Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

இயற்கை எப்போதும் நம்மைக் கைவிடாது...

இயற்கை விவசாயத்தில் இறங்கிய என்னை ஆரம்பத்தில் பலர் பரிதாபமாக பார்த்தார்கள். இவருக்கு ஏன் இந்த வேலை என வெளிப்படையாகவே பேசினார்கள். இப்போது எனது வயலில் நான் அதிக மகசூல் எடுப்பதைப் பார்க்கும் அக்கம் பக்கத்து விவசாயிகள் வாயடைத்துப்போய் நிற்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இயற்கை மீதும், இந்த மண்ணின் மீதும் நான் வைத்திருந்த நம்பிக்கைதான் என்று தீர்க்கமாக பேசுகிறார் நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள வடக்கு பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்கிற கருப்பசாமி. கருப்பசாமியின் பசுமையான வயலில் எங்கு பார்த்தாலும் மண்புழுக்கள் உலவுகின்றன. தானியங்களையும், சிறிய அளவிலான உயிரினங்களையும் கொத்தித் தின்ன வண்ணப்பறவைகள் வட்டமடிக்கின்றன. இப்படியோர் அழகிய சூழலில் வயலுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த கருப்பசாமியை சந்தித்தோம். தொடர்ந்து எங்களிடம் பேசினார்.

‘‘பிஏ தமிழ் படித்திருக்கிறேன். எங்களது குடும்பம் பாரம்பரியமான விவசாயக் குடும்பம். நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோதே நம்மாழ்வாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டேன். படிப்பை முடித்து நான் முழு நேரமாக விவசாயத்தில் இறங்கியபோது நம்மாழ்வார் வழியில் ரசாயனங்களை முற்றிலும் தவிர்த்தேன். ரசாயனத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறும்போது தொடக்கத்தில் மகசூல் குறைந்தது. அப்போது நான் செய்யும் வேலைகளை சிலர் வினோதமாகப் பார்த்தார்கள். இன்றைய காலகட்டத்தில் ரசாயன கலப்பில்லாத தானியங்கள் சந்தையில் கிடைப்பது அரிதாகிப் போனாலும், அதைத் தேடிச்சென்று வாங்கும் மக்கள் அதிகரித்து வருகிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் படிப்படியாக இயற்கை விவசாயமும் வளர்ந்து வருகிறது. குறிப்பாக நம்மாழ்வாருக்குப் பிறகு இயற்கை விவசாயம் மீண்டும் பூத்துக்குலுங்கத் தொடங்கி இருக்கிறது.

விவசாயம் செய்ய வளமான மண் இருக்க வேண்டும் என்றே அனைத்து விவசாயிகளும் விரும்புவார்கள். ஆனால் குறுகிய கால வருமானத்திற்காக யூரியா உள்ளிட்ட ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் அதிகளவில் பயன்படுத்தி வருவதால் மண்வளம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகிறது. ரசாயனங்களால் தற்காலிகமாக உற்பத்தி பெருகினாலும், நீண்டகால நோக்கில் அதன் மூலம் பயன் கிடைக்காது. மண் மலடானால் அது விவசாயிகளுக்கு ஆபத்து என வேளாண் அதிகாரிகள் எச்சரித்தும் வருகிறார்கள். இதனால் பல விவசாயிகள் தற்போது இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகிறார்கள். நான் நீண்ட காலமாக இயற்கை முறை விவசாயத்தை செய்து வருகிறேன்.

எனக்கு சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்தில் கம்பு, மக்காச்சோளம், கோவில்பட்டி தட்டை மக்காச்சோளம் பயிரிட்டு வருகிறேன். இதுபோக அரை ஏக்கர் நிலத்தில் கால்நடைத் தீவனங்களை சாகுபடி செய்திருக்கிறேன். இதில் நமது பாரம்பரிய தானியமான கம்புக்கு மட்டும் 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி இருக்கிறேன். கம்பிற்கான விதையை அருகில் இருக்கும் இயற்கை விவாசாயியிடம் இருந்துதான் வாங்கினேன். இரண்டு ஏக்கர் நிலத்திற்கு எனக்கு 6 கிலோ விதை தேவைப்பட்டது. இதனை ரூ.2300 கொடுத்து வாங்கி வந்தேன். விதைப்பதற்கு முன்பு ரொட்டோவேட்டர் கொண்டு இரண்டு முறையும், கலப்பை கொண்டு இரண்டு முறையும் என மொத்தம் நான்கு முறை உழவு ஓட்டினேன்.

பின்னர் 25 செ.மீ இடைவெளிவிட்டு விதைகளை ஊன்றத் தொடங்கினேன். விதைகளை ஊன்றிய 3 லிருந்து நான்காவது நாளில் துளிர் வரத்தொடங்கியது. கம்பைப் பொருத்தவரைக்கும் 90 லிருந்து 100 நாள் பயிர். அதனால் குறுகிய காலகட்டத்திலேயே சாகுபடி செய்து விடலாம். பயிரின் ஆயுட்காலத்திலிருந்து பாதிநாளைக் கணக்கிட்டு ஒரே ஒரு களை மட்டுமே எடுப்பேன். கிணற்று தண்ணீர் பாசனம் என்பதால் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் விடுவேன். 65வது நாளில் பயிரில் கம்பு வரத்தொடங்கிவிடும். இதிலிருந்து 15 நாட்கள் மட்டும் தண்ணீர் விட்டு மீதி இருக்கும் 10 நாட்கள் தண்ணீர் விடாமல் அறுவடை செய்வேன். எனக்கு இரண்டு ஏக்கர் நிலத்தில் இருந்து மொத்தம் 5000 கிலோ கம்பு கிடைக்கிறது. இதனை நேரடியாக நானே விற்பனை செய்கிறேன். ஒரு கிலோ கம்பு ரூ.25 என்ற கணக்கில் விற்பனை செய்து வருகிறேன். இதன்மூலம் எனக்கு ஒரு போகத்திற்கு கம்பில் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் செலவுகள் ரூ.10 ஆயிரம் போக ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது.

1.50 ஏக்கரில் கோவில்பட்டி தட்டை சோளம் பயிரிட்டு இருக்கிறேன். இதற்கு விதை மட்டும் 8 கிலோ தேவைப்பட்டது. விதைக்கான செலவு மட்டும் ரூ.2800 ஆனது. இந்தப் பயிரானது 120 நாள் ஆயுட்காலம் கொண்டது. சுமார் 25 செ.மீ இடைவெளி விட்டு விதைகளை ஊன்றினேன். விதை ஊன்றிய 3வது நாளிலிருந்து முளைப்பு வரத்தொடங்கிவிட்டது. கம்பு, சோளம், கோவில்பட்டி தட்டை சோளம் என்று அனைத்து பயிர்களுக்கும் தண்ணீர் பாய்ச்சும்போதே ஜீவாமிர்தம், பஞ்சகாவியம் உள்ளிட்டவற்றை தண்ணீரில் கலந்து பாய்ச்சுவேன். ஆட்களை வைத்து 45வது நாளில் ஒரு களை எடுப்பேன். பயிர் 120வது நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும். எனக்கு 3000 கிலோ தட்டை சோளம் கிடைத்தது. இதனை ஒரு கிலோ ரூ.23க்கு விற்பனை செய்கிறேன். இதன்மூலம் ஒரு போகத்திற்கு ரூ.69 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது.

சோளமும் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்திருக்கிறேன். ஒரு ஏக்கருக்கு எனக்கு 6 கிலோ விதை தேவைப்பட்டது. மூன்று வகை பயிர்களுக்குமே கழுகுமலையில் இருந்துதான் விதையை வாங்கி வந்தேன். இது 120 நாள் பயிர். இதிலும் நல்ல விளைச்சல். விரைவில் அறுவடை செய்ய இருக்கிறோம். அறுவடை செய்த சோளத்தை ஒரு குவிண்டால் ரூ.2000 என மொத்த வியாபாரிகள் வாங்கிக் கொள்கிறார்கள். எனது வயலில் 50 டன் சோளம் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். அதன்படி ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்கும். கிடைப்பதற்கு அரிதான ரசாயன கலப்பில்லாத சோளத்தை, ரசாயன கலப்பு கொண்ட சோளத்திற்கு நிகரான விலையில்தான் மொத்த வியாபாரிகளிடம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் எனக்கு மற்றவர்களை விட கூடுதலான மகசூல் கிடைக்கிறது.

மண் வளத்தால் இனி வரும் காலங்களில் மகசூல் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ரசாயன விவசாயிகள் செய்யும் உற்பத்தி செலவை விட எனக்கு உற்பத்தி செலவு குறைவு. விதையில் இருந்து உரம், பூச்சிக்கொல்லி என எதையும் நான் வெளியில் இருந்து வாங்கவில்லை. நானே வேளாண் அதிகாரிகளின் ஆலோசனையின்படி உற்பத்தி செய்கிறேன். எனது தோட்டத்திலேயே மாடுகளை வளர்க்கிறேன். அதன் சாணம், கோமியத்தை உரமாக பயன்படுத்தி வருகிறேன். ரசாயனப் பூச்சிக்கொல்லிக்கு பதிலாக இயற்கை முறையில் எனது வயலில் தயாரிக்கும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி வருகிறேன். இவையெல்லாம் தற்போதைய ரசாயன விவசாயி தரப்பில் பார்த்தால் கூடுதல் வேலையாக தெரியும். ஆனால் இதைத்தான் நமது முன்னோர்கள் செய்தார்கள். மாடுகளுக்கு தேவையான தீவனத்திற்கு 1.5 ஏக்கரில் புல் வகை தாவரங்களை வளர்த்து வருகிறேன். அவைகளும் ரசாயனம் கலப்பில்லாத தாவரங்களைத்தான் உட்கொள்கின்றன. என்னைப் பொறுத்தவரை ரசாயனம் எந்த வடிவிலும் நம் உடலில் சேர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். அதற்காக கூடுதல் உழைப்பு தேவைப்படும் என்பது நிதர்சனமான உண்மை.

இயற்கை விவசாய விளைபொருட்களைத் தேடும் மக்கள் அது கிடைக்காமல் அவதி அடைகிறார்கள். அதே நேரத்தில் இயற்கை விவசாய பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதை தேவைப்படுவோரிடம் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்த ஒரு பிரச்னையால் பலர் இயற்கை விவசாயத்தில் இறங்க அஞ்சுகிறார்கள். இதை சரிசெய்தால் இயற்கை விவசாயிகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்’’ என நம்பிக்கை பொங்க பேசுகிறார்.

தொடர்புக்கு:

சேகர் (எ)கருப்பசாமி :

63806 76066