பேச்சு வார்த்தையில் உடன்பாடு; கிண்டி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ்
சில நாட்களுக்கு முன்னர் விக்னேஷ் தனது தாயை தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். இந்நிலையில் இன்று, காலை கிண்டி பன்னோக்கு மருத்துவமனைக்கு வந்த விக்னேஷ், தாய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவரை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த உரையாடல் சுமார் அரை மணி நேரம் வரை நீண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் திடீரென விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மருத்துவரை சரமாரியாக தாக்கியிருக்கிறார். இதில் மருத்துவர் படுகாயமடைந்துள்ளார்.
அவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜிக்கு கழுத்து, தலை, காது என பல இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மறுபுறம் தாக்குதலை நடத்திய விக்னேஷை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீஸ் வசம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். சம்பவம் நடந்த கிண்டி மருத்துவமனையிலும், சேலம் மருத்துவமனையிலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் நடந்த கிண்டி மருத்துவமனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பேட்டியளித்த உதயநிதி, இனி வரும் நாட்களில் மருத்துவர்களின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று உறுதியளித்தார். அதேபோல மருத்துவ சங்கங்களுடன் தலைமை செயலகத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று கூறி, அவர்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.