சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாளையொட்டி பாஜக மாநில செயலாளர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இது குறித்து பாஜக மாநில செயலாளர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நடிப்பின் மூலம் எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, தலைமுறைகள் போற்றும் கலைச்சாதனைகளைப் படைத்த மாபெரும் கலைஞர் நடிகர் திலகம், செவாலியே திரு. சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள் இன்று!
தமிழ் மொழியின் அழகையும், உணர்வுகளின் ஆழத்தையும் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் உலகறியச் செய்தவர். அவரது கம்பீரமான குரல், வசன உச்சரிப்பு, முகபாவனை மற்றும் நடிப்பின் ஆழம் ஆகியவை இன்றளவும் கலைத்துறையினருக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. இந்திய திரையுலகின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய செவாலியே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் புகழும், கலைப் பங்களிப்பும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்த் திரையுலகம் கண்ட மகத்தான கலைஞர்களில் முதன்மையானவரும், தமிழ் மொழியின் அழகையும் ஆழத்தையும் தனது கம்பீரமான குரலால் கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவருமான நடிகர் திலகம், செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
வீரம், பாசம், கோபம், சோகம், காதல், தியாகம், கம்பீரம் என எந்தவொரு காட்சியாக இருந்தாலும், தனது உடல்மொழியாலும் உணர்ச்சிமிகுந்த உச்சரிப்பாலும் நடிப்புக்கே புதிய இலக்கணம் வகுத்த நடிப்புச் சக்கரவர்த்தியின் கலைத்திறனைச் சிறப்பிக்கும் வகையில், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கி கௌரவிக்க வேண்டும் என மத்திய அரசை இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன் என்று எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
