கன்னியாகுமரி மாவட்டம் மேக்கியாமண்டபம் அருகில் உள்ள பூந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஞானதாஸ் என்ற விவசாயி நல்லமிளகு சாகுபடியில் வெற்றிகரமாக பயணித்து வருவது குறித்து கடந்த வார இதழில் பார்த்தோம். முழுக்க முழுக்க இயற்கை முறையில் சாகுபடி செய்து வரும் இவர், இயற்கை இடுபொருட்களை சொந்தமாகவே தயாரித்து பயன்படுத்தி வருகிறார். மண்புழு உரம், மீன் அமிலம் போன்றவற்றை உற்பத்தி செய்யும் ஞானதாஸ் இலை தழை உருக்கி கரைசல் என்ற ஒரு கரைசலையும் தயாரித்து வருகிறார். இந்தக் கரைசல் குறித்து அவர் கூறுகையில், இலை தழை உருக்கி கரைசல் பயிர்களுக்கு சிறந்த வளர்ச்சியூக்கியாக இருக்கும். இதை நான் தொடர்ச்சியாக உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறேன். எருக்கு இலை, கிளைரிசீடியா இலை, பலா இலை, பூவரச இலை, துத்தி இலை, புங்க மர இலை, வேம்பு இலை, முருங்கை இலை ஆகிய இலைகளை 200 லிட்டர் பேரலில், ஒவ்வொரு இலையிலும் 5 கிலோ வீதம் எடுத்து 10 கிலோ மாட்டுச்சாணம், 2 கிலோ வெல்லம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 100 நாட்கள் ஊற வைப்பேன். 100 நாட்களுக்கு பிறகு இலைதழை உருக்கி கரைசல் பயன்பாட்டுக்கு தயாராக இருக்கும். ஒரு லிட்டருக்கு 10 தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்துவேன்.
இதேபோல புண்ணாக்கு கரைசலும் தயாரித்து பயன்படுத்துகிறேன். அதாவது கடலை புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு, புங்கம் புண்ணாக்கு, இலுப்பை புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு ஆகியவற்றை, ஒவ்வொன்றிலும் தலா 5 கிலோ வீதம் எடுத்து 200 லிட்டர் பேரலில் 7 நாட்கள் ஊற வைப்பேன். 7 நாள் கடந்த பிறகு பார்த்தால் புண்ணாக்கு கரைசல் தயாராக இருக்கும். இந்தப் புண்ணாக்கு கரைசலுடன், இலைதழை உருக்கி கரைசலையும் கலந்து தோட்டத்தில் உள்ள அனைத்து செடிகள், மரங்களுக்கு சொட்டுநீர்ப் பாசனம் மூலம் வழங்குவேன். இதுதவிர சாணபாசி கரைசலும் பயன்படுத்தி தோட்டத்தில் உள்ள பயிர்களுக்கு பயன்படுத்துகிறேன். இத்தகைய கரைசல்களைக் கொடுக்கும்போது செடி, மரங்களுக்கு தேவையான நைட்ரஜன், பொட்டாஷ், பாஸ்பரஸ் போன்ற அனைத்து வகையான சத்துகளும் தாராளமாக கிடைக்கின்றன’’ என்கிறார்.
தொடர்புக்கு:
ஞானதாஸ்: 81225 58960.


