Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தேவை தீர்வு... அறிவுரை அல்ல!

இந்தியப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான மற்றும் சவாலான பிரச்னைகளில் ஒன்று வேலைவாய்ப்பின்மை. இந்திய மக்கள் தொகையில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 36.7 கோடியாக உள்ளது. அதிலும், 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் 35 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர். இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாட்டில் அனைவருக்கும் தகுதியான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக வேலைவாய்ப்பின்மை 3.1 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2026, ஏப்ரல் மாத நிலவரபடி இந்தியாவின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை சராசரியாக 5.2 சதவீதமாக உள்ளது.

அதில், கிராமங்களில் 4.6 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 6.6 சதவீதமாகவும் வேலைவாய்ப்பின்மை உள்ளது. கட்டமைப்பு வேலையின்மை, சுழற்சி வேலையின்மை, தொழில்நுட்ப வேலையின்மை உள்ளிட்ட வடிவங்களில் இந்திய பொருளாதார சூழலில் காணப்படுகிறது. திறன் பற்றாக்குறை, அமைப்புசாரா துறையின் ஆதிக்கம், உற்பத்தித் துறையின் மெதுவான வளர்ச்சி ஆகியவை இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மைக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இளைஞர்களின் நிலைமை இப்படி இருக்கையில், பூச்சிகளுடனும் ஒட்டுண்ணிகளுடனும் இளைஞர்களை ஒப்பிட்டு நீதிபதி ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, நிச்சயத்தன்மையற்ற எதிர்காலம் என விரக்தியின் பிடியில் இருக்கும் இளைஞர்களுக்கு, இந்த ஒப்பீடுகள் மனதளவில் பெரிய காயத்தை ஏற்படுத்தி விட்டன. இதன் தாக்கமாக தான் இணையத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்று ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு, தொடங்கிய ஆறே நாளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களை தன் பக்கம் இழுத்தது. இது ‘ஜென் ஸி’ தலைமுறையினரின் கொந்தளிப்பின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்பட்டது. ஆனால், இந்த கொந்தளிப்பு மற்ற நாடுகளை போன்று பெரும் போராட்ட வெடிப்பாக மாறவில்லை.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், நேபாளம் மற்றும் இலங்கையில் ‘ஜென் ஸி’ தலைமுறையினரின் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. நேபாளத்தில், அந்த இயக்கம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, அந்நாட்டு அரசாங்கமே பதவி விலக வேண்டிய சூழலையும் உருவாக்கியது. ஒன்றிய அரசோ அல்லது உயர்பதவிகளில் இருக்கும் அதிகாரிகளோ ‘ஜென் ஸி’ தலைமுறையினரை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. அதே வேளையில் இளைஞர்கள் மீதான வெறுப்பு வார்த்தைகளோ அல்லது வெற்று அறிவுரைகளையும் கொடுக்க வேண்டியதில்லை. இந்திய இளைஞர்கள் எக்காலத்திலும் வன்முறையைத் தூண்டுவதில்லை. அதேவேளையில் சமூகத்தில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் பகடிக்குள்ளாகும் போது, அவர்கள் கிளர்ச்சியடைவார்கள்.

பொருளாதாரத்தில் வளர்ந்து வர விரும்பும் நாடுகள், வெறும் வேலைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், படித்த இளைஞர்களின் தகுதிக்கு ஏற்ற தரமான மற்றும் நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே தற்போதைய முக்கியத் தேவையாகும். இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களின் பிரச்னைகளுக்கு தேவை நிரந்தர தீர்வு தானே தவிர, வெற்று அறிவுரையல்ல. இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்ட பிரச்னையை யாரும் பேசக்கூடாது என மடைமாற்ற நினைக்கிறதே தவிர, இளைஞர்களின் நலனில் ஒன்றிய பாஜ அரசு அக்கறை செலுத்த மறுக்கிறது என்பது தான் இன்றைய தருணத்தில் நிதர்சனமான உண்மை.