Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

போதைப்பொருட்களுக்கு எதிரான திமுக அரசின் நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவதா? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம்

சென்னை: தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று வெளியிட்ட அறிக்கை: சங்கரன்கோவிலில் நடந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாடு போலீசார் ஒரு கிராம் கூட ரசாயன போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்யவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சாவை மட்டுமே பிடித்துள்ளனர்” என்று வழக்கம்போல் அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். ஆளுநர் மாளிகைக்குள்ளும் வெளியேவும் அரசியல் பேசுவதையும்-அவதூறுகளை அள்ளி வீசுவதையும் தனது பொழுதுபோக்காக வைத்திருக்கிறார் ஆர்.என்.ரவி. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்துப்பட்டுள்ளன. ‘போதையில்லா தமிழ்நாட்டை’ உருவாக்க நேர்மையான நடவடிக்கைகளை முதல்வரே முன்னின்று எடுத்து வருகிறார்.

திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளால், இன்றைக்கு போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. ஆளுநர் முழு நேர அரசியல்வாதியாக இருப்பதால் நிர்வாகத்தில் நடப்பது தெரிந்திருக்க நியாயமில்லை. தமிழ்நாட்டில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை எப்படி எடுக்கப்படுகிறது என்பதை சுருக்கமாக கூறுகிறேன். போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு சிஐடி தமிழ்நாடு முழுவதும் 15 இடங்களில் செயல்படுகிறது. போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு மற்றும் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக என்ஐபி சிஐடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

காவல் துறையின் கடுமையான நடவடிக்கையால் தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடப்படுவது அறவே ஒழிக்கப்பட்டு ‘பூஜ்ஜிய சாகுபடி’ என்ற நிலையை எட்டியிருக்கிறோம். போதைப் பொருள் கடத்தியதாக இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை, 9,750 குற்றவாளிகள் மீது 6,053 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15,092 கிலோ கஞ்சா 90,833 மாத்திரைகள் 93 கிலோ மெத்தாகுலோன் மற்றும் 228 இதர கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல்-பாஜ மேடையில் நிற்பவராக தன்னை மாற்றிக் கொண்டு பச்சைப் பொய்களை ஒரு ஆளுநர் பேசுவது வெட்ககேடானது. புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே ஆளுநர் சொன்னது அப்பட்டமான பொய் என்பது புரியும்.

போதைப் பொருள் தொடர்பாக 2022ம் ஆண்டு முதல் இதுநாள் வரை, 1682 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2022 ஆகஸ்ட் முதல் 2024 ஆகஸ்ட் வரையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ரூ.18.03 கோடி சொத்துகளும் 8,949 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிராக கல்வி நிறுவனங்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘போதைக்கு எதிரான குழுக்கள்’ உருவாக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் அமைச்சர்களே குட்கா விற்பனைக்கு துணை போனார்கள்.

குட்கா வழக்கில் சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் மீதான வழக்கிற்கு அனுமதி கொடுக்கும் கோப்பை கூட ஒரு வருடத்திற்கும் மேலாக கிடப்பில் போட்டு வைத்திருந்த ஆளுநர், போதைப் பொருள் ஒழிப்பு பற்றி இப்போது வாய்கிழியப் பேசுவது விந்தையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. ஆளுநர் முழு நேர அரசியல்வாதியாக இருப்பதால் நிர்வாகத்தில் நடப்பது தெரிந்திருக்க நியாயமில்லை.

* கடத்தல்காரர்களை தேடித்தேடி கட்சியில் சேர்த்தது தமிழக பாஜ தான்

என்டிபிஎஸ் என்ற போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் கைதானவர்களில் பாஜவைச் சேர்ந்த ரவுடிகள்தான் அதிக அளவில் இருக்கிறார்கள். அத்தகைய போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி தமிழ்நாடு பாஜதான். தமிழ்நாட்டில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட 16 குற்றவாளிகளை பாஜ கட்சியில் இணைத்துள்ளது. சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, மதுரை உள்ளிட்ட காவல் பகுதிகளில் மட்டும் என்டிபிஎஸ் சட்டத்தில் கைதான பா.ஜவைச் சேர்ந்த 14 ரவுடிகள் மீது 23 வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. போதைப் பொருள் வழக்குகளில் இருக்கும் பாஜவினரின் பிம்பத்தை மறைக்க ஆளுநர் ரவி திமுக ஆட்சி மீது அநியாயமாகப் பொய் குற்றச்சாட்டை போகிற போக்கில் வீசிச் செல்கிறார். தைப்பொருள்களின் தலைநகர் குஜராத் பற்றியெல்லாம் ஆளுநர் வாய் திறப்பதில்லை என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.