Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகளிர் உரிமைத் தொகையை தவெக அரசு முடக்க நினைக்கிறது: நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னை: மகளிர் உரிமை தொகையை தவெக அரசு மேலும் முடக்க நினைக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதியின்படி “ரூ.2500 மகளிர் மாத உரிமைத் தொகை”யை எப்பொழுது வழங்குவீர்கள் என்ற கேள்விக்கு, “தமிழகத்தின் நிதிநிலை தெரியுமா? ரெண்டு பிள்ளைங்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்ய முடியுமா? முந்தைய ஆட்சியில் 2 வருடம் கழித்துத் தானே கொடுத்தார்கள், எங்கள மட்டும் ஏன் இப்போவே கேக்குறீங்க?” என்றெல்லாம் அலட்சியத்துடன் பதிலளித்துள்ள வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு, முற்றிலும் பொறுப்பற்றது.

“மாற்றம் தருவோம்” என்று மன்றாடிக் கேட்ட தவெகவினை மக்கள் அரியணையில் அமர்த்தினார்கள். ஆனால், அமைச்சர் பேசுவது, நம்பி வாக்களித்த மகளிரை அவமதிப்பது போலானது. அதிலும் ஏதோ புதியதாக கண்டுபிடித்ததைப் போல “தமிழகம் கடனில் இருக்கிறது” என்று கூறி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவெக அரசு கிடப்பில் போட முயல்வது, ஏமாற்றுத் தனத்தின் உச்சம். தேர்தல் அறிக்கையை தயார் செய்கையில் தமிழகத்தின் நிதிநிலை என்னவென்பது தவெகவிற்கு தெரியாதா? ஆண்டுதோறும் வெளியிடப்படும் நிதிநிலை அறிக்கையைக் கூட வாசிக்காமல் தான், “ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்று விஜய் மக்களிடம் கெஞ்சிக் கேட்டாரா? எனவே, இதுபோன்ற சாக்கு போக்குகள் எல்லாம் இனி இங்கே எடுபடாது. கொடுத்த வாக்கின்படி ரூ.2500 மகளிர் மாத உரிமைத் தொகையை உடனடியாக வழங்க முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

* மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளைப்பற்றி ஆர்டிஐயில் பதிலளிக்காதது ஏன்?

நயினார் நாகேந்திரனின் மற்றொரு பதிவில், ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டோம்” என தம்பட்டம் அடித்துக் கொள்கிறது விஜய் தலைமையிலான அரசு. ஆனால், மூடப்பட்ட கடைகளின் முகவரிகள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இதுவரை வெளியிடப்படவில்லை. “மூடப்பட்டதாக” கூறப்படும் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கும், ஆர்டிஐயில் இடம் பதிலில்லை. தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு புதிய டாஸ்மாக் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கான பதிலையும் மென்று முழுங்குகிறது தற்போதைய அரசு.

தவெக ஆட்சியில் இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் முழு விவரங்களையும், முகவரிகளையும், அங்கு பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணிகள் குறித்தும் வெள்ளையறிக்கை வெளியிட ஆளும் அரசு எதற்கு தயங்குகிறது?. உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது ஆட்சிக்கு வந்த புதிதில் எதையாவது செய்து மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டுமென தவெக அரசே இந்த புரளியைக் கிளப்பியதா? உள்ளிட்ட மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் உடனடியாக பதிலளிக்க வேண்டும்! வெட்டி வசனமும், வீண் விளம்பரமும் இனி கதைக்காகாது” என்று கூறப்பட்டுள்ளது.