Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இயற்கை அழகு!

கார்குழல் அழகுக்கு கற்றாழை போதும்!

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவ குணங்களுக்காகவும், அழகுப் பராமரிப்பிற்காகவும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அற்புதமான தாவரம் கற்றாழை. இதில் வைட்டமின்கள் (A, C, E, B12), தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன.

கூந்தல் மற்றும் சரும பராமரிப்பில் வாரம் ஒருமுறை கற்றாழை அவசியம்.

சருமத்திற்கு கற்றாழை தரும் நன்மைகள்

இயற்கை ஈரப்பதம்: கற்றாழை ஜெல்லில் 95% நீர்ச்சத்து உள்ளது. இது சருமத்தை வறட்சியடையாமல், எப்போதும் ஈரப்பதத்துடனும் பொலிவுடனும் வைத்திருக்க உதவுகிறது. எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தினாலும் முகத்தில் கூடுதல் எண்ணெய் வழியாது.

பருக்கள் மற்றும் தழும்புகளை நீக்க: இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் (Anti-inflammatory) மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருக்களைக் கட்டுப்படுத்துகின்றன. மேலும், பருக்களால் ஏற்படும் வடுக்கள் மற்றும் தழும்புகளை விரைவாக மறையச் செய்கிறது.

சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு (Sunburn Relief): வெயிலில் அதிகம் சுற்றுவதால் ஏற்படும் கதிரியக்கப் பாதிப்புகள் (Sunburn) மற்றும் சருமக் கருமையைக் குணப்படுத்த கற்றாழை உதவுகிறது. இது சருமத்திற்கு குளிர்ச்சியையும், உடனடி நிவாரணத்தையும் தருகிறது.

இளமையைத் தக்கவைக்க (Anti-Aging): கற்றாழை சருமத்தில் உள்ள கொலாஜன் (Collagen) உற்பத்தியை அதிகரித்து, சுருக்கங்கள் மற்றும் கோடுகளைக் குறைக்கிறது. இதனால் சருமம் எப்போதும் இளமையாகக் தோற்றமளிக்கும்.

சருமத்திற்கு பயன்படுத்தும் முறை: கற்றாழை ஜெல்லை எடுத்து நன்றாகக் கழுவி, முகத்தில் நேரடியாகத் தடவி 15-20 நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த நீரால் கழுவலாம். இதனுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு அல்லது தேன் சேர்த்தும் முகத்தில் தேய்க்கலாம்.

கூந்தலுக்கு கற்றாழை தரும் நன்மைகள்: ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு கற்றாழை பெரிதும் உதவுகிறது.

முடி வளர்ச்சியைத் தூண்ட: கற்றாழையில் உள்ள புரோட்டியோலிடிக் என்சைம்கள் (Proteolytic enzymes) தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி, மயிர்க்கால்களைப் புதுப்பித்து முடி வளர்ச்சியைத் தூண்டுகின்றன.

பொடுகுத் தொல்லைக்கு முற்றுப்புள்ளி: இதன் பூஞ்சை எதிர்ப்பு (Anti-fungal) பண்புகள், தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு மற்றும் வறட்சியைத் தடுக்கிறது.

இயற்கை கண்டிஷனர்: வேதிப்பொருட்கள் கலந்த கண்டிஷனர்களுக்குப் பதிலாக கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம். இது முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் (Silky and Shiny) மாற்றுகிறது.

முடி உதிர்வைக் குறைக்க: தலையின் பி.எச் (pH) அளவைச் சீராகப் பராமரிப்பதன் மூலம் கூந்தல் வேர்கள் பலமடைந்து, முடி உதிர்வது கணிசமாகக் குறைகிறது.

கூந்தலுக்கு பயன்படுத்தும் முறை: கற்றாழை ஜெல்லுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கலந்து, தலையின் வேர்ப் பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் கழித்து சீயக்காய் அல்லது மென்மையான ஷாம்பு கொண்டு அலசலாம்.

- எஸ்.ஆர்த்தி