Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சென்னை அருகே நடுபழனியில் உள்ள பழமை வாய்ந்த முருகன் கோயிலில் பல கோடி மரகத சிலை கொள்ளை: பொதுமக்கள் மறியல்; போலீசார் சமரசம்

செய்யூர்: சென்னை அருகே உள்ள மதுராந்தகம் நடுபழனி முருகன் கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்பு மரகத முருகன் சிலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செய்யூர் தாலுகா, அச்சிறுப்பாக்கம் பெருங்கரணைகிராமத்தில் நடுபழனி பகுதியில் மலைக்குன்றின் மீது அருள்மிகு ஸ்ரீமரகதபாலதண்டாயுதபாணி முருகன் கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் சிலை சுமார் இரண்டேகால் அடி உயரத்தில் முழுமையான மரகத கற்களால் ஆனது. இது பல கோடி ரூபாய் மதிப்பு கொண்டது எனதெரிகிறது. இதனால் மரகத சிலையை பாதுகாக்க மலையடிவாரம் முதல் கோயிலின் மூலஸ்தானம் வரையில் 16க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளது. மரகத கற்களாலான மூலவர் சிலை உள்ள கருவறையை சுற்றிலும் 3 இரும்பு கதவுகள் அமைத்து உள்ளனர்.

இதில் ஒரு இரும்பு கதவை யாரேனும் உடைக்க முயற்சித்தாலோ தொட்டாலோ, கோயிலுக்குள் அபாய மணி ஒலித்துவிடும். அத்துடன் 12 முக்கிய நிர்வாகிகளின் செல்போன்களுக்கும் தகவல் செல்லும் வகையில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தை பெருங்கருணை கிராம மக்களுடன் சேர்ந்து முத்துசாமி என்பவர் கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள ஸ்ரீகணபதி சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகளின் கருணையால், நடுபழனி மலைக்குன்றின்மீது அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி முருகன் கோயிலில் இருந்த கற்சிலை அகற்றப்பட்டு, மூலவர் சன்னதியில் கடந்த 2014ம் ஆண்டு சுமார் இரண்டேகால் அடிஉயரத்தில் பல கோடி மதிப்பில் மரகத கற்களால் ஆன முருகன் சிலை அமைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

நாடு முழுவதும் மரகத கற்களால் ஆன சிறிய அளவில் சிவன் சிலைகளை வைத்துவழிபட்டு வருகின்றனர். ஆனால் நடுபழனி பகுதியில் சுமார் இரண்டேகால் அடி உயரத்தில் மரகத கற்களால் ஆன முருகன் சிலையை நிர்மாணித்து, அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.இந்தநிலையில், நேற்றிரவு அர்ச்சகர்கள் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை பூஜைகள் மேற்கொள்வதற்காக நடை கதவை அர்ச்சகர்கள் திறந்தபோது மூலவர் சன்னதியின் கருவறை முன்பிருந்த 3 இரும்பு கதவுகளும் திறக்கப்பட்டிருந்தது. அதற்குள் இருந்த பல கோடி மதிப்பிலான மரகத மூலவர் முருகன் சிலை கொள்ளையடிக்கப்பட்ட இருப்பதை பார்த்து அர்ச்சகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் பரவியதும் கோயில் முன் பக்தர்களும் கிராம மக்களும் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் ஆகியோர் விரைந்துவந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சித்தாமூர் போலீசார் விரைந்துவந்து விசாரித்தனர். மலையடிவாரத்தில் இருந்து கோயிலின் கருவறை முன்பு வரை உள்ள அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 மர்ம நபர்கள் முகத்தை மறைத்தபடி மலைமீது ஏறிச்சென்று, கோயிலின் முன்புற கதவு பூட்டை உடைத்து பின்னர் கோயிலுக்குள் சென்று கருவறைக்கு முன்பிருந்த 3 இரும்பு கதவுகளின் அலார எச்சரிக்கை மணியை துண்டித்துவிட்டு கதவுகளை உடைத்து கருவறைக்குள் புகுந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான மரகத கற்களால் ஆன முருகன் சிலையை கொள்ளையடித்து செல்வது தெளிவாக பதிவாகி உள்ளது.

இதன் அடிப்படையில், சித்தாமூர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சிலை கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு காஞ்சிபுரம் டிஐஜி ஷஷாங் சாய், மாவட்ட எஸ்பி அய்மன் ஜமால் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் நேரில் வந்து கோயில் நிர்வாகிகள் உள்பட அனைத்து தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பல கோடி மதிப்பிலான மரகத கற்களால் ஆன முருகன் சிலை திருடுபோனது பற்றி அறிந்ததும் பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து சாலைமறியல் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்துநிறுத்தி சமாதானப்படுத்தினர்.