Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஈரானுடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது: அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

தோஹா: ஈரானுடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரானின் ராணுவ கட்டமைப்புகள் மற்றும் அணுசக்தி தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இதற்கு பதிலடியாக ஈரான், உலக வர்த்தகத்தின் முக்கிய பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ மூடியதோடு, அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த போரை முடிக்க, பாகிஸ்தான், கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தீவிர மத்தியஸ்தம் செய்தன.

இதன் பலனாக, கடந்த மாதம் 17ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் “இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்” டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டனர். இரு நாடுகளுக்கும் இடையே 60 நாட்கள் தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதற்கு பிறகும் கடந்த வாரம் இருதரப்பும் கடலில் சில ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதால் பதற்றம் நிலவியது. இந்த சூழலில்தான், ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப பேச்சுவார்த்தை நேற்று கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், ஈரானை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றும் பணிகள் நல்ல திசையில் நகர்கின்றன. பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாக தாக்கினோம். ஆனால் தற்போது ஒருவருக்கொருவர் மிக நன்றாக பேசி வருகிறோம். ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்கு பிறகு, அடுத்தகட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும்’ என்றார். அதே போன்று இந்த பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளதாக கத்தார் வெளியுறவு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

சுமுகமாக நடக்கும் பேச்சுவார்த்தை; துணை அதிபர்

பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறியதாவது: தோஹாவில் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் அமெரிக்காவுக்கு சாதகமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப அளவிலான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அணுசக்தி விவகாரம் குறித்த பேச்சுவார்த்தைகள் விரைவில் துவங்க உள்ளது. இது மிகவும் ஆரம்பக்கட்டம்தான், ஆனால் நன்றாக சென்று கொண்டிருக்கின்றன. பேச்சுவார்த்தையாளர்கள் தோஹாவில் ஈரானியர்கள், கத்தார் நாட்டினர் மற்றும் பிறருடன் அமர்ந்து, முக்கிய பேச்சு நடத்தி கொண்டிருக்கின்றனர். இந்த பேச்சுவார்த்தை பலவீனத்தால் அல்ல, மாறாக பலத்தால் சாத்தியமானது. அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போதாவது ஈரான் மீது குண்டுகளை வீச சொன்னால், அது ஒரு காரணத்திற்காகத்தான் இருக்கும்.