Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அண்ணாமலை மாற்றத்தைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பட்டியலுடன் டெல்லி சென்று திரும்பிய நயினார் நாகேந்திரன்: தங்கள் ஆதரவாளர்களுக்கு பதவி வாங்க அழுத்தம் கொடுக்கும் தலைவர்கள்

சென்னை: அண்ணாமலை மாற்றத்தைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் நியமிப்பதற்கான பட்டியலுடன் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று திரும்பியுள்ளார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தலைவர்களும் தங்களது ஆதரவாளர்களுக்கு பதவிகளை வாங்க தலைமையிடம் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக பாஜ தேசிய தலைமை தமிழக தலைவர் அண்ணாமலையை மாற்றிவிட்டு, புதிய தலைவராக நயினார் நாகேந்திரனை நியமித்தனர். அவர் நியமிக்கப்படும்போது 16 மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். மேலும் 16 மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அதேபோல மாநில நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். தற்போது மாநில நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்த நயினார் நாகேந்திரன், அனைத்து தலைவர்களிடமும் அவர்களது ஆதரவாளர்களின் பட்டியலை கேட்டு வாங்கியுள்ளார்.குறிப்பாக அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோரிடம் அவர்களது ஆதரவாளர்களின் பட்டியலை கேட்டு வாங்கியுள்ளார். அவர்கள் அனைவருமே பெரிய பட்டியலை கொடுத்துள்ளனர். இந்தப் பட்டியலைப் பார்த்தவுடன் நயினார் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்தப் பட்டியலை வைத்து தமிழக பாஜ நிர்வாகி கேசவவிநாயகத்துடன் சேர்ந்து பட்டியலை இறுதி செய்த நயினார் மாநில நிர்வாகிகள் 20 பேரை நியமனம் செய்ய 60 பேர் கொண்ட பட்டியலுடன் டெல்லி விரைந்தார். அங்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். அவர்களிடம் பட்டியலைக் கொடுத்து விட்டு, நேற்று காலைசென்னை திரும்பினார்.

மாநில பொதுச் செயலாளர் பதவி வேண்டும் என்று வினோஜ் பி.செல்வம் கேட்டுள்ளார். ஆனால் அவர் ரவுடி மிளகாய்பொடி வெங்கடேசனுடன் சேர்ந்து சுற்றியதோடு, அவருக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசனை கட்சியை விட்டு தேசிய தலைமை நீக்கிவிட்டது. இதனால் வினோஜ் பி.செல்வத்துக்கு பதவி கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது. கராத்தே தியாகராஜன், மாநில செயலாளர் பதவி வேண்டும் என்று கேட்டுள்ளார். முன்னாள் எம்பி கே.பி.ராமலிங்கமும், தனக்கு மாநில பொறுப்பு வழங்காவிட்டால் கட்சியை விட்டு விலகிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அவருக்கும் பதவி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதைத் தவிர கே.டி.ராகவன் தனது ஆதரவாளர்களுக்கு பதவி வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார். கோவையில்நடந்த ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் வேலுமணி, அண்ணாமலைக்கு மட்டும் சோபா போடப்பட்டிருந்தது. மாநில தலைவர் நயினாருக்கு சாதாரண இருக்கை போடப்பட்டது. இதனால் நயினார் அதிர்ச்சி அடைந்தார். மாநில தலைவர் பதவியில் இருந்தாலும், தன்னை அண்ணாமலை செயல்பட விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்.

அண்ணாமலையின் பெயரை கட்சியின் எந்த நிகழ்ச்சிக்கும் போடக்கூடாது என்று நயினார் கூறியதாக தகவல்கள் வெளியானது. இதற்கு சமூக வலைதளங்களில் அண்ணாமலையின் பெயரை போடக்கூடாது என்று சொன்ன சார் யார் என்று கேட்டு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் அண்ணாமலையின் ஆதரவாளர்களின் எண்ணிக்கையை குறைத்து தனது ஆதரவாளர்களை அதிகமாக நியமிக்க நயினார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அண்ணாமலை டெல்லி தலைமை மூலம் தனது ஆதரவாளர்களுக்கு அதிக பொறுப்புகளை வாங்க தீவிரமாக முயன்று வருகிறார். இதனால் தற்போது முன்னாள் தலைவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள தங்களது ஆதரவு தலைவர்கள் மூலம் பதவிகளை பெற அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த வார இறுதியில் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாநில பாஜவில் மோதல் வெடிப்பது உறுதி என்கின்றனர் மாவட்ட நிர்வாகிகள். இதற்கிடையில் சென்னையில் நேற்று நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாநில நிர்வாகிகள் பட்டியலை தேசிய பாஜ தலைமை விரைவில் வெளியிடும்’’ என்றார்.