Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இயற்கை விவசாயம்... இடுபொருட்கள் தயாரிப்பு...ஓய்வுப்பொழுதை அர்த்தமுள்ளதாக்கும் முன்னாள் அரசு ஊழியர்!

அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறுகிறவர் களில் பெரும்பாலானவர்களின் தேர்வு விவசாயமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதில் பாதிப்பேர் ஆர்வமாக இயங்குவார்கள். மீதிப்பேர் சில நாட்கள் கழித்து நமக்கு எதுக்கு இந்த அலைந்த பிழைப்பு? வேலையை வேறு யாராவது பார்த்துக்கொள்ளட்டும். நாம் வீட்டில் பேரப்பிள்ளைகளோடு ஓய்வெடுப்போம் என கிளம்பி விடுவார்கள்.குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி தருவை பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் தனது ஓய்வுக்குப் பிறகு இயற்கை விவசாயம், தன்னைப்போன்ற இயற்கை விவசாயிகளோடு இணைந்து உரம் தயாரிப்பு, மாணவர்களுக்கு ஆர்கானிக் இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து பாடம் எடுத்தல் என தனது ஓய்வு நேரங்களை மிகுந்த அர்த்தமுள்ளதாக மாற்றி வருகிறார். தனது வீட்டின் பின்புறம் உள்ள இயற்கை உரங்கள் தயாரிக்கும் கூடத்தில் கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த அகஸ்டினை ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம்.

``கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் கிளர்க்காக வேலை பார்த்தேன். வேலையில் இருந்தபோதும் நேரம் கிடைக்கும் சமயங்களில் விவசாயத்தைக் கவனித்து வந்தேன். தற்போது ஓய்வு பெற்றுவிட்டதால் முழுநேர விவசாயி ஆகியிருக்கிறேன்’’ என தனது முழுநேர விவசாயி அவதாரம் குறித்து பேசிய அகஸ்டின், மேலும் தொடர்ந்தார்.``மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியகுளம் ஏலாவில் இரண்டரை ஏக்கர் நிலம் இருக்கிறது. இதோடு மேலும் இரண்டரை ஏக்கர் நிலத்தைக் குத்தகை எடுத்து, குமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் முதல் பருவமான கன்னிப்பூ பருவத்தில் அம்பை 16, திருப்பதிசாரம் 5 ரக நெல்களை சாகுபடி செய்து வருகிறேன். இரண்டாம் பருவமான கும்பப்பூ சாகுபடியின்போது பொன்மணி ரகத்தை சாகுபடி செய்கிறேன். மேலும் எங்கள் வீட்டின் அருகே அரை ஏக்கர் பரப்பளவில் தென்னந்தோப்பு இருக்கிறது. தென்னைகளுக்கு இடையே மா, பலா, நெல்லி, கொய்யா போன்ற மரங்களை வளர்த்து வருகிறேன். தேங்காய்களை வீட்டுத் தேவைக்குப் போக மீதமானவற்றை விற்பனை செய்கிறேன். இதுதவிர நாட்டுப் பசுமாடுகளை வளர்த்து வருகிறேன். கடந்த 3 வருடத்திற்கு முன்பு மணவாளக்குறிச்சி விவசாயிகள் 12 பேர் சேர்ந்து மணவை அங்கக உரத் தயாரிப்புக்குழுவைத் தொடங்கினோம். அதன்பிறகு உரத் தயாரிப்புக்குழு மூலம் மீன் அமிலம், பஞ்சகவ்யம், அமிர்தக்கரைசல், மண்புழு உரம் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.

இயற்கை உரம் விற்பனையில் கிடைக்கும் வருவாயை குழுவில் உள்ள உறுப்பினர்கள் பகிர்ந்துகொள்கிறோம். நாங்கள் உற்பத்தி செய்யும் இயற்கை உரத்தில் மீன் அமிலம் அதிக அளவில் விற்பனை ஆகிறது. கடந்த கும்பப்பூ சீசனின்போது 100 பாட்டில் மீன் அமிலம் விற்பனை செய்தோம். ஒரு பாட்டில் விலை ரூ.200. மீன் அமிலம் தயாரிக்க மீன்கழிவுகள் மற்றும் மீன்களை விலைக்கு வாங்குகிறோம். அதனுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து மீன் அமிலத்தை உற்பத்தி செய்கிறோம். எங்களிடம் உள்ள ஒரு ஏக்கரில் இயற்கை உரம் கொண்டு நெல் சாகுபடி செய்கிறேன். இதை எங்களின் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்கிறோம். மற்ற 4 ஏக்கரிலும் ரசாயன உரமிட்டு நெல் சாகுபடி செய்கிறோம். இதில் கிடைக்கும் நெல்மணியை அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வோம். இயற்கை உரம் பயன்படுத்தும் 1 ஏக்கர் நிலத்தில், நெல் சாகுபடிக்கு முன்னதாக மண்புழு உரம் போடுவோம். நடவு செய்த 15வது நாளில் ஒரு லிட்டருக்கு 10 மிலி வீதம் மீன் அமிலம் தெளிப்போம்.

இதனைத் தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒருமுறை மீன் அமிலம் தெளிப்போம். மீன் அமிலம் கொடுப்பதால் நெல்பயிரில் இருந்து கதிர்கள் வரும்போது நெல்மணிகள் பெரியதாகவும், எடை கூடுதலாகவும் இருக்கும். எனது வயல்களில் அனைத்து செலவு களையும் போக 5 ஏக்கரில் ஒவ்வொரு சாகுபடி பருவத்தின்போதும் ரூ.1 லட்சம் வரை நெல் மற்றும் வைக்கோல் மூலம் வருவாய் கிடைக்கும்.இயற்கை விவசாயம் செய்யும் பலர் பாரம்பரிய நெல் ரகங்களைத்தான் பயிரிடுகிறார்கள். அதன்படி நானும் முதலில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்தேன். ஆனால் அதில் போதிய மகசூல் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பயிரிடப்படும் நெல் ரகங்களைப் பயிரிடுகிறேன். விவசாயப் பணிகளுக்கென சொந்தமாக டிராக்டர் வாங்கிப் பயன்படுத்துகிறேன். நடவுப்பணி உள்ளிட்ட பணிகளுக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறேன். இதனால் பணிகள் எளிமையாவதுடன் பணியாட்களுக்கான கூலியும் குறைகிறது’’ என்கிறார்.

தொடர்புக்கு:

அகஸ்டின்: 94883 89838.

மூலிகை பூச்சிவிரட்டி

ஒரு ஏக்கர் நிலத்தில் ஆர்கானிக் முறையில் நெல் விளைக்கும் அகஸ்டின், பூச்சிகளை விரட்ட மூலிகை பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தி வருகிறார். அதை அவரே தயாரித்து பயன்படுத்துகிறார். இதுகுறித்து கூறிய அகஸ்டின், `இயற்கை முறை விவசாயம் செய்யப்படும் வயலில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஐந்திலைக் கரைசலைப் பயன்படுத்துகிறேன். அதாவது ஆடு, மாடு சாப்பிடாத 5 தாவரத்தின் இலைகளை எடுத்து வெட்டி, அதனுள் மாட்டின் கோமியத்தை கலந்து ஊற வைத்து 21 நாட்கள் கடந்த பிறகு எடுத்து வயல்களில் பூச்சி விரட்டியாக பயன்படுத்துவேன். இதேபோல இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை தலா ஒரு கிலோ வீதம் எடுத்து, அவற்றை இடித்து தண்ணீரில் 15 நாட்கள் ஊற வைப்பேன். பின்பு அதை எடுத்து வயலில் ஒரு லிட்டருக்கு 10 மில்லி வீதம் கலந்து தெளிப்பேன்’ என்கிறார்.

அற்புத பலன் தரும் ஐந்திலைக் கரைசல்!

பயிர்களைத் தாக்கி விளைச்சலில் பாதிப்பை ஏற்படுத்தும் பல்வேறு விதமான பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், பல்வேறு நோய்களில் இருந்து பயிர்களைக் காக்கவும் செலவே இல்லாமல் தயார் செய்யப்படும் ஓர் அற்புதக் கரைசல்தான் ஐந்திலைக் கரைசல். இந்தக் கரைசலை தயாரிக்க 5 விதமான இலைகளை நாம் பயன்படுத்தினால் போதும். வேம்பு, ஊமத்தை, நொச்சி, எருக்கு மற்றும் கற்றாழைதான் அந்த ஐந்து இலைகள். இவற்றை சம பங்காக எடுத்து, சிறிது மாட்டுக்கோமியம் கலந்து மையாக அரைத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு அரைத்த கலவையின் அளவிற்கு இரு மடங்கு கோமியம் கலந்து கொள்ள வேண்டும். கலந்து வைத்துள்ள கரைசலை இரண்டு வாரங்கள் நன்கு நொதித்து வரும் அளவிற்கு ஊற வைக்க வேண்டும். இதில் ஈக்கள் முட்டையிடாதவாறு ஒரு பெரிய துணியைக் கொண்டு மூடி வைக்க வேண்டும். பதினைந்தாவது நாளில் இந்தக் கரைசலை வடி கட்ட வேண்டும். வடிகட்டிய கரைசலை 1 லிட்டர் அளவுக்கு எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்தக் கலவையை சுமார் 6 மாதங்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். வருமுன் காப்போம் என்ற வகையில் பூச்சித் தாக்குதல் தொடங்குவதற்கு முன்பே தெளித்து பயிர்களுக்கு பாதுகாப்பு அரண் தரலாம்.