Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாவடக்கம் தேவை

இந்திய நாடாளுமன்றத்தில் சோம்நாத் சாட்டர்ஜி, சி.என்.அண்ணாதுரை, வாஜ்பாய், முரசொலி மாறன், இரா. செழியன் போன்ற பல மூத்த தலைவர்கள் அனல்பறக்கும் வாதங்களால் ஒன்றிய அரசுகள் கொண்டு வரும் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரும் அளவுக்கு கருத்துக்களை முன்வைப்பார்கள். தற்போது அந்த வரிசையில் மோடியின் கூட்டணி ஆட்சிக்கு எதிராக தமிழ்நாடு எம்பிக்கள் ஆழமான, வலுவான ஆதாரங்களுடன் கருத்துக்களை கூறி நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்கின்றனர். மேலும் மோடியின் ஆட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகின்றனர். அதிலும் தயாநிதிமாறன், சிவா, வைகோ, கனிமொழி, நெல்சன், வெங்கடேசன், தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்ட சிலர் பேசும்போது ஒன்றிய அமைச்சர்களுக்கு தலைவலியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. கனிமொழி எம்பி பேசுகையில், ‘‘தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஆதரித்ததாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திசைதிருப்பும் விதமாக பேசி வருகிறார்.

தமிழ்நாடு எம்.பி.க்களையும், தமிழ்நாடு மக்களையும் நாகரிகமற்றவர்கள் என ஒன்றிய கல்வி அமைச்சர் கூறியது புண்படுத்துகிறது. ஒன்றிய கல்வி அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும்” என்று கூறினார். இதற்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்து பேசுகையில், ‘‘தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக தவறாக பரப்புரை செய்யப்படுகிறது” என்றார். ஒன்றிய அமைச்சரின் பதிலை ஏற்க மறுத்து திமுக எம்.பிக்கள் மக்களவையில் முழக்கங்களை எழுப்பினர். இதனால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. அதோடு ‘அநாகரிகமானவர்கள்’ என்ற வார்த்தையை தர்மேந்திர பிரதான் கூறியதற்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் நாகரிகமற்றவர்கள் எனப் பேசியதை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மக்களவையில் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

பின்னர் அந்த வார்த்தை அவை குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டது. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் உள்ள பதிவில், ‘‘தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள்.

பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா? தேசிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு அரசு அனுப்பிய பிஎம் திட்டத்தை முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?. நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம். உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல. நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத எங்களை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!” இவ்வாறு கூறியுள்ளார். மாநில உரிமைகள் குறித்து எம்பிக்கள் பேசும்போது, ஒன்றிய அமைச்சர்கள் நாவடக்கத்தோடு பதிலை கூறி அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாகும்.