்கு சுமார் 16 வயதும், மற்றொருவருக்கு சுமார் 9 வயதும் இருக்கலாம் என்றும், இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும் தெரியவந்தது. அவர்கள் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்தும், அப்பகுதியில் மாணவர்கள் யாரும் மாயமாகி உள்ளனரா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.