முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனக்கூடு ஊர்வலம் இன்று அதிகாலை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் ஹக்கீம் சேக்தாவூது ஆண்டவர் தர்கா உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த தர்காவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் தினமும் வந்து செல்கின்றனர். அனைத்து சமுதாயத்தினரும் வந்து செல்லும் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக தர்கா உள்ளது. இந்த தர்காவில் பெரிய கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும்.
இந்தாண்டு 724வது பெரிய கந்தூரி விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து தினம்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நடந்தது. இரவு 10.30 மணிக்கு டிரஸ்டிகள் இல்லத்தில் இருந்து சந்தனங்கள் நிரப்பிய குடங்கள் தர்காவுக்கு எடுத்து செல்லப்பட்டது. நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதிகாலை 2.30 மணிக்கு தர்கா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாகிப் தலைமையில் டிரஸ்டிகள் புனித சந்தன குடங்களை தலையில் சுமந்து வந்து கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் வைத்தனர். பின்னர் வாணவேடிக்கை, மேள தாளங்களுடன் சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கியது.
சேது ரோட்டில் உள்ள அடக்கஸ்தலம் சென்று பின்னர் ஆற்றங்கரை பாவா தர்கா, அம்மா தர்கா பகுதிக்கு சென்று மீண்டும் தர்காவை மூன்று முறை சுற்றி சந்தனக்கூடு ஊர்வலம் வந்தடைந்தது. இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பூக்களை சந்தனக்கூடு மீது வீசி வழிபாடு நடத்தினர். அதிகாலை 5 மணிக்கு சந்தனக்கூட்டில் இருந்து சந்தன குடங்கள் தர்காவுக்கு எடுத்து வரப்பட்டு ஹக்கீம் ஷேக்தாவூது ஆண்டவர் சமாதிக்கு புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இன்று மாலை 4 மணிக்கு உள்ளூர் மக்களுக்காக நடத்தப்படும் அந்திக்கூடு ஊர்வலம் நடக்கிறது. வரும் 5ம் தேதி கொடியிறக்கத்துடன் கந்தூரி விழா நிறைவு பெறுகிறது.
