Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

என்டிஏ கூட்டணியில் கட்சிகளை சேர்க்க குழு அமைக்கவில்லை: அடிச்சார் பாரு நயினார் அந்தர் பல்டி

சேலம்: தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்க பாஜ சார்பில் குழு அமைப்பதாக அதன் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தநிலையில், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இச்சூழலில் சேலத்தில் இன்று, என்டிஏ கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்க குழு அமைக்கவில்லை என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி பல்டி அடித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. இதில், பாரதிய ஜனதா கட்சி கடந்த ஓராண்டிற்கு முன்பே அதிமுகவை தன்வசம் இழுத்து போட்டு, கூட்டணியை அறிவித்தது. சென்னைக்கு வந்த அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சு நடத்தி, கூட்டணிக்குள் கொண்டு வந்தார். எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீடுகளில் அடுத்தடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், இந்த கூட்டணி இறுதி வடிவம் பெற்றது.

அதன்பின்னர், டிடிவி தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்துக் கொண்டனர். அதேபோல், பிரிந்து கிடக்கும் பாமகவில் அன்புமணி தரப்பையும், ஜி.கே.வாசனின் தமாகாவையும் கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளையும் என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வந்து, பிரதமர் மோடி பங்கேற்ற மதுராந்தகம் கூட்டத்தில் கட்சி தலைவர்களை மேடை ஏற்றினர். இப்படி கூட்டணியில் பல கட்சிகளை சேர்க்கும் பணியில் பாஜ தலைமையே முழுமையாக ஈடுபட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை. அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே தேர்தலை சந்திக்கிறோம் என பாஜ தலைவர்கள் கூறி வருகின்றனர். அவர்களின் பேச்சில் அப்படி இருந்தாலும், செயல்பாட்டில் பாஜ தலைமை வகிப்பது போலவே கூட்டணி பேச்சுவார்த்தை, எத்தனை சீட் வழங்குவது போன்ற விஷங்களில் திரைமறைவில் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், வருகின்ற சட்டமன்ற தேர்தல்-2026, சிறப்பாக எதிர்கொண்டு, மகத்தான வெற்றியினை பெற்றிடும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல அமைப்புகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. அதன் அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுசேர்த்திட பாரதிய ஜனதா சார்பில் மாநில குழு அமைக்கப்படுகிறது. அந்த குழுவின் தலைவராக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி. துணை தலைவராக மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பாலச்சந்திரன் நியமிக்கப்படுகிறார்கள், எனக்கூறப்பட்டிருந்தது. கூட்டணிக்கு அதிமுக தலைமை வகிக்கும் நிலையில், என்டிஏ கூட்டணியில் மேலும் பல அமைப்புகளை சேர்க்க பாஜ குழு அமைத்தது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை அளித்தது. மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தலைமை சில கருத்துகளை பாஜ தலைமைக்கு தெரிவித்துள்ளது.

இதனிடையே இன்று காலை எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்திற்கு வந்த பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  பிரதமர் நரேந்திரமோடி பெயரில், நமோ யூத் பவுண்டேஷன் தொடங்கப்பட்டு மாநிலம் முழுவதும் மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் மதுரை பொதுக்கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெற இருந்த நிலையில், மார்ச் 1ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, என்டிஏ கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரும். என்டிஏ கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும் இதுவரை பாஜ சார்பில் தனியாக குழு அமைக்கவில்லை. சந்தர்ப்பம் வரும் போது, எந்தெந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள், யாருக்கு ஒதுக்கப்படும் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். கடந்த 2 நாட்களுக்கு முன் என்டிஏ கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்க வி.பி.துரைசாமி தலைமையில் குழு அமைப்பதாக நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தார். தற்போது அவர், அதிமுகவில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், திடீரென பல்டி அடித்து, அப்படி குழு ஏதும் அமைக்கவில்லை எனக்கூறியுள்ளார்.