நெல்லை சட்டசபை தொகுதியில் மண்ணின் மைந்தன் என அழைக்கப்படும் நயினார், தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். அதிமுக சார்பில் நான்கு முறையும்(2001, 2006, 2011, 2016) பாஜ சார்பில் ஒரு முறையும் (2021) நெல்லை தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதில் கடந்த 2021ல் பாஜ சார்பில் போட்டியிட்டு 92 ஆயிரத்து 282 வாக்குகள்( 46.70%) பெற்று வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து கடந்த ஆண்டு பாஜ மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் மீண்டும் நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயம் அவரால் பெயர் சொல்லும் அளவுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் 5 ஆண்டுகளில் நெல்லை தொகுதிக்கு செய்ய முடியவில்லை. இதுவரை 3 முறை எம்எல்ஏவாக இருந்த போதிலும் குறிப்பிட்டு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்பது அவருக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இம்முறை திமுக எப்படியாவது நயினாரை தோற்கடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
இதற்காக நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு மற்றும் நிர்வாகிகள் முழுமூச்சுடன் உழைத்து வருகின்றனர். தனக்கு பாதகமான முடிவுகள் இருப்பதால் நயினார் இம்முறை மாநில தலைவர் அந்தஸ்தை பயன்படுத்தி வேறு தொகுதிக்கு சென்றுவிடலாமா என்ற குழப்பத்தில் கடந்த 4 மாதங்களாகவே உள்ளார். மாவட்டம் விட்டு மாறி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
தே.ஜ.கூட்டணியில் அமமுக இணைந்த பின்னர், நாங்குநேரி தொகுதி மீதும் நயினாருக்கு ஒரு கண் உள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்டபோது, நயினாருக்கு இங்கு கணிசமான வாக்குகளும் கிடைத்தன. இதனால் நாங்குநேரியில் போட்டியிடலாமா? என நயினார் யோசித்து வருகிறார். இந்த சூழலில், தேர்தல் சென்டிமென்ட்டும் நயினாரை உலுக்கி எடுக்கிறது.
கடந்த கால தேர்தல் வரலாற்றை பார்க்கும்போது 2001, 2011, 2021 ஆகிய தேர்தல்களில் அவர் நெல்லை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 2006, 2016 தேர்தலில் தோல்வியடைந்தார். இந்த முறை 2026 தேர்தல் வருகிறது. 6, 6 என முடியும் ஆண்டுகளில் தோல்வியை தழுவியதால் 2026 தேர்தலும் தோல்வியில் முடியலாம் என அவர் அச்சப்படுகிறார். அது மட்டுமல்லாது நெல்லை தொகுதியின் வரலாற்றை புரட்டினால் ஒரு முறை வெற்றி பெற்றவர் அடுத்த முறை தோற்று விடுவார்.
கடந்த 5 தேர்தல்களில் போட்டியிட்ட நயினாருக்கும் இந்த பார்முலா பொருந்தும். எனவே வரும் சட்டசபை தேர்தலில் தொகுதி மாறலாமா அல்லது நெல்லையிலேயே போட்டியிடலாமா என்கிற குழப்பத்தில் தொடர்ந்து அவர் உள்ளார். அவர் தொகுதி மாற வாய்ப்பே இல்லை என்கின்றனர் ஆதரவாளர்கள். தொடர்ந்து தொண்டர்கள் மூலம் ஆய்வு நடத்தி வருவதால் நெல்லையா அல்லது தொகுதி சென்டிமென்டா என்கிற இடியாப்ப சிக்கலில் நயினார் சிக்கித் தவித்து வருகிறார்.

