பட்டுக்குட்டீஸ்க்கு பட்டர் லிப் பாம்!
குழந்தைகளின் உதடுகள் மிகவும் மென்மையானவை என்பதால், குளிர், வெயில், காற்று, நீரிழப்பு போன்ற காரணங்களால் எளிதில் வறண்டு வெடிக்கலாம். இதைத் தடுக்க இயற்கையான பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே பாதுகாப்பான லிப் பாம் தயாரிக்கலாம்.
குழந்தைகளுக்கான இயற்கை லிப் பாம் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்
தேனீ மெழுகு (Beeswax) - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
ஷியா பட்டர் (Shea Butter) - 1 டேபிள்ஸ்பூன்
வைட்டமின் E எண்ணெய் - 2 அல்லது 3 துளிகள் (விருப்பத்திற்கேற்ப).
செய்முறை
* டபுள் பாய்லர் முறையில் தேனீ மெழுகு, தேங்காய் எண்ணெய் மற்றும் ஷியா பட்டரை சேர்த்து மெதுவாக உருக்கவும்.
* அனைத்தும் நன்றாக கலந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
* வைட்டமின் E எண்ணெயைச் சேர்த்து கிளறவும்.
* சிறிய லிப் பாம் டப்பாக்களில் ஊற்றி 30-40 நிமிடங்கள் ஆற விடவும்.
* முழுமையாக உறைந்த பிறகு பயன்படுத்தலாம்.
பயன்கள்
உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். வறட்சி மற்றும் உதடு வெடிப்பைத் தடுக்கிறது. குளிர் மற்றும் வெயிலால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. இயற்கை எண்ணெய்கள் உதடுகளை மென்மையாக்கும்.
செயற்கை நிறங்கள், வாசனைத் திரவியங்கள், பாரபென்கள் போன்ற ரசாயனங்கள் இல்லாததால் பாதுகாப்பான தேர்வாக இருக்கும். பண்டிகை, விசேஷங்களுக்கு லிப்ஸ்டிக் போடுவதாக இருந்தால் கூட இந்த லிப் பாம் பயன்படுத்திவிட்டு பிறகு லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளலாம்.
பயன்படுத்தும் முறை
காலை மற்றும் இரவு என தினமும் 2-3 முறை மெல்லிய அடுக்காக தடவலாம். வெளியில் செல்லும் முன் தடவினால் உதடுகள் உலராமல் இருக்கும்.
கவனிக்க வேண்டியவை
ஒரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு தேன் சேர்க்கப்பட்ட லிப் பாம் பயன்படுத்த வேண்டாம். அவர்களுக்கு பட்டர் போதும்.
பெப்பர்மின்ட், யூகலிப்டஸ், இலவங்கப்பட்டை போன்ற எசென்ஷியல் ஆயில்களை குழந்தைகளுக்கான லிப் பாமில் சேர்க்க வேண்டாம். அவை எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.
முதன்முறையாக பயன்படுத்தும் முன் கையின் சிறிய பகுதியில் தடவி ஒவ்வாமை உள்ளதா என்பதைப் பரிசோதிக்கவும்.
குழந்தைகள் லிப் பாமை நக்கக்கூடும் என்பதால், உணவுத் தரமான (food-grade) மற்றும் இயற்கையான பொருட்களையே பயன்படுத்துவது நல்லது.
சரியாக தயாரித்து சுத்தமாக சேமித்தால், இந்த இயற்கை லிப் பாமை சுமார் 3 முதல் 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
- எஸ். விஜயலட்சுமி.

