Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: டிடிவி தினகரன், ஓ.பன்னீரை எப்படி சேர்ப்பது என்பது குறித்து ஆலோசனை

சென்னை: டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியை சென்னையில் அவரது இல்லத்தில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காலை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது டிடிவி தினகரன், ஓ.பன்னீரை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.

தற்போதைய நிலையில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. அதாவது, திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக பாஜக அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கின்றன. திமுக அணியில் கடந்த முறை சட்டப்பேரவை தேர்தலை சந்தித்த அதே அணிகள் இடம் பெற்றுள்ளன. இன்னும் சில கட்சிகள் வர உள்ளன. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாஜக, பாமக(அன்புமணி) ஆகிய கட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இந்தசூழலில், கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் பாமகவுக்கு எத்தனை சீட்டுகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அந்தந்த கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ளது. கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஆனால், இந்த முறை 50 தொகுதிகள் கேட்பது மட்டும் அல்லாமல், ஆட்சியிலும் பாஜக பங்கு கேட்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் உள்துறை அமித்ஷாவை சந்தித்த போது எடப்பாடியிடம் இந்த விசயத்தை கூறினார். இதை கேட்டு எடப்பாடி அதிர்ந்து போனார். அது மட்டுமல்லாமல் ஆட்சியில் பங்கு என்பதை ஏற்கவே முடியாது. இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசித்து அதன் பின்னர் அறிவிப்பதாக கூறிவிட்டார். இது தொடர்பாக எடப்பாடி என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடந்தது. இந்த சந்திப்பின் போது அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்து இரண்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது பாஜக தரப்பில் 50 தொகுதிகளும், அமைச்சரவையில் பங்கீடு தொடர்பாகவும் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், 30 தொகுதிகள் வரை ஒதுக்க இபிஎஸ் ஒப்புக் கொண்டதாகவும், அதிமுக 170 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு பாஜக தரப்பில் ஒத்துக்கொள்ளவில்லை. மேலும் ஆட்சியில் பங்கு தொடர்பாக எடப்பாடி எதுவும் பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நயினார் நாகேந்திரனுக்கு எதிரானவர்கள்தான் டிடிவி தினகரனும், ஓ.பன்னீரும். இவர்கள் இருவர்தான், நயினாரை கட்சியில் இருந்து காலி செய்தவர்கள். தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவர்கள்தான் எதிரி. இதனால் இருவரும் ஒன்று சேர்ந்து தற்போது டிடிவி தினகரன், ஓ.பன்னீர் ஆகியோரை கூட்டணியில் இருந்து ஒன்று சேர்ந்து விரட்டி விட்டனர். தற்போது அவர்கள் இருவரையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா உத்தரவிட்டுள்ளதோடு, எடப்பாடியை டெல்லிக்கு அழைத்தும் உத்தரவிட்டார். இதனால் வேறு வழி இல்லாமல் இருவரையும் பாஜக கூட்டணியில் சேர்க்க சம்மதித்துள்ளனர். அவர்களை எப்படி கூட்டணியில் சேர்ப்பது என்பது குறித்து இருவரும் தற்போது ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

எடப்பாடியுடன் சந்திப்புக்கு பின்னர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், “பிரதமர் மோடி இந்த மாதம் இறுதியில் தமிழகம் வருகிறார். சென்னை அல்லது மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறும். தேதி இன்னும் முடிவாகவில்லை. பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் நடந்த பேச்சு வார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது. எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பது விரைவில் அறிவிக்கப்படும். பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” என்றார். மேலும், அமைச்சரவையில் பங்கு கேட்கப்பட்டதா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதிலளிக்கவில்லை.