தமிழ்நாடு எப்போதும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி மாநிலம்தான். பல்வேறு துறைகளின் வழியாக தமிழ்நாடு எப்போதும் இதை நிரூபித்தே வந்திருக்கிறது. இந்த வரிசையில் இயற்கை விவசாயத்திலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது. பள்ளி மாணவர்களுக்கு கூட இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு உருவாகி இருக்கிறது. ஆர்கானிக் பொருட்கள் உடலுக்கு நலம் பயப்பவை என்று அனைவரும் உணர்கிறார்கள். நாள்தோறும் ஊருக்கு ஊர் அதிகரித்து வரும் ஆர்கானிக் ஸ்டோர்களே இதற்கு சாட்சி. போதாதற்கு தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல் என பல துறைகளின் வித்தகர்களும் கூட இயற்கை விவசாயம் செய்ய ஆர்வத்தோடு களம் இறங்குகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் நம்மாழ்வார் என்ற முன்னோடிதான். அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு இன்று கடைக்கோடி மனிதர்களையும் சென்றடைந்திருக்கிறது. நம்மாழ்வார் குறித்து கேள்விப்படுகிறவர்களே இயற்கை விவசாயத்தில் முத்திரை பதிக்கிறார்கள். அவருடைய லட்சியப்பயணத்தில் உடன் இருந்தவர்கள் எப்படி இருப்பார்கள்? இந்த ஆர்வத்தில்தான் மருதம் குமாரை சந்தித்தோம்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகில் உள்ள நாதிபாளையத்தில் 9 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்யும் மருதம் குமார், தனது நிலத்தை இயற்கை விவசாயத்தின் மாதிரிப்பண்ணையாக்கி வைத்திருக்கிறார். தென்னை, மஞ்சள், வாழை, பழமரங்கள் என பசுமை கட்டி நிற்கும் பயிர்கள் இயற்கையின் அருட்கொடையாக திகழ்கின்றன. இவற்றைப் பார்வையிட்டபடியே மருதம் குமாரின் இயற்கைப் பயணம் குறித்து கேட்டறிந்தோம். `` திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம்தான் எங்களுக்கு பூர்வீகம். தாத்தா, அப்பா என எல்லோருக்குமே விவசாயம்தான் வாழ்வாதாரம். அங்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியதால் சத்தியமங்கலம் அருகில் உள்ள கெஞ்சனூர் பகுதிக்கு குடும்பத்தோடு இடம்பெயர்ந்தோம். அது 1974ம் வருடம், எனக்கு அப்போது 6 வயது. அதிலிருந்து கெஞ்சனூர்தான் எங்கள் ஊராகிப்போனது. ஆற்றோர ஊர் என்பதால் விவசாயம் நன்றாக நடந்தது. பிற்காலத்தில் விவசாயத்தில் பெரிய லாபம் இல்லாத சூழல் உருவானது. நான் 10ம் வகுப்பு படிக்கும்போது விவசாய நிலங்களில் கிணறு வெட்டும் தொழிலை அப்பா ஆரம்பித்தார். நானும் அந்தத் தொழிலில் அவருடன் ஈடுபட்டேன். கேரளா, கர்நாடகா பகுதிகளிலும் அந்த தொழிலை செய்தேன். இதற்கிடையே 1995ம் ஆண்டில் விவசாயத்தை நவீன முறையில் செய்ய வேண்டும் என களமிறங்கினேன். வேளாண் அலுவலர்களை அழைத்து வந்து என்னென்னவோ செய்து பார்த்தேன். எதிலும் முன்னேற்றம் இல்லை. இதற்கிடையே 1995ல் எனக்கு திருமணம் ஆனது. 1997 - 1998 காலகட்டங்களில் சரியான கடன் பிரச்னை. எனது மனைவி சிவகாமி தனது நகைகளைக் கொடுத்து கடனிலிருந்து மீள வைத்தார்.
சரி... எல்லாம் போகட்டும். மாற்று வழியைத் தேடுவோம் என தேடலில் இறங்கினேன். அப்போது பவானிசாகர் அணை அருகில் உள்ள காராச்சி கோரை எனும் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் இயற்கை முறையில் மஞ்சள் பயிரிட்டிருந்தார். நல்ல விளைச்சல். அதைப் பார்த்து அவரிடம் விசாரித்தேன். அப்போது அவர், இதுதான் உயிர் சக்தி வேளாண்மை, நல்ல பலன் கொடுக்கும் என தெரிவித்தார். கூடுதலாக இதற்கு உறுதுணையாக இருந்த ஒருவரை அறிமுகப்படுத்தினார். அவரது பெயர் மகேஷ் மெல்வின். அப்போது அவருக்கு 25 வயதுதானிருக்கும். மேட்டுப்பாளையத்தில் நகராட்சி குப்பைக்கழிவுகளில் இருந்து உயிர் உரங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அவர் எனக்கு உயிர் சக்தி வேளாண்மை குறித்து தெளிவாக விளக்கினார். பின்பு நவநீதகிருஷ்ணன் என்பவரையும் அவர் அறிமுகப்படுத்தினார். அவர் செய்து வந்த இந்த வகையான விவசாயம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. இதையெல்லாம் பார்த்தபோது, நாம் இனி விவசாயத்தில் பட்ட கஷ்டங்களில் இருந்து மீண்டுவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.
உடனே சத்தியமங்கலத்தில் எங்களுக்கு சொந்தமாக இருந்த 7 ஏக்கரில் மஞ்சள் சாகுபடியை உயிர் சக்தி வேளாண்மை முறையில் ஆரம்பித்தேன். ரசாயனத்தைப் பயன்படுத்தால் இயற்கை இடுபொருட்களை நான் உபயோகித்ததால் என் அப்பா கூட என்னை நம்பவில்லை. ஆனால் நான் நம்பிக்கையோடு தொடர்ந்தேன். நம்பிக்கை வீண் போகவில்லை. பயிர்கள் செழிப்பாக வளர்ந்தன. எங்கள் தோட்டத்தில் மெயின்ரோட்டை ஒட்டி இருந்ததால் போவோர் வருவோர் எல்லாம் ஆச்சரியமாக பார்த்து சென்றார்கள். அறுவடை சமயத்தில்தான் ட்விஸ்ட். ஒரு ஏக்கரில் 27 குவிண்டால் மஞ்சள் கிடைத்தது. வழக்கமாக 20 குவிண்டால்தான் அப்போது கிடைக்கும். இயற்கை விவசாயத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வந்துவிட்டது.
அந்த சமயத்தில் நம்மாழ்வார் சத்தியமங்கலத்திற்கு வந்திருந்தார். அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தால் அவரை ஆர்வத்துடன் சந்தித்தேன். மீண்டும் ஒரு மாதம் கழித்து சந்தித்தபோது ஒற்றை வைக்கோல் புரட்சி புத்தகத்தைக் கொடுத்து இயற்கை விவசாயம் குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். பின்பு அவரது பயணத்தில் நாங்களும் இணைந்து பயணித்தோம்’’ என்று கூறும் மருதம் குமார், கடந்த 2010ம் ஆண்டில் கோபிச்செட்டிபாளையம் அருகில் உள்ள நாதிபாளையத்தில் 9 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி இயற்கை விவசாயத்தைத் தொடர்ந்து வருகிறார். அதுகுறித்து அவர் கூறுகையில், ``நான் இந்த நிலத்தை வாங்கும்போது ரசாயனம் விவசாயத்தைத்தான் மேற்கொண்டிருந்தனர். நான் வாங்கிய பிறகு இயற்கை விவசாயத்திற்கு பழக்கினேன். அதாவது தானியப்பயிர்களின் 5 ரகம், பயறு வகைகளில் 5 ரகம், எண்ணெய் வித்துகளில் 5 ரகம், பசுந்தாள் உரப்பயிர்களில் 5 ரகம் என 20 வகை பயிர்களை விதைத்து, 45 நாளில் மடக்கி உழுதேன். பின்பு அதே பயிர்களை விதைத்து 60 நாட்களில் மடக்கி உழுதேன். இவ்வாறு செய்தால் மண்வளம் மேம்படும். இயற்கை விவசாயம் செய்ய விரும்புகிறவர்கள் இதைத்தான் முதலில் செய்ய வேண்டும்.
அதற்குப்பிறகு கால்நடைக்கழிவுகளை நிலத்தில் கொட்டி, உழவு செய்து மஞ்சள் நட்டேன். மஞ்சளுக்கு இடையே நரிப்பயறை ஊடுபயிராக விதைத்தேன். நரிப்பயறு நன்றாக வேகமாக வளரும். இந்தச் செடிகள் வளர்ந்து நிலத்தை மூடிக்கொள்வதால் மற்ற களைச்செடிகள் வளராது. மேலும் இந்த நரிப்பயறு செடிகள் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணில் நிலைநிறுத்தும். மஞ்சள் செடிகள் வளர்ந்ததும் எல்லா செடிகளும் அதற்கு கீழாக சென்று அழிந்துவிடும். இதனால் நமக்கு களையெடுக்கும் செலவே இருக்காது. ஆரம்பத்தில் அமுதக்கரைசல், பஞ்சகவ்யம் என பல இயற்கை கரைசல்களை தயாரித்து பயன்படுத்தினேன். இப்போது பெரிதாக எந்த வளர்ச்சி ஊக்கிகளையும் தருவதில்லை. தொடர்ந்து இயற்கை முறைகளைக் கடைபிடித்ததால் மண்வளம் கூடியிருக்கிறது. அனைத்து சத்துகளும் தாராளமாக கிடைக்கிறது. பூச்சி, நோய் தாக்குதல் வந்தால் மூலிகை கரைசல்களைப் பயன்படுத்துகிறோம். ரசாயனத்தைப் பயன்படுத்தாததால் தண்ணீர் குறைவாகவே தேவைப்படுகிறது. மண்ணில் எப்போதும் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கிறது. மஞ்சளில் நல்ல மகசூல் கிடைக்கிறது. நல்ல ஆரோக்கியமான மஞ்சளாகவும் கிடைக்கிறது.
500 தென்னை மரங்கள் உள்ளன. ஒரு வெட்டுக்கு ஒரு மரத்தில் 150 காய்கள் வரை கிடைக்கின்றன. மற்ற தோட்டங்களில் 100 தேங்காயில் இருந்து 13 கிலோ கொப்பரை கிடைக்கும். எங்களுக்கு 17 கிலோ வரை கொப்பரை கிடைக்கிறது. இதனால் வியாபாரிகள் எங்களிடம் ஒரு தேங்காய்க்கு குறைந்தபட்சம் ரூ.2 அதிகமாக தந்து வாங்கிக்கொள்கிறார்கள். இயற்கை விவசாயத்தில் இதுபோல் பல அற்புதங்கள் நிகழும். பரீட்சித்துப் பாருங்கள்!’’
எனக்கூறி புன்னகைக்கிறார்.
தொடர்புக்கு:
மருதம் குமார் - 99942 77505

