நெல்லை கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயான உதவி சார்பு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரியை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிப்பு!!
நெல்லை : நெல்லை கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயான உதவி சார்பு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரியை கைது செய்ய மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் (27). இவர் காதல் விவகாரத்தில் கடந்த ஜூலை 27-ம் தேதி நெல்லையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் சரவணன், மனைவி கிருஷ்ணவேணி, இவர்களின் மகன் சுர்ஜித் (23) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஏற்கனவே சுர்ஜித், அவரது தந்தை சரவணன், உறவினர் ஜெயபாலன் ஆகிய மூவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித்தின் தந்தை சரவணன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த வழக்கில் சுர்ஜித்தின் தாயான உதவி சார்பு ஆய்வாளர் கிருஷ்ண குமாரிக்கும் சம்பந்தம் இருப்பதாக நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் வாதம் செய்தனர். அதனைத் தொடர்ந்து 800 பக்கம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட போதிலும் சுர்ஜித்தின் தாயை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்யவில்லை. இதனால் இந்த வழக்கை விசாரணை செய்த நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஹேமா, சுர்ஜித்தின் தாயான உதவி சார்பு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரியை கைது செய்ய பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தார்.
