Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டைரக்டராக வேண்டும் என்பதே எனது கனவு - ஜேசன் ஆர்யா!!

குழந்தைகளின் தேவைகளையும், பிரகாசமான எதிர்காலத்தையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிறப்பான வாய்ப்புகள் அவர்களுக்கு அமையும். இன்றைய குழந்தைகளின் தலையாய பிரச்சினை மொபைல் போனை அதிகம் பயன் படுத்துவதுதான். மொபைல் பயன்பாட்டினை குறைக்க அல்லது கட்டுப்படுத்த சிறு வயது முதலே அவர்களை எங்கேஜ்டாக வைத்துக்கொள்ளலாம். ஏதேனும் சிறுசிறு வேலைகளை பழக்கலாம்.

உதாரணமாக அவர்கள் வேலைகளை அவர்களே செய்ய பழக்கலாம். அவர்களை எங்கேஜ்டாக வைத்திருந்தாலே மொபைல் பயன்படுத்துவது தானாகவே குறைந்து விடும். அதிகம் மொபைல் பயன் படுத்தினால் அவர்களின் நினைவாற்றல் குறையும் வாய்ப்புகள் இருக்கிறது. ஏதேனும் ஒரு புதிய விஷயங்களை அவர்களை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கலாம் என்கிற சூழலில் தனது மகனை பன்முக திறமையாளராக உருவாக்கி வருகிறார் சைதாப்பேட்டையை சேர்ந்த அதிபன். அவரது பதினொன்றே வயதான மகன் ஜேசன் ஆர்யா சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர். இவரது பன்முகத்திறமைகள் விளையாட்டு மற்றும் நடன ஆர்வம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

தனித்திறமைகள் குறித்து

ஜேசன் ஆர்யா சிறுவயதிலிருந்தே ஆர்வமுடன் பலவற்றை கற்றுக்கொள்வார். அதீத நினைவாற்றல் கொண்டவர் ஜேசன் ஆர்யா பல நாடுகளின் பெயர்களையும், அதன் தேசியக்கொடிகளையும் சரளமாக சொல்லி அசத்துகிறார். கொடியை காட்டினால் நாடுகளின் பெயர்களை சொல்லிவிடுவார். நாடுகளின் பெயரை சொன்னாலும் கொடியினை கண்டறிந்து விடுவார். இவர் தனியாக யூடியூப் சேனல் வைத்து அதிலும் தன் திறமையை காட்டி வருகிறார். இவரது சேனல் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி குறித்து

கிரிக்கெட் விளையாட்டு மீது தீராத ஆர்வம் உடையவர். அதனை தனியாக பயிற்சி செய்து கற்றுக் கொள்கிறார். ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடுவது விளையாடுவது இவரது ஹாபியும் கூட.

நடன ஆர்வம் குறித்து

இவருக்கு எல்லா நடனங்களுமே பிடிக்கும். வெஸ்டன் டான்ஸை கிளாசிகல் நடனத்துடன் இணைந்து ஒரு புதிய வகையினை உருவாக்கி ஆடிவிடுவார் . நடனம் ஆடுவது இவருக்கு பிடித்தமான ஒன்று. இவரது யூட்யூப் சேனல்களிலும் நடனம் ஆடி காணொளி வெளியிடுவதோடு அதற்கு தேவையான விஷயங்களை அவரே தயாரித்துக்கொள்வார்.

எழுத்தார்வம் குறித்து

இவருக்கு எழுதுவதிலும் நிறைய ஆர்வம் இருக்கிறது. தனது ஓய்வு நேரத்தில் நிறைய ஸ்கிரிப்ட்களை உருவாக்கி வருகிறார். இந்த சிறுவயதிலேயே ஸ்கிரிப்ட் ரைட்டிங் மிக சிறப்பாகவே செய்து வருகிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நிறைய புத்தகங்களை படிப்பது தனது எழுதும் ஆர்வத்திற்கு பெரும் உதவிகரமாக இருக்கிறது என்கிறார். வருங்காலத்தில் சினிமாத் துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்கிற கனவு இருக்கிறது. நல்ல ஸ்கிரிப்ட் ரைட்டராக வரவேண்டும். மேலும் டைரக்டராக ஆகவேண்டும் என்பதும் இவரது பெருங் கனவாக இருக்கிறது. அதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்தால் நல்ல டைரக்டராக வரும் வாய்ப்புகள் மிக பிரகாசமாக இருக்கிறது. இவரது புத்தக அலமாரியில் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வைத்திருக்கிறார் இந்த சிறுவர். புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக்கி வைத்துள்ளார். அனைவரும் தினந்தோறும் புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். புத்தகங்களை அறிவின் திறவுகோல் என்பது இவருக்கு தாரக மந்திரமாக இருக்கிறது.

இப்படியான பன்முகத்தன்மை கொண்டு பல் துறையில் கவனம் செலுத்தினாலும் கல்வியில் சிறப்பான நிலையில் தொடர்ந்து வருகிறார். நல்லமதிப்பெண்களை பெற்று மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்துடன் படித்து வருகிறார். நிறைய அறிவு சார்ந்த புத்தகங்களை படிப்பதும் இவரது வழக்கம். பள்ளியில் குவிஸ் போட்டிகளில் பங்கு பெற்று நிறைய சான்றிதழ்களை வாங்கியுள்ளார்.

ஜேசன் ஆர்யாவின் தந்தை அதிபன் பிஸினஸ் செய்து வருகிறார். இவரது அன்னை சந்திரா தேவி கல்லூரி விரிவுரையாளராக இருக்கிறார். இவர்கள் இருவரும் தங்களது மகன் ஜேசன் ஆர்யாவின் பல்கலை திறனுக்கு தேவையான ஊக்கத்தினையும் ஆக்கத்தினையும் அளித்து வருகிறார்கள். ஜேசன் தனது தனித்திறமையாலும் , கலை மற்றும் விளையாட்டு ஆர்வத்தினாலும் தனது பெற்றோருக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் நிறைய பெருமைகளை தேடித்தர விரும்புகிறார். அதை நோக்கியே தனது முயற்சிகளையும் பயணத்தையும் தொடர்ந்து வருகிறார். அவரது கனவுகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்தி விடைபெற்றோம்.

- தனுஜா ஜெயராமன்.