தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கிடையாது என்ற சூழல் இருந்தது. பிளஸ்2 மதிப்பெண்கள் அடிப்படையிலும், இடஒதுக்கீடு அடிப்படையிலும் மாணவ, மாணவிகள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர எளிமையான வழிவகைகள் இருந்தன. இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு தேசிய அளவில் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு என ஒன்றிய அரசு, நீட் தேர்வை கையில் எடுத்த நாள் முதல் பல்வேறு குளறுபடிகளும், பிரச்னைகளும் ஏற்பட்டு வருகின்றன.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டங்கள், மதிப்பெண்களை கணக்கிடுவதில் முரண்பாடுகள், தொழில்நுட்ப கோளாறுகள் அதிகம் நடந்த வண்ணம் உள்ளது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் தமிழகத்தில் 4 பேர் உள்பட நாடு முழுவதும் எண்ணற்ற உயிர்பலிகள் நடந்தும் ஒன்றிய அரசு எதையுமே கண்டு கொள்ளவில்லை. நீட் தேர்வில் ஆள் மாறாட்டங்கள் அடிக்கடி நடக் கின்றன. அதிலும் வடமாநிலங்களில் ஆள் மாறாட்டங்களில் சிக்குவோர் அதிகம் உள்ளனர்.
பிளஸ்2 தேர்வில் பெயிலாகாமல் தப்பிய சில மாணவர்கள், நீட் தேர்வில் அதிகபட்ச மதிப்பெண்களை பெற்று சாதிப்பது, அதன் மதிப்பீட்டு முறையில் உள்ள குளறுபடிகளை காட்டுகிறது. ஒரே தேர்வு மையத்தில் இருந்து 8 பேர் முழு மதிப்பெண்கள், தங்களுக்கு வேண்டிய மாநிலங்களில் தேர்வு எழுதுவோருக்கு கருணை மதிப்பெண்கள் உள்ளிட்ட ஆச்சரியங்களை நீட் தேர்வில் மட்டுமே காணலாம்.
இதுமட்டுமின்றி வினாத்தாள் கசிவு நீட் தேர்வின் தலையாய பிரச்னையாக இப்ேபாது உருவெடுத்து வருகிறது. பல மாதங்கள் கஷ்டப்பட்டு, மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்கிற கனவோடு உழைக்கும் மாணவ, மாணவிகள், தேர்வு எழுதிய பின்னர், வினாத்தாள் கசிவு என்ற பெயரில் தேர்வு ரத்தானால் மனம் நொந்து போவர். இவ்வாண்டு அதுதான் நடந்தேறியது. இப்போது நீட் மறு தேர்வு என்ற பெயரில் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் ராணுவ ஹெலிகாப்டரில் வந்திறங்கின.
வங்கி லாக்கர்கள் பணம், நகை போன்ற பொக்கிஷத்திற்கு பதிலாக, நீட் தேர்வு வினாத்தாள்களை சேமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன. ஒன்றிய அரசின் ஓட்டை உடைசலான தேர்வு முகமை, முறைகேடுகளை தடுக்க முடியாமல் ராணுவ உதவி தேடி தொடர்ந்து திண்டாடி வருகிறது. நீட் தேர்வை பொறுத்தவரை தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்வதிலும் குளறுபடிகள் நடக்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யும்போது, அவர்கள் முந்தைய தினமே சென்று தேவையற்ற அலைக்கழிப்புகளையும், பண விரயத்தையும் எதிர்கொள்கின்றனர். அதன்பின்னர் நீட் தேர்வு அறைக்குள் நுழைவது, மாய குகைக்குள் செ1ல்வது போல் அச்சத்தை தருவதாகும். கம்மல், மூக்குத்திக்கு தடை, தலைமுடியை கட்ட கூடாது என அங்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் தேர்வு எழுகிற எண்ணத்தையே மழுங்கடிக்க கூடியதாகும்.
நீட் மறுத்தேர்வை நேற்று நாடு முழுவதும் மாணவர்கள் எழுதிய நிலையில், அடுத்து என்ன குழப்பம் நிகழுமோ என்ற அச்சமும் மாணவர்களை வாட்டுகிறது. இந்த குளறுபடிக்கெல்லாம் ஒன்றிய அரசும், தேசிய தேர்வு முகமையுமே காரணமாகும். ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, முன்பு போல் மருத்துவ படிப்புக்கான தேர்வை மாநில அரசின் கையில் ஒப்படைக்க முன்வரலாம். கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ தேவைகளை நிறைவேற்றுவது அந்தந்த மாநில அரசுகளால் மட்டுமே முடியும். நீட் என்னும் அரக்கனை ஒழிப்பதே மருத்துவ துறையின் மகத்தான வெற்றியாக இருக்கும்.


