முடி ஆரோக்கியமாக வளர வேண்டுமென்றால், முதலில் தலைச் சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தலைச் சருமத்தில் அதிக எண்ணெய், பொடுகு, அழுக்கு மற்றும் இறந்த செல்கள் தேங்கினால் முடி உதிர்வு, அரிப்பு, பொடுகுத் தொல்லை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதோ அதிகம் செலவில்லாமல் வீட்டிலேயே கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தலைச் சருமத்தைப் பராமரிக்கலாம்.
தேங்காய் எண்ணெய் மசாஜ்: வாரத்திற்கு இரண்டு முறை வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தலைச் சருமத்தில் மெதுவாக மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, வறட்சியைக் குறைத்து முடி வேர்களுக்கு ஊட்ட மளிக்கும்.
கற்றாழை ஜெல்: கற்றாழையின் சதைப்பகுதியை எடுத்து தலைச் சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம். இது அரிப்பு, எரிச்சல் மற்றும் வறட்சியைக் குறைத்து தலைச்சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
தயிர் மற்றும் வெந்தயம்: இரவு முழுவதும் ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து, அதனுடன் தயிர் கலந்து தலைச் சருமத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவலாம். இது பொடுகைக் குறைக்கவும், முடி வேர்களை வலுப்படுத்தவும் உதவும்.
வேப்பிலை: வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த நீரால் தலையை அலaலாம். வேப்பிலையில் உள்ள இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மைகள் தலைச் சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன.
எலுமிச்சை சாறு: அதிக பொடுகு மற்றும் எண்ணெய்ப் பசை உள்ளவர்கள், எலுமிச்சைச் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலைச் சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். நேரடியாக அதிக அளவில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
சரிவிகித உணவு மற்றும் நீர்ச்சத்து: தலைச் சரும ஆரோக்கியத்திற்கு வெளிப்புறப் பராமரிப்பு மட்டுமல்ல, உடலுக்குத் தேவையான புரதம், இரும்புச் சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளும் அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் தலைச் சரும வறட்சியைக் குறைக்க உதவும்.
