நாமக்கல், பள்ளிபாளையம் கிட்னி திருட்டு சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை..!!
நாமக்கல்: நாமக்கல், பள்ளிபாளையம் கிட்னி திருட்டு சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வறுமையில் வாடும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து, சட்டவிரோதமாக கிட்னியை கைப்பற்றி விற்பனை செய்துவந்த மோசடி அம்பலமானது.
இதில், இடைத்தரகர்களாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஸ்டான்லி மோகன் மற்றும் ஆனந்த் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சிறுநீரகத் திருட்டு வலையமைப்பின் பின்னணியில், திருச்சி மற்றும் பெரம்பலூரில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகள் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமங்களையும் தமிழ்நாடு அரசு ரத்து செய்தது.
இந்தச் சம்பவம் குறித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்து, சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்தக் குழுவினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில்தான், ஸ்டான்லி மோகன் மற்றும் ஆனந்த் ஆகியோரின் கைது நடவடிக்கை சாத்தியமானது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் பலரையும்,
மருத்துவமனை ஊழியர்களின் பங்களிப்பையும் புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வந்த நிலையில்,
கிட்னி விற்பனையில் ஈடுபட வைத்த புரோக்கர்கள் ஆனந்தன், மோகன் கிட்னி விற்பனைக்கு போலி ஆவணம் தயாரித்து கொடுத்த நபர் என மொத்தம் மூன்று பேரையும் சிறப்பு புலனாய்வு குழு 5 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக பள்ளி பாளையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.