Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சத்தான காய்கறி பயிர்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் புதுச்சேரி அரசு பள்ளிகளில் இயற்கை காய்கறி தோட்டங்கள்

புதுச்சேரி: இயற்கை விவசாயம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் இயற்கை காய்கறி தோட்டங்கள் அமைக்கும் திட்டத்தினை புதுச்சேரி கல்வித்துறை முன்னெடுத்து வருகிறது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் பூச்சிக்கொல்லி இல்லாத இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிட மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் லாஸ்பேட்டை நாவலர் அரசு மேனிலைப்பள்ளியில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கல்வித்துறையும், மதிய உணவு திட்டத்தில் ஈடுபட்டுள்ள அட்சய பாத்திர நிறுவனத்துடன் இணைந்து லாஸ்பேட்டை ஆர்கானிக் சமையல் தோட்டத்தை பள்ளியில் அமைத்துள்ளனர்.

இதனை கல்வித்துறை செயலர் ஜவகர், கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, துணை இயக்குநர் சிவகாமி ஆகியோர் காய்கறி தோட்டத்தை திறந்து வைத்து பார்வையிட்டுள்ளனர். பாள்ளி வளாகத்தில் 3 ஆயிரம் சதுர அடி நிலத்தில் தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களும், ஊழியர்களும் நாட்டு ரக காய்கறி விதைகளான முள்ளங்கி, வெண்டைக்காய், கத்தரி, மிளகாய், தக்காளி போன்றவற்றை பயிரிட்டுள்ளனர். இந்த ஆர்கானிக் தோட்டத்தை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களும், ஊழியர்களும் இணைந்து பாரமரித்து வருகின்றனர்.

இதேபோன்ற ஆர்கானிக் தோட்டங்கள் இன்னும் பல அரசு பள்ளிகளில் விரைவில் செயல்படுத்தப்பட இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வீடுகள், மாடி தோட்டங்களில் சத்தான காய்கறி பயிர்கள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் (என் வீடு- என் நிலம்) திட்டம் மற்றும் பள்ளிக்கூடங்களில் மருந்தில்லாமல் காய்கறி தோட்டங்களை அமைத்தால் மானியம், இதற்கு தேவையான விதைதொகுப்புகள், சிறு உழவு கருவிகள் மானிய விலையில் வழங்குவதாக கடந்த பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

குறிப்பாக அரசு பள்ளி வளாகங்களில் காய்கறிகள் மற்றும் ஊட்டசத்து தோட்டம் அமைக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு சதுர அடிக்கு ரூ.2.50, அதிகபட்சமாக 4 ஆயிரம் சதுர அடிக்கு ஒரு பள்ளிக்கு ரூ.10,000 வழங்கப்படும். அந்த திட்டத்தின்கீழ் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள காலி இடங்களை தேர்வு செய்து, இத்தகைய தோட்டங்கள் அமைத்து கொள்ளலாம். தற்போதுவரை 3 அரசு பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

நகரப்பகுதி மாணவர்கள் விவசாயத்தை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருப்பதோடு, அதோடு பூச்சிக்கொல்லிகளின் தீமைகள், எந்தெந்த காய்கறியில் எவ்விதமான சத்துகள் உள்ளது என்பதை வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடிகிறது. இதன்மூலம் ஒரு ஆரோக்கியமான உணவுமுறை குறித்த விழிப்புணர்வு சிறுவயதிலே மாணவர்கள் மனதில் பதிய வைக்கப்படுகிறது. இதனால் நல்ல ஆரோக்கியமான சிந்தனை கொண்ட புதிய தலைமுறை உருவாகும்’ என்றனர்.