சென்னை: பதஞ்சலி பல்கலைக்கழகத்துக்கு ஏ பிளஸ் கிரேடு அங்கீகாரத்தை தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்ஏஏசி) வழங்கியுள்ளது. இதுகுறித்து பதஞ்சலி பல்கலைக்கழக வேந்தர் பாபா ராம்தேவ் கூறியதாவது: திறமையான இளைஞர்களை வளர்ப்பதே பதஞ்சலி பல்கலையை நிறுவுவதன் முக்கிய நோக்கம். இது இந்தியாவின் முழுமையான வளர்ச்சிக்கு பங்களிக்கும். இளைஞர்கள் யோகக் கொள்கைகளில் வேரூன்றி, அனைத்து பரிமாணங்களிலும் அதிகாரம் பெற்றவர்களாக, வலுவான தன்மை மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் போது மட்டுமே இதனை உணர முடியும். இன்றைய கல்வியானது வேலை சார்ந்ததாக மாறிவருகிறது. பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் நோக்கம் இளைஞர்களிடையே வாழ்க்கை மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும் விரிவடையும்.
தலைமை பண்புகளை வளர்க்கும். பண்டைய வேத அறிவை நவீன அறிவியலுடன் ஒருங்கிணைப்பதே பல்கலைக்கழகத்தின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார். பல்கலைக்கழக துணைவேந்தர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறுகையில், ‘‘நாட்டின் யோகா பல்கலைக்கழகங்களில் எங்கள் பல்கலைக்கழகம் சிறந்ததாக உருவெடுத்துள்ளது என்றால், அதற்கு ராம்தேவ் தான் காரணம்’’ என்றார். பாரதிய சிக்ஷா வாரிய செயல் தலைவர் என்.பி.சிங் மற்றும் கேந்திரிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீனிவாஸ் வர்கேடி ஆகியோரும் பதஞ்சலி பல்கலைக்கழகத்தை பாராட்டினர்.


