Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாட்டார்மங்கலம், இரூர் குவாரிகளில் இருந்து முறைகேடாக கற்கள் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்து ஆர்டிஓ நடவடிக்கை

பாடாலூர்: நாட்டார்மங்கலம், இரூர் கல் குவாரிகளில் இருந்து முறைகேடாக கற்கள் ஏற்றி வந்த 2 லாரிகளை ஆர்டிஓ பறிமுதல் செய்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் அடுத்த செட்டிகுளம் கிராமத்தில் தனியார் கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் கடந்த 10-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் குவாரி தொழிலாளி திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா கோதூர்பட்டியை சேர்ந்த ராமதாஸ் மகன் சக்கரவர்த்தி (45) மண் சரிவில் சிக்கி பலியானார். இன்று இந்த கல்குவாரியில் ஆர்டிஓ அனிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதேபோல் நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள வெள்ளி மலையில் செயல்படும் கல்குவாரியையும் திடீர் ஆய்வு செய்தார். அப்போது வெள்ளிமலைப்பகுதியில் இருந்து கிரஷருக்கு வந்த ஒரு டிப்பர் லாரியை ஆர்டிஓ அனிதா மடக்கி பிடித்து சோதனை செய்தார். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி, வெள்ளிமலை பகுதியில் இருந்து சோலிங்கற்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சோலிங்கற்களுடன் டிப்பர் லாரியை அவர் பறிமுதல் செய்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜ்மோகன் கொடுத்த புகாரின் பேரில் பாடாலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதே போல திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் பகுதியில் தனியார் கிரஷர் அருகே இரூர் கிராமத்தில் செயல்படும் கல்குவாரியில் இருந்து உரிய ஆவணம் இன்றி சோலிங்கற்கள் ஏற்றி வந்த மற்றொரு லாரியும் வருவாய்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பிரதாப் சிங் கொடுத்த புகாரின் பேரில் பாடாலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* குவாரிகளை கண்காணிக்க மக்கள் கோரிக்கை

நாட்டார்மங்கலம், இரூர் பகுதியில் செயல்படும் அனைத்து குவாரிகளிலும் முறைகேடு ஏதேனும் நடக்கிறதா என பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதை தடுக்க, தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் இரவு, பகல் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பிடிபடும் லாரிகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், சட்டவிரோதமாக கற்கள் ஏற்றி செல்வதை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.