Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகையில் இருந்து இலங்கைக்கு காலாவதி பாஸ்போர்ட்டுடன் கப்பலில் சென்ற ஜப்பானியர்: உளவுத்துறை, சுங்கத்துறை விசாரணை

நாகப்பட்டினம்: நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பலில் காலாவதியான பாஸ்போர்ட்டுடன் ஜப்பானியர் சென்றார். அவரிடம் உளவுத்துறை, சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை பன்னாட்டு துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் (16ம் தேதி) குடியுரிமை சோதனை உள்ளிட்ட சோதனைகள் முடித்து 85 பயணிகளுடன் காங்கேசன்துறைக்கு கப்பல் புறப்பட்டுச் சென்றது. காங்கேசன்துறை சென்றதும் கப்பலில் வந்த பயணிகளை இலங்கை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காலாவதியான பாஸ்போர்ட்டில் இந்தியாவைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரும், ஜப்பான் நாட்டை சேர்ந்த டைசோ என்பவரும் வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அவர்களிடம் விசாரணை நடத்திய இலங்கை அதிகாரிகள் 2 பேரையும் நேற்று முன்தினம் மாலை புறப்பட்ட கப்பலிலேயே இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினர்.

நாகை துறைமுகத்திற்கு வந்த 2 பேரிடமும் உளவுத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் டைசோ இந்தியாவில் தொழில் நிறுவனம் நடத்தி வந்த நிலையில் அதனால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாமல் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்காததால் விமானத்தில் செல்ல முடியாமல், நாகையிலிருந்து கப்பலில் இலங்கை சென்று, அங்கிருந்து ஜப்பான் செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. நாகையிலிருந்து இலங்கை செல்லும் சாமானிய சுற்றுலா பயணிகளை சோதனை என்ற பெயரில் பல மணி நேரம் துன்புறுத்தும் குடியுரிமை துறை அதிகாரிகள், வெளிநாட்டவரை அலட்சியமாக அனுப்பி வைத்த விவகாரம் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களை அனுமதித்தார்களா? என்ற கோணத்திலும் ஒன்றிய உளவுத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.