Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெயர் சொல்லும் திட்டம்

மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாட்டிலேயே மிகச்சிறந்த திட்டமாக உருவெடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் மு.க.ஸ்டாலின் திட்டத்தை பின்பற்றி அமல்படுத்திய 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒவ்வொரு வீட்டிலும் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது . 2023 செப்டம்பர் 15 அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி மாதம் தோறும் அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1000 செலுத்தும் நடைமுறையை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தை பின்பற்றி நாடு முழுவதும் 15 மாநிலங்கள் இதை அமல்படுத்தி உள்ளன. தமிழ்நாட்டில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட போது அதை ஒன்றிய அரசு எதிர்த்தது. இன்று பாஜவின் தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமாக இந்த திட்டம் தான் இடம் பிடித்துள்ளது. அதை விட முக்கியமாக இந்த திட்டத்தை அமல்படுத்திய 15 மாநிலங்களில் பெண்களால் மிகப்பெரிய பொருளாதார மாற்றம் உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இன்றைய கால சூழலுக்கு ஏற்ப இந்த திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது என்றால் அந்த திட்டத்தின் வெற்றியை உணர்ந்து கொள்ள முடியும்.

2026 நிதியாண்டில் இதுவரை 15க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தப்படும் மாதாந்திர அல்லது வருடாந்திரப் பணப் பரிமாற்றத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இவற்றின் மொத்தச் செலவு ஆண்டுக்கு சுமார் ரூ. 1.7 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 12 கோடிப் பெண் பயனாளிகளின் வங்கி கணக்கில் இவை சென்றடைகின்றன.

இந்த மகளிர் உரிமைத்தொகை மூலம் சமூகத்தில் மிகப்பெரிய பொருளாதார மாற்றம் ஏற்பட்டு இருப்பதும், செலவுகள் குறைந்து, பொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலத்தில் இந்த திட்டம் குறித்து நடத்திய ஆய்வில் இவை தெரிய வந்துள்ளது. இந்த திட்டத்தால் நாடு முழுவதும் நல்ல வளர்ச்சி இருப்பதால் இந்த திட்டத்தில் மாற்றம் அவசியம். இந்த கால கட்டத்திற்கு ஏற்ப நிதி ஆதாரத்தை அதிகரித்து வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு அறிக்கையாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக பல்வேறு மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் பெண்களுக்கான நிபந்தனையற்ற பணப் பரிமாற்ற திட்டங்கள், பணவீக்கம் மற்றும் மாறிவரும் குடும்பச் செலவினப் போக்குகளுக்கு ஏற்ப, போதுமானதா என்பதை அவ்வப்போது மறுஆய்வு செய்யப்பட வேண்டும். பெண் பயனாளிகளுக்கான மேம்படுத்தப்பட்ட பலன்கள் மற்றும் துணைச் சேவைகளுக்கு நிதியளிக்க, மேம்படுத்தப்பட்ட இலக்கு நிர்ணயத்தின் மூலம் செயல்திறன் மிக்க நிதி ஆதாயங்கள் பெறப்பட வேண்டும்.

வருமானப் பரிமாற்றத்துடன், விருப்பத்தின் பேரில் திறன் மேம்பாடு, டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் சுயஉதவிக் குழுக்களுடனான இணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பணத்துடன் கூடுதல் அம்சங்கள் கொண்ட கட்டமைப்புகளாக இத்திட்டங்களை மாற்றியமைத்துத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறது.

இதை எல்லாம் பார்க்கும் போது மகளிர் சுய உதவிக்குழுக்களைப்போல், மகளிர் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத்தொகையும் மிகப்பெரிய சமூக மாற்றத்திற்கு வித்திட்டு இருக்கிறது என்பதை உணர முடிகிறது. இந்த திட்டம் இருக்கும் வரை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பெயரை சொல்லும் என்பது உறுதி.